கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

து விருதுகள் சீஸன். இந்த ஆண்டின் சிறந்த கார் எது என்பதைத் தேர்ந்தெடுப்பது அத்தனை சுலபமான காரியமாக இல்லை. புதிய பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஆச்சரியமான விலை என்று மாருதி சுஸூகி எர்டிகா போட்டியில் முன்னணியில் இருந்தது. அதேபோல மஹிந்திராவின் மராத்ஸோ, டொயோட்டா இனோவாவுக்கே சவால்விடும் வகையில் வெளிவந்தது. பாதுகாப்பான கார் என்பதைப் பறைசாற்றும்விதமாக இது குளோபல் NCAP க்ராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் வாங்கியது. ஸ்போர்ட்டியான டிசைன் மற்றும் ஆச்சரியமூட்டும் மைலேஜ் என்று அறிமுகமான மூன்றாம் தலைமுறை மாருதி ஸ்விஃப்ட்டும் இந்த விருதுக்குக் கடும் போட்டி போட்டது. இவை தவிர வால்வோ XC40, ஹோண்டாவின் அமேஸ் ஆகிய கார்களும் போட்டிக்களத்தில் இருந்தன. காம்பேக்ட் கார் என்றால் குறைவான தரத்தில்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை என்பதை உரக்கச் சொல்லி, வியக்கத்தக்க சிறப்பு அம்சங்களையும் கொடுத்து களத்தில் குதித்தது ஹூண்டாய் சான்ட்ரோ. கார் வாடிக்கையாளர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ, அதை சான்ட்ரோ கொடுத்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தியதால், அதுவே இந்த ஆண்டுக்கான வெற்றிக்கோப்பையை வென்றிருக்கிறது.

இந்த ஆண்டுக்கான சிறந்த பைக் எது என்பதைத் தேர்ந்தெடுப்பதில் பெரிய சவால் இல்லை. காரணம், இந்த விருதுக்குப் போட்டி போட்டது ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650, டிவிஎஸ் அப்பாச்சி RTR160 4V மற்றும் யமஹா YZF-R15 V3.0 என்று மூன்றே மூன்று மாடல்கள்தான். ‘இப்போது புக் செய்தால் ஆறு மாதத்துக்குப் பிறகுதான் பைக்’ என்று டிமாண்ட் எகிறும் அளவுக்கு இன்டர்செப்டர் பைக்கின் விலை குறைவாக இருந்ததால், இது பைக் ஆர்வலர்களின் அமோக ஆதரவைப் பெற்றது. கையாளுமையிலும் ஸ்மூத் இன்ஜினிலும் தனி முத்திரை பதித்து டிவிஎஸ் அப்பாச்சி RTR160 4V இந்த விருதுக்குத் தன்னையும் தகுதிப்படுத்திக் கொண்டது. ஆனால், தொழில்நுட்பத்தில் புதிய உயரத்தைத் தொட்டு பக்கா ட்ராக் பைக்காக யமஹா R15 V 3.0 போட்டிக் களத்தில் நுழைந்து வெற்றியைத் தட்டிப்பறித்தது.

சிறந்த ஸ்கூட்டருக்கான விருதைத் தேர்ந்தெடுப்பதிலும் குழப்பங்கள் இல்லை. இந்தப் பந்தயத்தில் சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட், ஹீரோ டெஸ்ட்டினி, ஏப்ரிலியா SR125 மற்றும் டிவிஎஸ் என்டார்க் என நான்கு போட்டியாளர்கள் இருந்த போதும் ஸ்டைலான டிசைன், கூடுதல் வசதிகள், சிறப்பான ஓட்டுதல் அனுபவம் என டிவிஎஸ் என்டார்க் இந்தப் போட்டியில் எளிதில் ஜெயிக்கிறது.

வெற்றி பெற்ற அனைத்துப் போட்டியாளர்களுக்கும் மோட்டார் விகடனின் வாழ்த்துக்கள். வெற்றியாளர்களைத் தேந்தெடுத்த நிபுணர் குழுவுக்கும், பெரிதும் துணை நின்ற வாசகர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்

ஆசிரியர்