நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஐ.பி.ஓ நடைமுறைகளை உறுதிமிக்கதாக்குங்கள்!

ஐ.பி.ஓ நடைமுறைகளை உறுதிமிக்கதாக்குங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐ.பி.ஓ நடைமுறைகளை உறுதிமிக்கதாக்குங்கள்!

ஹலோ வாசகர்களே..!

ருகிற நிதியாண்டில், அதாவது 2018 ஏப்ரல் முதல் 2019 மார்ச் வரை யிலான காலத்தில், ரூ.2 லட்சம் கோடி அளவுக்குப் பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் மூலமும் நிதி திரட்டப்படலாம் என்கிற தகவல், நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. கடந்த நிதியாண்டில் திரட்டப்பட்ட நிதியைவிட அதிகமான நிதியானது இந்த ஆண்டில் திரட்டப்படும் என்றும், ஐ.பி.ஓ, ஆஃபர் ஃபார் சேல், உரிமைப் பங்கு வெளியீடு, அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு நிறுவனங்களுக்குப் பங்கு விற்பனை, இ.டி.எஃப் வெளியீடு போன்ற பல வழிகளில் நிதி திரட்டப்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஐ.பி.ஓ நடைமுறைகளை உறுதிமிக்கதாக்குங்கள்!


கடந்த நிதியாண்டில் 35-க்கும் அதிகமான ஐ.பி.ஓ-க்கள் வெளியாகின. இந்த நிதியாண்டில் இதைவிட அதிக எண்ணிக்கையில் ஐ.பி.ஓ-க்கள் வெளி யாகலாம். காரணம், ஐ.பி.ஓ வெளியிட இதுவரை 17 நிறுவனங்கள் செபி யிடமிருந்து முறையான ஒப்புதல் பெற்றுள்ளன. மேலும், 19 நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளியிடுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்துள்ளன.

பங்குச் சந்தையில் புதிதாக முதலீடு செய்ய விரும்புகிறவர்களுக்கு எளிமை யான ஒரு நுழைவாயிலாக இருக்கிறது ஐ.பி.ஓ வெளியீடுகள். ஐ.பி.ஓ-வில் நல்ல பங்குகளில் ஆரம்பத்திலேயே முதலீடு செய்தவர்கள் அருமையான லாபம் பார்த்திருப்பார்கள். சி.டி.எஸ்.எல் உள்பட பல பங்குகள் நல்ல லாபம் தந்து, முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தன. எனினும், எல்லா ஐ.பி.ஓ-க்களுமே லாபம் தந்துவிடவில்லை. எஸ்.சந்த், ஜெனரல் இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் நஷ்டத்தையே தந்தன.

ஆக, ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்தாலே லாபம் கிடைத்துவிடும் என்கிற எண்ணம் முதலீட்டாளர்களுக்கு இருந்தால், அதை நிச்சயம் மாற்றிக் கொண்டாக வேண்டும். எந்த நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுவதாக இருந்தாலும், அதன் மதிப்பு என்ன, நியாயமான விலையில் பங்குகளை வெளியிடுகிறதா என்பதை அலசி ஆராய்ந்தபின்பே முதலீடு செய்யவேண்டும். நிறுவனத்தின் பெயரை மட்டுமே பார்த்துவிட்டு, பணத்தைப் போடக்கூடாது.

ஐ.பி.ஓ வரும் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை செபி இன்னும் கறாராக்க வேண்டும். பொருளாதாரம் இப்போது நன்றாக இருக்கிறது. இந்தச் சமயத்தில், ஐ.பி.ஓ வந்தால், நல்ல மதிப்பில் பங்குகளை விற்றுவிடலாம் என்று நினைக்கும் நிறுவனங்களை ஐ.பி.ஓ வெளியிட, செபி அனுமதிக்கக் கூடாது. ஐ.பி.ஓ வந்தபின் அந்தப் பங்கின் விலை பெரிய அளவில் குறைந்தால், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாதவாறு, தடுப்பு நடவடிக்கைகளை செபி எடுக்கவேண்டும்.

ஆகமொத்தத்தில், பங்குச் சந்தைமீது சாதாரண மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை அதிகரித்துவரும் இந்தச் சமயத்தில், தரமற்ற சில ஐ.பி.ஓ-க்கள் வந்து சந்தை மீதிருக்கும் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் கெடுத்துவிடக் கூடாது. பங்குச் சந்தையில் தவறுகள் நடக்காமல் இருந்தாலே போதும், இன்னும் பல கோடி பேர் அதில் துணிந்து முதலீடு செய்வார்கள். இதன்மூலம் நமது பொருளாதாரம் செழித்து வளரும் என்பதில் சந்தேகமில்லை.

- ஆசிரியர்