Published:Updated:

அரசியல் சகாப்தத்துக்கு அஞ்சலி

அரசியல் சகாப்தத்துக்கு அஞ்சலி
பிரீமியம் ஸ்டோரி
News
அரசியல் சகாப்தத்துக்கு அஞ்சலி

அரசியல் சகாப்தத்துக்கு அஞ்சலி

ண்பது ஆண்டுகள் பொதுவாழ்க்கை சகாப்தம், தன் இறுதிப்பயணத்தை முடித்துக்கொண்டிருக்கிறது. மு.கருணாநிதி மறைந்துவிட்டார். ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வுகொண்டிருக்கிறான்’ என்று அவர் விரும்பிய வாக்கியம், கல்லறையில் எழுதப்பட்டுவிட்டது.

கருணாநிதி மருத்துவமனையில் இருந்த 11 நாள்களும், அவரைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தன ஊடகங்கள். கருணாநிதி யார், எதற்காகப் பொதுவாழ்க்கைக்கு வந்தார், யாருக்காக உழைத்தார், என்ன சாதித்தார் என்று இன்றைய தலைமுறைக்கும் உணர்த்தப்பட்டது. கருணாநிதி, வரலாற்றுணர்வைத் தமிழர்களிடம் விதைத்தவர். திருவள்ளுவர், இளங்கோவடிகள், கண்ணகி, தொல்காப்பியர், கரிகாற்சோழன், சேரன் செங்குட்டுவன் தொடங்கி ‘சாக்ரடீஸ்’ ஓரங்க நாடகம் மூலம் கிரேக்கம், ‘ரோமாபுரி பாண்டியன்’ மூலம் ரோம் என்று பழந்தமிழர் வரலாறு மற்றும் உலக வரலாறு எல்லாவற்றையும் பாமர மக்களிடத்திலும் கொண்டுசேர்த்தவர். இப்போது,  தன் வரலாற்றையும் தற்காலத்  தலைமுறையிடம் கொண்டுசேர்த்த திருப்தியுடன் கண்மூடியிருக்கிறார்.

அரசியல் சகாப்தத்துக்கு அஞ்சலி



கருணாநிதி என்றால் கறுப்புக்கண்ணாடியோ, மஞ்சள் துண்டோ, கரகரத்த குரலோ, கறுப்பு - சிவப்போ மட்டும் அடையாளமாகத் தெரிவதில்லை. போராட்டம்தான் அவர் அடையாளம். இந்தப் போராட்டமும் போர்க்குணமும் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

கருணாநிதி பற்றிச் சொல்ல எதைத் தொகுப்பது, எதை விடுப்பது? அவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால் அவை சட்டப்படி நிரூபிக்கப்படவில்லை. அவர்மீது வைக்கப்பட்ட முக்கிய விமர்சனமான குடும்ப அரசியலின் விளைவுகளை இன்றளவும் பார்க்கிறோம். ஆனால், அவற்றையெல்லாம் மீறி, தன் இருப்பை உணர்த்தியபடி இருந்தவர் அவர்.

கலை, இலக்கியம், அரசியல் என சகல தளங்களிலும் கால்பதித்த ஆளுமைகள் உலக வரலாற்றில் மிகச்சிலரே. அப்படியோர் அபூர்வ ஆளுமை நம்மோடு வாழ்ந்தார் என்பது நம் பெருமை. தமிழ் என்ற அடையாளத்தை உலகம் முழுக்கப் பெருமித அடையாளமாக மாற்றியவர் அவர்.

கருணாநிதி நெருப்பாற்றில் நீந்தியபோதெல்லாம் கலை, இலக்கியத்தில் கரையேறினார். அவருடன் பழகியவர்கள் அவருடனான ஒரே ஒரு நகைச்சுவை அனுபவத்தையாவது பகிர்ந்துகொள்ளாமல் இருந்ததில்லை. இந்த நகைச்சுவையுணர்வும் எழுத்துமே அவர் எதிர்கொண்ட சோதனைக்காலங்களில் இறுக்கம் உடைக்க உதவின. ‘என் உயிரினும் மேலான...’ என்ற குரல், அவரின் கழக உடன்பிறப்புகளுக்கானதாய் இருக்கலாம். ஆனால், அவரின் உரிமைக்குரல் தமிழர்கள் எல்லோருக்குமானது. பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவம், தமிழுணர்வு, மாநில சுயாட்சி என்று உரிமைகளுக்காகவும் சீர்திருத்தங்களுக்காகவும் ஓயாது ஒலித்த உரத்த குரல் அவருடையது.

கருணாநிதி ஓய்வெடுக்கலாம். எதற்காக உழைத்தாரோ, அந்த விஷயங்களுக்கான உரிமைக்குரல்கள் ஓயாது. காலம் தாண்டியும் ஒலிக்கும்.

அரசியல் சகாப்தத்துக்கு அஞ்சலி செலுத்துகிறான் விகடன்.