சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஸ்டெர்லைட் அரசாணை : பாவத்தை மறைக்கும் பம்மாத்தா?

ஸ்டெர்லைட் அரசாணை : பாவத்தை மறைக்கும் பம்மாத்தா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டெர்லைட் அரசாணை : பாவத்தை மறைக்கும் பம்மாத்தா?

ஸ்டெர்லைட் அரசாணை : பாவத்தை மறைக்கும் பம்மாத்தா?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாகத் தமிழக அரசு ஆணை வெளியிட்டுப் பத்து நாள்கள் கடந்துவிட்டன. ஆனாலும் துப்பாக்கிச்சூடு ஏற்படுத்திய தாக்கமும் ஸ்டெர்லைட் தொடர்பாக எழும் கேள்விகளும் மறைந்து விடவில்லை.

ஸ்டெர்லைட் அரசாணை : பாவத்தை மறைக்கும் பம்மாத்தா?



துப்பாக்கிச்சூடு பற்றித் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் ‘துப்பாக்கிச் சூடு’ என்ற வார்த்தையே இல்லை. ‘சமூக விரோதிகளின் வன்முறைதான் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம்’ என்று எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க தலைவர்கள் தொடங்கி ரஜினி வரை ஒரே குரலில் பேசுகிறார்கள். ‘வன்முறையில் ஈடுபட்டவர்கள் மக்கள் இல்லை; சமூக விரோதிகள்தான்’ என்கிற இவர்களின் கூற்றை உண்மை என்றே வைத்துக்கொள்வோம். போராட்டத்தில் இந்தச் சமூக விரோதிகள் ஊடுருவியிருப்பதைக் கண்டறியத் தவறியது தமிழக உளவுத்துறையின் தோல்வி அல்லவா? சமூகவிரோதிகளைத் தடுத்து நிறுத்தத் தவறியது தமிழக அரசின் தோல்வி அல்லவா?

எடப்பாடி பழனிசாமி தன் அறிக்கையில், ‘ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்குக் காரணமும் தி.மு.க-தான்; அதற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்குக் காரணமும் தி.மு.க-தான்’ என்று மொத்தப் பழியையும் தி.மு.க மீது போட முயல்கிறார். ஸ்டாலினோ, தங்கள் ஆட்சிக்காலத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதையெல்லாம் மறைப்பதற்காக, அ.தி.மு.க ஆட்சியைச் சாடுகிறார். ஸ்டெர்லைட் ஆலை என்றில்லை, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் நாடு முழுக்கச் செயல்படும் அத்தனை தொழிற்சாலைகளையும் தொடங்கி வைத்தது முதல், தற்போது அவற்றுக்குப் பாதுகாப்பாக நிற்பது வரை மாநில, தேசிய என்று எல்லா அரசியல் கட்சிகளுக்குமே பங்கு இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பைக் கையில் வைத்திருக்கும்போது, ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளைக் கடைபிடிக்கிறதா இல்லையா என்று உண்மையாகக் கண்காணித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலே இன்றைக்கு இத்தனை உயிர்கள் பறிபோயிருக்காதே!

இன்னொருபுறம்,  ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணை, `சட்டரீதியாக வலிமையானதுதானா?’ என்கிற கேள்வியைச் சட்ட வல்லுநர்களே எழுப்புகிறார்கள்.  ‘அமைச்சரவையைக் கூட்டிக் கொள்கை முடிவு எடுக்கப்பட்ட பின்னரே அரசாணை வெளியிட வேண்டும். அப்போதுதான் அந்த அரசாணை சட்டப் பாதுகாப்பு கொண்டதாக இருக்கும். ஆனால், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் எளிதில் நீதிமன்றத்தில் தடையைப் பெறும் வகையில் அரசாணை உள்ளது’ என்றெல்லாம் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குத் தமிழக அரசிடமிருந்து பதில் இல்லை.

13 உயிர்கள் பறிபோன பிறகு பிறப்பிக்கப்பட்டிருக்கும் இந்த அரசாணை, உண்மையிலேயே மக்கள்நலனில் அக்கறைகொண்டு உருவாக்கப்பட்டதா, அல்லது பாவத்தை மறைப்பதற்கான பம்மாத்தா?