
நீருக்காகக் குரல் கொடுப்போம்!

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. கூடவே குடிநீர்த் தட்டுப்பாடும் தமிழகத்தின் பல ஊர்களிலும் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டது. மழை வரும் என்பதற்காக எதிர்பார்த்த ஃபானி புயலும் திசைமாறிப் போய்விட்டது.
நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குப் போனதற்கு மிகப்பெரிய காரணம் அதிகார வர்க்கம்தான். கிராமப்புறங்களில் இருக்கும் ஏரி, குளம், குட்டை, ஊருணி, தாங்கல், கண்மாய், வாய்க்கால் ஆகியவற்றை எல்லாம் ஆக்கிரமித்து அதிகார வர்க்கத்தினர் குடிநீருக்கு வேட்டு வைத்துவிட்டார்கள். உதாரணத்துக்கு, சென்னையின் புகழ்பெற்ற அடையாறு ஆரம்பிக்கும் இடம் மலைப்பட்டு கிராமம். ஆனால், அதில் கல்குவாரி செயல்பட இந்த அதிகார வர்க்கம் அனுமதி கொடுத்திருக்கிறது. இதன் அருகே ஒரு கல்லூரியும் செயல்பட்டுவருகிறது. குடிநீர் ஆதாரங்களை ஊருக்கு ஊர் எப்படி அழித்தொழிக்கிறார்கள் என்று இப்படி நூறு உதாரணங்களைச் சொல்ல முடியும்.
நகர்ப்புறங்களை எடுத்துக்கொண்டால் வீதியின் இருபுறமும் மூன்றடி அளவுக்கு வெற்றிடம் விட்டால்தான் மழைக்காலங்களில் மழைநீர் மண்ணால் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர் பெருகும். ஆனால், பேராசை பிடித்த அதிகார வர்க்கம் பணத்துக்காக இதற்கும் வேட்டு வைத்துவிட்டது. 2015-ம் ஆண்டு சென்னை நகரம் மழை வெள்ளத்தில் மூழ்கியதை ஒரு காரணமாகக்காட்டி, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மழைநீர் வடிகால் கால்வாய்களை அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. மழைநீர் வடிகால் என்ற பெயரில் கொசு வளர்ப்பு மையங்களை மாநகரம் முழுவதும் கட்டிவருகிறது அதிகார வர்க்கம். வான்மழை முழுவதையும் கடலில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டால்... நிலத்தடி நீர் எப்படிப் பெருகும் என்று அவர்கள் யோசிக்கவில்லை. யோசிக்கவில்லை என்பதைவிட, தங்களுக்கு வருகின்ற வருமானத்தை அவர்கள் இழக்க விரும்பவில்லை என்பதுதான் உண்மை.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மழைநீர் சேகரிப்புத் திட்டமும் முறையாகக் கண்காணிக்கப்படுவதில்லை. பெய்யும் கொஞ்சநஞ்ச மழையும் கடலுக்குக் கொண்டுசெல்லப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் எப்படி உயரும்? நன்றாக இருக்கும் நடைபாதைகளை எல்லாம் உடைத்தெறிந்துவிட்டு, புதிதாக நடைபாதை அமைக்கிறோம் பேர்வழி என்று மழைநீர் நிலத்துக்குள் சென்றுவிட முடியாத அளவுக்கு சிமென்ட் கலவையைக் கொட்டி சாலையின் பாதி அகலத்துக்கு நடைபாதை போடுகிறது மாநகராட்சி நிர்வாகம்.
இயற்கையாகப் பெய்யும் மழையைப் பல கோடி ரூபாய் செலவு செய்து கடலில் கொண்டுபோய் விடுகின்றனர் மாநகராட்சி நிர்வாகத்தினர். பிறகு மீண்டும் பல கோடி ரூபாய் செலவு செய்து கடல்நீரைக் குடிநீராக மாற்றுகிறோம் என்று திட்டம் போடுவார்கள். இவர்கள் திட்டம் போடுவதெல்லாம் திருடுவதற்காகவே என்பதால் இதை எதிர்த்துக் குரல் கொடுக்கவேண்டியது அவசியம், அவசரம்!
தண்ணீருக்காகக் குரல் கொடுப்பது நம் தலைமுறைகளுக்காகக் குரல் கொடுப்பது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.