
ஹலோ வாசகர்களே..!
வருகிற 1-ம் தேதியன்று மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. பாரதிய ஜனதா ஆட்சியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் கடைசியாகத் தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான பட்ஜெட் இது. அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலை முன்னிட்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட விருப்பதால், இந்த பட்ஜெட் எல்லாத் தரப்பினரையும் கவரக்கூடிய விதத்தில் இருக்கும் எனப் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

ஆனாலும், இந்தக் கடைசி பட்ஜெட் மூலம் நிதி அமைச்சர் சில விஷயங் களைக் கட்டாயம் செய்தே ஆகவேண்டும். அந்த விஷயங்கள் என்னென்ன?
பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெரிய அளவில் பெருக்குவதில், இந்த அரசின் செயல்பாடுகள் கடந்த நான்கு ஆண்டுகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பாரத் மாலா திட்டம்கூட, எப்போதோ அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தால், அதன் பயன் இப்போது கிடைத்து, பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்வதாக மாறியிருக்கும். இந்த பட்ஜெட்டிலாவது உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கி, புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன், நின்றுபோன பழைய திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.
வேலைவாய்ப்பைப் பெருக்குவதிலும் இந்த அரசின் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆண்டொன்றுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய நிலையில், மாதமொன்றுக்கு சில லட்சம் வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கினால், இளைஞர் களின் சக்தி வீணாகத்தான் போகும். எனவே, பெரும் எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தேவையான நிதியை ஒதுக்கித் தரும் அறிவிப்பினை இந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் வெளியிட வேண்டும். விவசாய வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களுக்கு முன்னுரிமை தந்து, அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தனிமனிதர்களுக்கான வருமான வரிச்சலுகை வரம்பை ரூ.2.50 லட்சத்தி லிருந்து ரூ.3 லட்சத்துக்காவது உயர்த்தினால், நடுத்தர மக்கள் இன்னும் சில ஆயிரங்களைச் செலவழிப்பார்கள். தவிர, 80சி-யில் தற்போதிருக்கும் ரூ.1.50 லட்சம் என்கிற வரம்பினை ரூ.50 ஆயிரம் உயர்த்தி, ரூ.2 லட்சமாக ஆக்குவதன் மூலம் எதிர்காலத்துக்கான முதலீடு அதிகரிக்கும். இதனால் அரசின் வருமானம் கொஞ்சம் குறைந்தாலும், பொருளாதாரம் வளரும்.
நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கிற அதே சமயம், மக்களை மகிழ்விக்கும் நடவடிக்கைகளை இந்த பட்ஜெட் மூலம் நிதி அமைச்சர் அறிவித்தால் மட்டுமே இந்த ஆட்சியை அடுத்தமுறையும் கொண்டுவர வேண்டும் என மக்கள் விரும்புவார்கள்!
- ஆசிரியர்