சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

கடமையுடன் கண்ணியமும் வேண்டும்!

கடமையுடன் கண்ணியமும் வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடமையுடன் கண்ணியமும் வேண்டும்!

கடமையுடன் கண்ணியமும் வேண்டும்!

போக்குவரத்துக் காவல்துறையினர் மோசமாகத் திட்டியதால் சென்னையைச் சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் ராஜேஷ் என்பவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அவர் இறப்பதற்கு முன் தன்னை எப்படியெல்லாம் காவல்துறையினர் தகாத வார்த்தைகளால் திட்டினார்கள் என்று விளக்கமாகச் சொல்லிவிட்டு, தன் தற்கொலைக்குக் காரணம் போக்குவரத்துக் காவல்துறையினர்தான் என்பதையும் வீடியோ மூலம் பதிவுசெய்துவிட்டு இறந்திருக்கிறார். இந்தத் தகவல் பலருக்கும் தெரியாதிருந்த நிலையில் காவல்துறையினர் அந்த வீடியோவை அலைபேசியிலிருந்து அழித்துமிருக்கிறார்கள். பிறகு ராஜேஷின் குடும்பத்தார் அலைபேசியை பேக்-அப் எடுத்துப்பார்த்த பிறகுதான் இந்த வீடியோ விவகாரம் வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவை அழித்த காவல்துறையினர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

கடமையுடன் கண்ணியமும் வேண்டும்!



`காவல்துறை பொதுமக்களின் நண்பன்' என்று சொல்லப்பட்டாலும்  பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே சீனப்பெருஞ்சுவரைவிடப் பெரிய மதில் சுவர் உள்ளது. ஒரு சராசரி நபரை  ஒருமையில் அழைப்பதும், `வாடா, போடா' என்று ஏகவசனத்தில் இறங்குவதும் காவல்துறையினருக்கு இயல்பாகிவிட்டது. அதிலும் டாக்ஸி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சாதாரணக் கூலித்தொழிலாளிகள், தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவர்கள் ஆகியோரைத் தரக்குறைவாகவே நடத்துகின்றனர். நிறம், உடை ஆகியவற்றைக் கொண்டு இந்த அணுகுமுறை மாறவும் செய்கிறது. ஒருவர் காக்கிச் சீருடையை அணிந்தாலே யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம், வசைபாடலாம் என்னும் அதிகாரத்தை யார் தந்தது?

இன்னொருபுறம் காவல்துறையினருக்கு இருக்கும் பணிப்பளு, மேலதிகாரிகள் தரும் மன உளைச்சல் ஆகியவையும் புரிந்துகொள்ளப்பட வேண்டியவையே. 100 பேர் வேலை பார்க்கவேண்டிய பணிகளை 50 காவல்துறையினரை வைத்தே பார்க்கவைப்பது, மேலதிகாரிகள் சாதாரண காவல்துறையினரை வீட்டுவேலை பார்க்கவைப்பது உள்ளிட்ட மோசமான வகையில் நடத்துவது, பெண் காவலர்களுக்கு இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்குக்கூட இடமும் நேரமும் இல்லாதவகையிலான பணி என்று சொல்லிக்கொண்டே போகலாம். `இதனால் ஏற்படும் மன உளைச்சலும் எரிச்சலுமே பொதுமக்களிடம் மோசமான வகையில் வெளிப்படுகிறதோ' என்று தோன்றுகிறது.

காவல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, பணிகளைப் பகிர்ந்துகொடுப்பது, காவலர்களுக்குப் போதுமான ஓய்வுநேரத்தை ஏற்படுத்துவது ஆகிய மாற்றங்கள் காவல்துறையில் ஏற்பட காவல்துறை அதிகாரிகளும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபகாலங்களாக காவல்துறையினர் தற்கொலைகள் அதிகரித்திருப்பது குறித்தும் ஆராய வேண்டும். அதேநேரத்தில், காவலர்களுக்கு என்ன மன உளைச்சல் இருந்தாலும் அது பொதுமக்களை நடத்துவதில் பிரதிபலிக்கக்கூடாது என்கிற உளவியலை அவர்களுக்கு உருவாக்க வேண்டும்.

காவல்துறையினர் எதைக் காக்கிறார்களோ இல்லையோ, கண்ணியம் காக்க வேண்டியது அவசியம்.