நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வட்டி உயர்வினால் சாதாரண மக்கள் பாதிப்படையக்கூடாது!

வட்டி உயர்வினால் சாதாரண மக்கள் பாதிப்படையக்கூடாது!
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டி உயர்வினால் சாதாரண மக்கள் பாதிப்படையக்கூடாது!

ஹலோ வாசகர்களே..!

டன்களுக்கான வட்டி விகிதத்தை ஆர்.பி.ஐ 6 சதவிகிதத்திலிருந்து 6.25 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கடன்களுக்கான வட்டி விகிதமானது இப்போது உயர்த்தப்பட்டுள்ளது. ஆர்.பி.ஐ-யின் இந்த நடவடிக்கையை நாம் வரவேற்கவில்லை என்றாலும், விமர்சிக்கத் தேவையில்லை என்பதே நம் கருத்து. 

வட்டி உயர்வினால் சாதாரண மக்கள் பாதிப்படையக்கூடாது!ஆர்.பி.ஐ-யில் இருக்கும் ஆறு உறுப்பினர்களும் ஒருமனதுடன் வட்டி விகிதத்தை உயர்த்தும் முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல அதற்குக் காரணம், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயரும். இதனால் விலைவாசி உயர்ந்து, மக்கள் செலவு செய்வது அதிகரித்து, பணவீக்கமும் உயரும். இந்த ஆபத்து நிகழாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே  வட்டி விகிதம்  தற்போது,  உயர்த்தப்பட்டிருப்பதுடன், வட்டி விகிதமானது இன்னும் 0.25% இந்த ஆண்டிலேயே உயர்த்தப்பட வாய்ப்புள்ளதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

ஆனால், ஆர்.பி.ஐ-யின் இந்த நடவடிக்கை மத்திய அரசுக்குப் பல சவால்களை உருவாக்கப்போகிறது. அந்தச் சவால்களை மத்திய அரசாங்கம் எப்படி சமாளிக்கப்போகிறது என்பதுதான் முக்கியமான பிரச்னை. காரணம், வட்டி உயர்த்தப்படும்போது, மத்திய அரசாங்கம் வாங்கும் கடனுக்கான வட்டி அதிகரிக்கும். இதனால், தற்போது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிதிப் பற்றாக்குறையானது இனிவரும் நாள்களில் அதிகரித்து, முக்கியத் திட்டங்களுக்கு மேற்கொண்டு செலவு செய்ய முடியாத நிலை உருவாகும்.

நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடிந்து, அடுத்த ஆண்டில் இரண்டாவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளப்போகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, இப்போது பா.ஜ.க செல்வாக்கு சரியவே செய்திருக்கிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இதற்கு நல்லதோர் உதாரணம். அடுத்துவரும் பொதுத் தேர்தலிலும் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமெனில், முக்கியமான பல திட்டங்களை வெற்றிகரமாக அறிவித்து நடத்த பல லட்சம் கோடி ரூபாய் அரசாங்கத்துக்குத் தேவை. தவிர, மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுகிற வகையில் சில கவர்ச்சிகரமான திட்டங்களையும் மத்திய அரசாங்கம் அறிவிக்க வேண்டியிருக்கும். இதற்கான  பணத்தை இனி மத்திய அரசாங்கம் என்ன செய்து திரட்டும்?

பொருளாதாரச் சூழ்நிலையை வைத்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை ஆர்.பி.ஐ எடுத்துவிட்டது. ஆனால், இந்த நடவடிக்கையால் மக்கள் எந்த வகையிலும் கஷ்டப்படாதபடிக்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம்தான் எடுக்க வேண்டும். இதற்கான திட்டங்களை மோடி அரசாங்கம் தீட்டட்டும்!

- ஆசிரியர்