பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

விலகுங்கள் விஜயபாஸ்கர்!

விலகுங்கள் விஜயபாஸ்கர்!
பிரீமியம் ஸ்டோரி
News
விலகுங்கள் விஜயபாஸ்கர்!

விலகுங்கள் விஜயபாஸ்கர்!

‘குட்கா வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்' என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழக அரசின் முகத்தில் விழுந்த மற்றுமொரு அழுத்தமான, அசிங்கமான கறை.

2013ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் குட்கா விற்பனைக்குத் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதை மீறி, தமிழகத்தில் குட்கா விற்பனை படுஜோராக நடந்துவந்த நிலையில் சென்னை, செங்குன்றம் அருகேயுள்ள ஒரு குடோனில் 2016 ஜூலை 8-ம் தேதி வருமானவரித் துறை சோதனை நடத்தியது.

விலகுங்கள் விஜயபாஸ்கர்!



எம்.டி.எம் என்ற குட்கா நிறுவனம் சட்டவிரோதமாக குட்கா தயாரித்துப் பல மாநிலங்களுக்கு அனுப்பிவந்ததும், இதற்காகப் பலருக்கும் லஞ்சம் அளிக்கப்பட்டதும் அம்பலமாகின. அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி மற்றும் உரிமையாளர் மாதவ ராவின் வாக்குமூலம் ஆகியவற்றால் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உட்பட பலருக்கு லஞ்சம் வழங்கப்பட்டது தெரியவந்தது.

 உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்பேரில், குட்கா ஊழல் விவகாரத்தை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான  ஜெயக்கொடியைப் பணிமாற்றம் செய்தது,, சம்பந்தப்பட்ட கோப்புகள் திடீரென்று ‘காணாமல் போனது' ஆகியவை தமிழக அரசின் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தின. தமிழக டி.ஜி.பி அலுவலகத்தில் காணாமல் போன குட்கா ஃபைல், 2017 நவம்பர் 17-ம் தேதி, போயஸ் கார்டனில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றபோது, சசிகலா அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது இந்த சந்தேகத்தை இன்னும் உறுதி செய்தது.

ஆனாலும் ‘இந்த வழக்கைத் தமிழகக் காவல்துறை விசாரித்தால் நீதி கிடைக்காது, சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்' என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு எப்படியெல்லாமோ சி.பி.ஐ. விசாரணையைத் தடுக்கப்பார்த்தது. ஆனால், ‘குட்கா விவகாரத்தில் ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது' என்று மத்திய கலால் வரித்துறை தாக்கல் செய்த மனுவும், ‘அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலருக்கு லஞ்சம் அளித்ததற்கான ஆதாரம் உள்ளது' என்று வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு முதன்மை இயக்குநர் தாக்கல் செய்த மனுவும்  ‘சி.பி.ஐ. விசாரணை அவசியம்' என்ற நீதிமன்றத் தீர்ப்புக்கு வழிவகுத்துள்ளன.

தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையும் ஆரோக்கியத்தையும் கணக்கில்கொள்ளாமல், ஊழல் செய்வதில் மட்டுமே குறியாக இருந்த அத்தனை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  குறிப்பாக, . ‘மடியில் கனம் இல்லாததால் வழியில் பயமில்லை’ என்று இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருக்கும் விஜயபாஸ்கர், உண்மையிலேயே தன் மடியில் கனமில்லை என்று நிரூபிக்க, உடனடியாகப் பதவி விலக வேண்டும். அதுதான் அறம்!