
ஹலோ வாசகர்களே..!
பொதுத் துறை வங்கிகள் கடன் தரும் விஷயத்தில், இனி எந்தத் தவறும் நடக்கக் கூடாது என்பதற்காக முக்கியமானதொரு சட்ட மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், நிதி தொடர்பான கண்காணிப்பு ஆணையம் (NFRA) ஒன்றை உருவாக்கவும் முடிவு செய்திருக்கிறது.
மத்திய அரசின் இந்த இரண்டு முடிவுகளையும் நிச்சயம் வரவேற்கலாம். பொருளாதாரக் குற்றம் செய்துவிட்டு, வெளிநாட்டுக்குத் தப்பியோடிய வர்களைத் தண்டிக்கும் இந்த மசோதாவானது, குற்றம் செய்தவர்களின் சொத்துகளை முடக்குவதில் தொடங்கி, அவர்கள்மீது அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க வழி செய்கிறது. அதேபோல, நிதி தொடர்பான விஷயங்கள் சரியாக நடக்கின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டிய அமைப்புகளே தவறு செய்வதால், அந்த அமைப்புகளைக் கண்காணிக்க இன்னொரு அமைப்பு அவசியம் தேவையே.

ஆனால், இதுமாதிரி புதுப்புது அமைப்புகளை உருவாக்குவதினால் மட்டுமே பிரச்னைகள் நிச்சயம் தீர்ந்துவிடாது. வங்கிகள் யாருக்குக் கடன் தரவேண்டும், எவ்வளவு தரவேண்டும், எதன் அடிப்படையில் தரவேண்டும் என்பதற்கு மத்திய அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு கறார் விதிமுறைகளை வகுத்துள்ளன. இவற்றில் இருக்கும் ‘ஓட்டை’களைக் கண்டறிந்து, அவற்றை அடைக்க வேண்டியது வங்கிகளின் வேலை.
வங்கிகள் இந்த வேலைகளைச் செய்வதற்குப் பதிலாக, பணத்துக்கு ஆசைப்பட்டு, வங்கியின் சொத்துகளைக் கொள்ளை அடித்துக் கொண்டுபோக அனுமதித்துவிடுகிறார்கள். இப்படிக் கொள்ளை அடிப்பவர்களுக்கு அரசியல்வாதிகளின் ‘ஆசீர்வாதம்’ முழுமையாக இருப்பதால்தான், ‘கண்காணிப்படவேண்டிய நபர்’ என அறிவிக்கப்பட்டபிறகும், இந்தக் கொள்ளைக்காரர்கள் வெளிநாட்டுக்கு எளிதாகத் தப்பியோடுகிறார்கள்.
ஆக, நமக்குத் தேவை புதுப்புது சட்டங்களல்ல. ஏற்கெனவே உள்ள சட்டங்களையும், விதிமுறைகளையும் கறாராக நடைமுறைப்படுத்தும் அமைப்புகளே தேவை. வங்கிகளின் நிர்வாகத்தில் அரசியல்வாதிகளின் தலையீடுதான் வங்கிகளில் குற்றங்கள் அதிகரிக்கக் காரணம். யாருக்குக் கடன் தரவேண்டும், கடனை யார் திரும்பக் கட்டத் தேவையில்லை என்பதை முடிவெடுப்பதில் இப்போதும் அரசியல் தலையீடு இருக்கத்தான் செய்கிறது. கடன் வழங்கும் விஷயத்தில் நிதி அமைச்சர் உள்பட யார் சொன்னாலும், அதைக் கேட்கத் தேவையில்லை என்கிற உத்தரவாதம் வங்கி அதிகாரிகளுக்கு எப்போது தரப்படுகிறதோ, அப்போதுதான் அவர்கள் சுதந்திரமாக வேலை செய்வார்கள். வங்கி அதிகாரிகள் தவறு செய்யும்பட்சத்தில், அவர்கள்மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்கவும் இது நிச்சயம் உதவும்.
யார் யாரையோ கைது செய்வதினாலும், புதுப்புதுச் சட்டங்களைக் கொண்டுவருவதினாலும் வங்கித் துறையில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துவிடாது என்பதை மத்திய அரசாங்கம் புரிந்துகொண்டு, இனியாவது சரியான நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம்!
- ஆசிரியர்