பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

அழிக்க முடியாத அவமானக் கறை

அழிக்க முடியாத அவமானக் கறை
பிரீமியம் ஸ்டோரி
News
அழிக்க முடியாத அவமானக் கறை

அழிக்க முடியாத அவமானக் கறை

ரசு என்பது பொதுமக்களைப் பாதுகாக்கவா அல்லது ஊழல் அமைச்சர்களையும்  அதிகாரிகளையும் பாதுகாக்கவா என்ற கேள்வி இப்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. நியாயம், தர்மம், சட்டம், நீதி என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல்... மானம், அவமானம், வெட்கம், ரோஷம் என்று எதுவுமே இல்லாமல் போதைப் பொருள் விற்பவர்களிடம் லஞ்சம் வாங்குபவர்களை இந்த அரசு  பாதுகாத்து வருகிறது.

அழிக்க முடியாத அவமானக் கறை‘மாநில மக்களின் நோய் நொடியில்லாத நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர், மாநில மக்களின் உடல்நலத்தைச் சீர்குலைக்கும் குட்கா போதைப்பொருள் உற்பத்தியாளருக்கு உடந்தையாக இருந்து லஞ்சம் வாங்கினார்’ என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி அவரது வீடு, அலுவலகம் என்று அவர் தொடர்புடைய 34 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியிருக்கிறது.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய போலீஸ் துறையின் உச்ச நிலை அதிகாரியான டிஜிபி தொடங்கி காக்கிச்சட்டை போட்ட பல கனவான்கள், மத்திய மாநில உயர் அதிகாரிகள் வீடுகளிலும்  சிபிஐ சோதனை நடத்தியிருக்கிறது.

இதை ஊழல் என்ற அளவுகோலில் மட்டும் அளந்துவிட முடியாது. ஒரு தலைமுறையையே ஒட்டுமொத்தமாய்ச் சீரழிக்கும் அபாயத்துக்குத் துணைபோன அநீதியாகத்தான் பார்க்க வேண்டும்.

இப்படி  ஓர் அசிங்கம்  நடைபெற்றவுடன் மானமுள்ள எந்த ஓர் அரசாக இருந்தாலும்  நெருப்பை மிதித்த மாதிரி பதறியிருக்கும். விசாரணை முடியும்வரை குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பதவியிலிருந்து விலக்கி வைத்திருக்கும். ஆனால் நமக்கு வாய்த்திருக்கும் அரசோ, குற்றம் சட்டப்பட்டவர்களுக்கு வசதியாக, நேர்மையாக விசாரணை செய்த அதிகாரிகளை மாற்றியது. இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் தொலைந்துபோனதாகச் சொன்னது. நீதிமன்றம் தலையிட்டு இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றியதையடுத்து இப்போது அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் சோதனை  நடந்திருக்கிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர்மீது அடுக்கடுக்காகப் பல புகார்கள் வந்துவிட்டன. போலீஸ் டிஜிபியான ராஜேந்திரனோ பதவி ஓய்வு பெற்றபின்னரும் பதவி நீட்டிப்பில் இருப்பவர். மக்களின் உடல் நலத்தின் மீது அக்கறை இல்லாவிட்டாலும் தங்களின் பெயரைக் காப்பாற்றிக்கொள்ளவாவது அமைச்சர் விஜயபாஸ்கரையும் டி.ஜி.பி. ராஜேந்திரனையும் தமிழக அரசு பதவியிலிருந்து விலக்கி வைக்கவேண்டும்.

‘நல்ல பெயர் இருந்தால்தானே காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும்’ என்று இந்த அரசு கருதிவிட்டால், மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதை அடுத்த தேர்தலில் செய்வார்கள்.