
வேண்டாமே விபரீத விளையாட்டு!
‘மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் ஒன்றான பி.டி பருத்தி தோல்வியடைந்துவிட்டது. விவசாயிகளுக்கு நிலையான வாழ்வாதாரப் பாதுகாப்பைத் தரத் தவறிவிட்ட பி.டி பருத்தி, விஞ்ஞான ரீதியிலான உயிரியல் பாதுகாப்பு நெறிமுறைகளும், அடிப்படை அறிவியல் ஆய்வுகளும் இல்லாத ஒன்றாக இருக்கிறது. மொத்தத்தில் மரபணு மாற்று விதைகள் செலவினத்தை அதிகப்படுத்துபவையாகவே இருக்கின்றன’ - ஆய்வு முடிவு ஒன்று இப்படிக் கூறியிருக்கிறது. நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இது, இயற்கை ஆர்வலர்களோ, சூழல் போராளிகளோ மேற்கொண்ட ஆய்வின் முடிவு அல்ல. தொடர்ந்து பி.டி. பருத்தி உள்ளிட்ட மரபணு மாற்றுப் பயிர்களை உயர்த்திப் பிடித்து வந்த, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானிகளின் ஆய்வுமுடிவு என்பதுதான் அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்று.

பன்னாட்டு நிறுவனத்தின் தயாரிப்பான இந்த பி.டி. பருத்தி, ‘பூச்சித்தாக்குதல் இருக்காது, மகசூல் கூடும், செலவுகள் குறையும்’ என்பது உள்ளிட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன்தான் விவசாயிகளிடம் கொண்டு செல்லப்பட்டது. ‘பசுமைப் புரட்சி’ போலவே இதையும் அழுத்தமாய் வலியுறுத்தியது மத்திய அரசு. அதேசமயம், ‘விதைகளைத் தன்வசப்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் வியாபாரச் சூழ்ச்சிதான் பி.டி. பருத்தி. இது, உயிர்ச்சங்கிலியையே சிதைக்கும் செயல்’ என்று எழுந்த குரலை முந்தைய காங்கிரஸ் அரசோ, தற்போதைய பி.ஜே.பி அரசோ செவிமடுக்கத் தயாராக இல்லை.
ஒருகட்டத்தில் எதிர்பார்த்த மகசூலைத் தராததோடு, பூச்சித்தாக்குதலும் வந்துசேர, பெரும்நஷ்டத்தில் வீழ்ந்தனர் பி.டி பருத்தியைப் பயிரிட்ட விவசாயிகள். கொத்துக்கொத்தாகத் தற்கொலையை நோக்கித் துரத்தப்பட்டனர். அறிவியல் கண்டுபிடிப்பை ஆய்வகங்களில் பரிசோதிப்பதுதான் மரபு. ஆனால், வயல்வெளிகளையே ஆய்வகங்களாக்கி, லட்சக்கணக்கான விவசாயிகளை சோதனை எலிகளாக்கிய கொடுமை உலகில் வேறெங்கும் நடந்திராதது. இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் கடுகு, கத்திரி என்று அடுத்தகட்டமாக உணவுப் பயிர்களிலும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதிக்கும் யோசனைகளில் அரசு இயந்திரம் மூழ்கிக் கிடப்பதுதான் கொடுமையின் உச்சம்.
இத்தகைய கொடுமையான சூழலில்தான், ‘கரன்ட் சயின்ஸ்’ எனும் அறிவியல் ஆய்வு இதழில் ‘வேளாண் விஞ்ஞானி’ எம்.எஸ்.சுவாமிநாதனும் அவருடைய ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிவரும் ஓய்வுபெற்ற பேராசிரியர் பி.சி. கேசவனும் இணைந்து, ‘பி.டி பருத்தி தோல்வி’ என்கிற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதேசமயம், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரான கே.விஜயராகவன், ‘அந்த ஆய்வறிக்கையில் ஏராளமான பிழைகள் உள்ளன’ என்று தடாலடி அறிக்கையை வெளியிட, ‘நான் எப்போதுமே மரபணு மாற்றுப்பயிருக்கு ஆதரவுதான்’ என்று அந்தர் பல்டி அடித்திருக்கிறார் எம்.எஸ். சுவாமிநாதன். ஆனாலும், அவருடைய சகாவான கேசவன், பின்வாங்கவில்லை.
ஆரம்பக்கட்டத்தில், மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்களை, ‘அறிவியலுக்கு எதிரானவர்கள்... வளர்ச்சிக்குத் தடைபோடுபவர்கள்’ என்று முத்திரை குத்தி முடக்கப்பார்த்தனர். ஆனால், அதை ஆதரித்த விஞ்ஞானிகளே இப்போது அதன் ஆபத்தை விளக்கி, வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.
விதைகள்தாம் நம் உயிராதாரம். அவற்றோடு வேண்டாம் விளையாட்டுகள். மத்திய, மாநில அரசுகள் இந்த எச்சரிக்கை மணிக்கு செவிசாய்த்து இத்தகைய அபாய விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.