
ஹலோ வாசகர்களே..!
பிரதமர் மோடியின் தலைமையிலான பா.ஜ.க-வின் ஆட்சி நான்காண்டுகள் முடிந்து, ஐந்தாம் ஆண்டுக்குள் நுழைந்திருக்கிறது. கடந்த நான்காண்டுகளில் பல நல்ல விஷயங்கள் நடந்திருப்பதாக ஒரு தரப்பினரும், அப்படி எதுவும் நடக்கவில்லை; சாதாரண மக்கள் கஷ்டப்பட்டதுதான் மிச்சம் என வேறொரு தரப்பினரும் சொல்லி வருகின்றனர்.

கடந்த நான்காண்டுகளில் பல நல்ல விஷயங்கள் நடந்திருப்பதை நிச்சயம் மறுக்க முடியாது. அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டத்தின்மூலம் மூன்று கோடிக்கும் மேலான புதிய வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் கிலோ மீட்டர்களுக்குப் புதிய சாலைவசதிகள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சார வசதி, கிராமப்புறங்களில் பல லட்சம் பேருக்குச் சமையல் எரிவாயு இணைப்பு எனப் பல விஷயங்கள் நடந்துள்ளன.
பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின்மூலம் கறுப்புப்பணத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது, ஜி.எஸ்.டி வரியின்மூலம் அரசுக்கு வந்துசேர வேண்டிய வருமானத்தை அதிகரித்தது, வங்கிக் கடனைத் திரும்பக் கட்டமுடியாத நிறுவனங்களைத் திவால் நிறுவனங்களாக அறிவிக்கும் சட்டம் எனப் பல பொருளாதாரச் சீர்திருத்தங்கள் கடந்த நான்காண்டுகளில் கொண்டுவரப்பட்டு, வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றன.
பொருளாதார வளர்ச்சியை முன்நிறுத்துகிற மாதிரி பல விஷயங்கள் நடந்திருந்தாலும், பாதகமான விஷயங்களும் நடந்திருப்பதை மறுக்க முடியாது. கடந்த நான்காண்டுகளில் வேலைவாய்ப்புகளைப் பெருமளவில் உருவாக்கும் திட்டங்களை மத்திய அரசாங்கம் கொண்டுவரவில்லை. மாதம் தோறும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டிய நிலையில், சில ஆயிரம் வேலைகளே உருவாக்கப்பட்டிருப்பது பரிதாபம்.
பொதுத்துறை வங்கிகள் அடைந்த நஷ்டம் மட்டுமல்ல, பொதுத்துறை நிறுவனங்கள் அடைந்த நஷ்டமும் கடந்த நான்காண்டுகளில் அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளது. விவசாய விளைபொருள்களுக்கான அடிப்படை ஆதார விலை உயர்த்தப்பட்டபின்னும், உரிய விலை கிடைக்கவில்லை என விளைபொருள்களை வீதிக்குக் கொண்டுவந்து வீசும் கொடுமை கடந்த நான்காண்டுகளில் அடிக்கடி நடந்திருக்கிறது. விவசாயக் கடன்களை ரத்து செய்வதில் பிற கட்சிகளுடன் போட்டி போடுகிறதே தவிர, விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை.
என்றாலும், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. இந்த ஓராண்டு காலத்தில் இந்த அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்பதை வைத்தே பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற முடியும். கர்நாடகாவில் சமீபத்தில் நடந்தது போன்ற அரசியல் அதிரடி நடவடிக்கைகளில் இறங்காமல், நாட்டின் வளர்ச்சியை மனதில்கொண்டு நிதானமாகச் செயல்பட்டால், மக்களின் ஆதரவை மோடி அரசாங்கம் மீண்டும் பெற முடியும் என்பதில் சந்தேகமில்லை!
- ஆசிரியர்