Published:Updated:

பயணிகள் கவனத்துக்கு...

பயணிகள் கவனத்துக்கு...
பிரீமியம் ஸ்டோரி
News
பயணிகள் கவனத்துக்கு...

பயணிகள் கவனத்துக்கு...

சென்னை மெட்ரோ ரயில், பலரின் வாழ்வில் புதிய அத்தியாயத்தைத் தொடக்கிவைத்திருக்கிறது. வாகனப் புகை, ஹாரன் சத்தம், வெயில், மழை, அங்குலம் அங்குலமாக நகரும் போக்குவரத்து ஆகியவற்றுக்கு மத்தியில் சென்னையில் வாகனம் ஓட்டுவது, நகரவாசிகளுக்கு ஒரு தண்டனையாகவே மாறிப்போய்விட்ட காலகட்டத்தில், 44 கி.மீ நீளத்துக்கு முதற்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முழுமையாக முடிவடைந்து மக்களின் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. ஏறக்குறைய பத்தாண்டுக்கால பிரசவ வேதனைக்குப் பிறகு இரண்டு வழித்தடங்களில் வடசென்னையையும் தென்சென்னையையும் மெட்ரோ ரயில் இணைத்திருக்கிறது.

பயணிகள் கவனத்துக்கு...


 
சட்டை கசங்காமல், வியர்வைக் குளியலில் நனையாமல், சென்னையில் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்வதை சாத்தியப்படுத்தியிருக்கிறது குளிர்வசதி கொண்ட இந்த ரயில் பயணம். ஆரம்பிக்கப்பட்ட ஒரு சில நாள்களில் இலவசப் பயணம் இருந்ததால் சராசரியாக நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதில் பயணம் செய்திருக்கிறார்கள். கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கப்பட்ட பின்னரும்கூட நாள் ஒன்றுக்கு இதில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 80,000-மாக இருப்பதிலிருந்தே மெட்ரோ ரயிலுக்குப் பொதுமக்களிடம் இருக்கும் வரவேற்பைப் புரிந்துகொள்ள முடியும்.

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திலிருந்து விமானநிலையம் வரையிலான பயணத்தை உதாரணமாக எடுத்துப் பார்த்தால், அரைகுறையாக மெட்ரோ ரயில் ஓடிக்கொண்டிருந்த நிலையில் அது வசூலித்த கட்டணத்தைவிட, மெட்ரோ ரயில் முழுமையாகப் பூர்த்தியடைந்த பிறகு அது வசூலிக்கும் கட்டணம் குறைந்துதான் இருக்கிறது. இன்னும் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டால், பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது. பயணிகள் அதிகரிப்பதன் மூலம் மெட்ரோ ரயில் வருவாய் அதிகரிக்கவும் செய்யும்.

புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றைக் குறைக்கும் வழிகளில் ஒன்றாகப் பொதுப்போக்குவரத்தைப் பரிந்துரைக்கிறார்கள் சூழலியலாளர்கள். மேலும், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களைத் தவிர்த்து மெட்ரோ ரயிலில் பயணிப்பதன் மூலம் பெட்ரோல் பயன்பாடு குறையும். அது நம் இந்தியப் பொருளாதாரத்துக்கும் மறைமுகமாக உதவும்.

 அந்தவகையில் சென்னை மாநகரை மேலும் மெட்ரோ ரயில்மூலம் இணைக்கும் விதமாக  69,180 கோடி ரூபாய் செலவில் 118.9 கி.மீ தூரத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. மெட்ரோ ரயிலின் முதற்கட்டப் பணிகளுக்கு, தமிழக அரசுக்கு இணையாக மத்திய அரசும் நிதியை அளித்ததால்தான் இது சாத்தியமானது. அதனால் அதேபோல சென்னை மெட்ரோ ரயில்நிர்வாகம் தீட்டியிருக்கும் இரண்டாம் கட்டப் பணிகளுக்கும் மத்திய அரசு நிதிப்பங்களிப்பு செய்தால்தான் இந்தத் திட்டம் விரைவில் சாத்தியமாகும்.

வளர்ச்சி பற்றிப் பேசும் மத்திய அரசும், ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்று முழங்கும் மாநில அரசும், சென்னை நகர மக்களின் இந்த வளர்ச்சித்திட்டத்துக்காகக் கைகோக்க வேண்டும்.