நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வங்கிகளைக் காப்பாற்றும் நடவடிக்கையை எடுங்கள்!

வங்கிகளைக் காப்பாற்றும் நடவடிக்கையை எடுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
வங்கிகளைக் காப்பாற்றும் நடவடிக்கையை எடுங்கள்!

ஹலோ வாசகர்களே..!

ஞ்சாப் நேஷனல் வங்கியிடமிருந்து ரூ.11,400 கோடி கடன் பெறுவதற்கான உத்தரவாதத்தைப் பெறும் ‘புரிதல் கடிதத்தை’ வாங்க தொழிலதிபர் நீரவ் மோடி செய்த முறைகேடானது வெளிச்சத்துக்கு வந்து, வங்கித் துறை மீதிருக்கும் நம்பிக்கையையே ஆட்டம் காண வைத்திருக்கிறது.

வங்கிகளைக் காப்பாற்றும் நடவடிக்கையை எடுங்கள்!



ஏறக்குறைய ரூ.10 லட்சம் கோடியைத் தொடவிருக்கும் நமது வாராக் கடன், வங்கித் துறையை மேற்கொண்டு வளரவிடாமல் பிடித்து இழுத்துக் கொண்டிருக்க, விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற சில தொழிலதிபர் களின் செயல்பாடுகள் வங்கித் துறையின் அடிப்படையையே மேலும் ஆட்டிப் பார்த்திருக்கிறது.

வங்கிகள் யாருக்கு, எவ்வளவு, எதன் அடிப்படையில் கடன் வழங்க வேண்டும் என்பதற்கான கறாரான விதிமுறைகள் இருந்தாலும், அவை முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க ரிசர்வ் வங்கி என்னும் பாரம்பர்யமிக்க அமைப்பு நம் நாட்டில் இருந்தபோதிலும், இதுமாதிரியான முறைகேடுகள் நடப்பது பெரும் ஆச்சர்யத்தையே அளிக்கிறது. என்னதான் விதிமுறைகள் தெளிவாக இருந்தாலும், அதிலும் சிலபல ஓட்டைகள் இருப்பதையே இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கும் இந்த முறைகேடு நமக்கு உணர்த்துகிறது. இதுமாதிரியான ஓட்டைகள் முழுவதுமாக அடைக்கப்படும் வரை முறைகேடுகளும், மோசடிகளும் நடக்கத்தான் செய்யும்.

தனியார் துறை வங்கி அதிகாரிகளுடன் ஒப்பிடும்போது பொதுத் துறை வங்கி அதிகாரிகளுக்குத் தரப்படும் சம்பளம் மிகக் குறைவாக இருப்பது இது மாதிரியான தவறு நடக்கக் காரணம் என்கிறார் சிலர். இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிக சம்பளம் கிடைத்தால்தான் தவறு செய்யாமல் இருப்போம் என்கிற வாதத்தை ஏற்றுக்கொண்டால், பிறகு எல்லோருமே அதிக சம்பளம் வேண்டும்; இல்லாவிட்டால் தவறு செய்வோம் என்று சொல்லத் தொடங்கிவிடுவார்கள். இது தவறான உதாரணமாகிவிடும்.

பொதுத் துறை வங்கிகளில் இதுபோன்ற முறைகேடுகளும், மோசடிகளும் நடக்காமல் இருக்க வேண்டுமெனில், வங்கியின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்பட வேண்டும். தனியார் வங்கிகளில் இந்தக் கண்காணிப்பு அதிகமாக இருப்பதால் மட்டுமே, இது மாதிரியான முறைகேடுகள் நடப்பது அரிதான விஷயமாக இருக்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் இப்போது வந்திருக்கும் பாதிப்பை மிகச் சரியான எச்சரிக்கையாக மத்திய அரசு எடுத்துக்கொள்ள வேண்டும். வங்கிகளில் இருப்பது அரசின் பணம்; மக்கள் பணம். இதற்கு எந்தப் பங்கமும் வராதபடிக்கு நடைமுறைகளை மாற்றியமைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசாங்கம் உடனடியாக இறங்க வேண்டும். அப்போதுதான் பொதுத் துறை வங்கிகளை இனியாவது காப்பாற்ற முடியும்.

-ஆசிரியர்