நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பட்ஜெட் 2018: பல நிறைகளும், சில குறைகளும்!

பட்ஜெட் 2018: பல நிறைகளும், சில குறைகளும்!
பிரீமியம் ஸ்டோரி
News
பட்ஜெட் 2018: பல நிறைகளும், சில குறைகளும்!

ஹலோ வாசகர்களே..!

2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட், பெரிய அளவில் பரபரப்பில்லாமல் வந்திருக்கிறது. விவசாயத் துறை வளர்ச்சிக்கும், கிராமப்புற முன்னேற்றத்துக்கும் பல்வேறு நடவடிக்கைகளை இந்த பட்ஜெட் மூலம் எடுத்திருப்பதை காரணமாக வைத்து , அடுத்த ஆண்டு நடக்கப்போகும் பொதுத் தேர்தலைத் தைரியமாக சந்திக்கலாம் என்ற எண்ணத்தில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருப்பதாகச்  சிலர் விமர்சனம் செய்கிறார்கள். 

பட்ஜெட் 2018: பல நிறைகளும், சில குறைகளும்!



இந்த விமர்சனத்தில் கொஞ்சம் நியாயம் இருந்தாலும், இந்த ஒரு காரணத்துக்காகவே இந்த பட்ஜெட்டை மோசம் என்று சொல்லி ஒதுக்கிவிட முடியாது. அதிலும் பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு விவசாயிகளின் வருமானமும், ஜி.எஸ்.டிக்குப் பிறகு சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வருமானமும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன. இந்தப் பாதிப்பு களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக இந்த பட்ஜெட்டில் அவர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது. தவிர, விவசாயத்துக்கும், சிறு தொழிலுக்கும் அளிக்கப்படும் சலுகைகள் அடித்தட்டு மக்களை முன்னேற்றி, பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கவே செய்யும்.

ஆனாலும், விவசாய வளர்ச்சிக்காக இவ்வளவு மெனக்கெட்ட நிதி அமைச்சர், தொழில் துறை வளர்ச்சிக்காக சில நல்ல அறிவிப்புகளையாவது வெளியிட்டிருக்கலாமே! அதிலும் குறிப்பாக, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தில் பாராட்டிச் சொல்கிற அளவுக்கு எந்த விஷயமும் இல்லையே!

பங்குச் சந்தை முதலீட்டுக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி கொண்டு வந்திருப்பது நல்ல விஷயமே. தொழில் செய்பவர்கள் அதன்மூலம் கிடைக்கும் லாபத்துக்கு 30% வரி கட்டிக்கொண்டிருக்க, பங்குச் சந்தை மூலம் பெரும் லாபம் காணுபவர்கள் 10% வரி கட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. இதனால் அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். 

இந்த வரியினால் சிறு முதலீட்டாளர்களுக்குப் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும், பங்குச் சந்தையை நோக்கியும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை நோக்கியும் பெருவாரியான மக்கள் வேகமாக வந்துகொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், இப்படியொரு வரியைக் கொண்டுவந்திருப்பது சாதாரண முதலீட்டாளரைக் கொஞ்சம் யோசிக்க வைப்பதாகவே இருக்கிறது. பங்குச் சந்தை முதலீடு குறித்து மக்களுக்கு இன்னும் கொஞ்சம் தெரிந்தபின் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நாட்டின் பொருளாதாரத்தைத் தொடர்ந்து உயர்த்த, தன்னாலான முயற்சிகளைக் கடந்த நான்கு ஆண்டுகளாகச் சிறப்பாகச் செய்துவிட்டார் நிதி அமைச்சர். கடைசியாகத் தாக்கல் செய்திருக்கும் இந்த பட்ஜெட்டில் இருக்கும் விஷயங்களைச் சரியாக நடைமுறைப்படுத்துவதன் மூலம், இந்த அரசாங்கம் மக்களிடம் நல்ல பெயரை வாங்க முயற்சி செய்யட்டும். மக்களின் வெறுப்புக்கு ஆளானால், ஆட்சியை இழக்கவேண்டியிருக்கும் என்பது ஆளுங்கட்சியினருக்குத் தெரியாத விஷயமில்லையே!

- ஆசிரியர்