
நீட் தேர்வு : மையங்கள் இல்லையா, மனசாட்சி இல்லையா?
மனிதாபிமானமே இல்லாமல் அதிகார ஆணவத்தையும், அலட்சியத்தின் உச்சகட்டத்தையும் அசிங்கமாக அரங்கேற்றியிருக்கிறது சி.பி.எஸ்.இ.
நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த தமிழக மாணவர்களில் சுமார் 6 ஆயிரம் பேருக்கு கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சிக்கிம் என்று பிற மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்கியது அநீதியிலும் அநீதி. அதைவிடப் பெரும் அநீதி... இப்படியொரு பிரச்னை தமிழகத்தில் இருக்கிறது என்பதைத் துளிகூட கண்டுகொள்ளாமல், இங்கே ஓர் எடுபிடி அரசாங்கம் நடந்துகொண்டிருப்பது!

பணச்சுமை, மொழிதெரியாத ஊரில் போய் இறங்கி, தங்குவதற்கு இடம் தேடி, தேர்வுமையத்தைக் கண்டுபிடித்து... என மாணவர்கள் பட்டபாடு துயரமானது. நீட் தேர்வை இந்தியா முழுவதுமே 13 லட்சம் பேர்தான் எழுதினார்கள். ஆனால், பத்து-பன்னிரண்டாம் வகுப்புகள், அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் என 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதும் தேர்வுகள் தமிழகத்தில் காலம்காலமாக நடத்தப்படுகின்றன. அப்படியிருக்க, நீட் தேர்வுக்கு மட்டும் தமிழகத்தில் தேர்வு மையங்கள் கிடைக்காமல் போகுமா?
‘சென்ற ஆண்டு தமிழ்நாட்டில் 149 மையங்களில் 83,272 பேர்தான் நீட் தேர்வு எழுதினார்கள். இந்த ஆண்டு 90,000 பேர் தேர்வு எழுதுவார்கள் என்று கணித்தோம். அதற்கேற்ப 170 மையங்களை ஏற்பாடு செய்தோம். அதையும் தாண்டி விண்ணப்பித்துவிட்டார்கள்’ என்று சி.பி.எஸ்.இ கொடுத்திருக்கும் விளக்கம், செருப்புக்காகக் காலை வெட்டுவதுபோல் இருக்கிறது.
இது இப்படியிருக்க... பெற்றோர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோதாவது, தமிழக அரசு அதில் இணைந்திருக்கலாம்; சி.பி.எஸ்.இ அல்லது மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறையினரிடம்பேசி, தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைப்பதை உறுதிப்படுத்தியிருக்கலாம்; மேல்முறையீடு என்ற பெயரில் சி.பி.எஸ்.இ, உச்ச நீதிமன்றத்துக்கு ஓடியபோதாவது, தாமாகவே முன்வந்து இந்த வழக்கில் இணைந்துகொண்டு திறமை மிகுந்த வழக்கறிஞரை நியமித்து வாதாடியிருக்கலாம். அ.தி.மு.க. கட்சி
எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்குக்காக, அரசாங்கப் பணத்தைக் கோடிகளில் வாரியிறைத்து, டெல்லியிலிருந்து புகழ்பெற்ற வழக்கறிஞர்களையெல்லாம் அழைத்து வந்து வாதாட வைத்த எடப்பாடி அரசால், தமிழகக் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த வழக்குக்காக செலவு செய்யமுடியாதா? ஆனால், எதுவும் செய்யாமல் மௌனம் காத்தது எடப்பாடி அரசு.
‘இதுவரை ‘நீட் தேர்வு வேண்டாம்’ என்று போராடிய தமிழர்களை, ‘தமிழகத்திலேயே தேர்வு மையம் அமைக்க வேண்டும்’ என்று போராட வைத்ததே வெற்றிதான்’ என்று மமதையோடு நினைக்கிறது மத்திய அரசின் அமைப்பான சி.பி.எஸ்.இ. ‘பிரச்னை வெடித்தபிறகு, 3 லட்ச ரூபாய் நஷ்டஈடு கொடுத்தால் முடிந்தது’ என்று நினைக்கிறது சுயநலமிகளின் கூடாரமான எடப்பாடி தலைமையிலான அரசு.
ம்... ஒரு தேர்வையே ஒழுங்காக நடத்த முடியாதவர்களின் கையில்தானா நம் மாணவர்களின் எதிர்காலம்?