பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

இது மக்களின் வெற்றி!

இது மக்களின் வெற்றி!
பிரீமியம் ஸ்டோரி
News
இது மக்களின் வெற்றி!

இது மக்களின் வெற்றி!

மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் வென்று, மத்தியில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. `இரண்டாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சிக்கட்டிலில் ஏறும் முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர்’ என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் நரேந்திர மோடி.

இது மக்களின் வெற்றி!

சென்ற முறை இந்தியா முழுவதும் ‘மோடி அலை’ வீசியபோது, நரேந்திர மோடி பிரதமரானது சாதனையில்லை. ஐந்தாண்டுகால ஆட்சியின் மீதான விமர்சனங்கள், எதிர்ப்புகள், எதிர்க்கட்சிகளின் வியூகங்கள் என்று பலவற்றையும் தாண்டி வென்றிருப்பதுதான் இமாலயச் சாதனை.  அதிலும் சமீபத்தில் காங்கிரஸ் வென்ற ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அபார வெற்றி, உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ்வாடி கூட்டணியைத் தாண்டி வெற்றி, மேற்கு வங்கத்தில் கால் நூற்றாண்டுகாலம் ஆட்சிசெய்த கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஓர் இடமும் கிடைக்காதபோது, திரிணாமுல் காங்கிரஸுக்கு அடுத்தபடியாக சீட்டுகளை வென்றது என்று பல சாதனைகளை இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி நிகழ்த்தியிருக்கிறது.

இத்தனைக்கும் மதக் கலவரங்கள், மாநில உரிமைகள் மறுக்கப்பட்டது என்ற ஆதங்கம், நீட் தேர்வு எதிர்ப்பு, ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு, ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு, `நீதிமன்றம், சி.பி.ஐ போன்ற சுயேச்சையான அமைப்புகளின் மீது மத்திய அரசு தலையீடு’ என்ற விமர்சனம், கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டது என்ற முழக்கங்கள்... என மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, கட்சிசாரா அறிவுஜீவிகளும் எழுத்தாளர்களும்கூட கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால், இந்த எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் தாண்டி மக்களின் நம்பிக்கை பெற்ற தலைவராகத் தன்னை முன்னிறுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் மோடி என்றுதான் சொல்ல வேண்டும்.

மக்களின் தீர்ப்பை மோடி எதிர்ப்பாளர்களும் எதிர்க்கட்சிகளும் தலைவணங்கி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மக்களின் மனம் கவர்ந்து மகத்தான வெற்றி பெற்றிருக்கும் பிரதமர் மோடியை விகடன் வாழ்த்துகிறான்.

அதே நேரத்தில் ஒரு பிரதமராக மோடி கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்களும் இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் தோல்வி அடைந்தாலும்கூட அவை கடந்தகாலத்தில் முன்வைத்த விமர்சனங்களில் நியாயம் இருக்கிறதா என்று ஆராய வேண்டிய பொறுப்பும், அப்படி நியாயங்கள் இருந்தால், தவறுகளைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பும் மோடிக்கு உண்டு. மேலும், இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், தென்னிந்தியாவில் கர்நாடகா தவிர மற்ற மாநிலங்களில் பா.ஜ.க-வுக்குத் தோல்வி முகம்தான். அதிலும் தமிழகம், கேரளா, ஆந்திரா என்னும் மூன்று மாநிலங்களிலும் ஓரிடத்தில்கூட பா.ஜ.க-வால் வெல்ல முடியவில்லை.

குறிப்பாக, தமிழகத்தில் பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா மற்றும் ஆளுங்கட்சியான அ.தி.மு.க மெகா கூட்டணியை அமைத்தபோதும்
பா.ஜ.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் படுதோல்வியைத் தழுவியிருக்கின்றன. தென்னக மக்களின் விலகல் மனோபாவத்துக்கான காரணம் என்ன என்பதை சுயபரிசீலனை செய்து அதைச் சரிசெய்ய வேண்டிய கடமை மோடிக்கு உண்டு.

இதை மோடி நன்கு உணர்ந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. ‘நமக்கு எதிராக வாக்களித்தவர்களும் நம்மவர்களே. இதுவரை எல்லோரும் சேர்ந்து, எல்லோரின் வளர்ச்சிக்கும் உழைத்தோம். இனி எல்லோரின் நம்பிக்கையைப் பெறவும் உழைப்போம்’ என்று பிரதமர் மிகுந்த பொறுப்புணர்வோடும் நிதானத்தோடும் பேசியிருப்பது அவரது விமர்சர்களையும் ஒருகணம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தன் வார்த்தைகளை, பிரதமர் மோடி காப்பாற்றுவார் என்று நம்புவோம்.

அதேபோல, பா.ஜ.க இந்தத் தேர்தலில் 303 எம்.பி சீட்டுகளை ஜெயித்து தனிப் பெரும்பான்மை பெற்றிருந்தாலும், ‘கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து உழைப்போம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளவர்களோடு சேர்ந்துதான் ஆட்சி அமைப்போம்’ என்று பிரதமர் கூறியிருப்பதும், ‘தேசத்தின் அபிலாஷையைப்போலவே மாநிலங்களின் லட்சியங்களுக்கும் உரிய முக்கியத்தும் அளிப்போம்’ என்று  அவர் கூறியிருப்பதும் மோடியின் மீது புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது. 

தமிழகத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதி தவிர மற்ற எல்லாத் தொகுதிகளிலும் தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. மோடிக்கும் பா.ஜ.க அரசுக்கும் எதிரான வாக்குகளை, சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்வதில் தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முழுமையாக வென்றிருக்கின்றன. இது, கருணாநிதி இல்லாமல் களத்தில் இறங்கி, கூட்டணிக் கட்சிகளை சரியாகத் தேர்ந்தெடுத்து, செயலாற்றிய மு.க.ஸ்டாலினுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. அதே சமயம், மாநிலத்தை ஆளும் எடப்பாடி அரசை இடைத் தேர்தல்கள் மூலமாக வீழ்த்த முடியாமல் போனது ஸ்டாலினுக்கு சறுக்கலே.

நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியைத் தழுவினாலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் தோல்வியடைந்தாலும், ஒன்பது தொகுதிகளை வென்று நூலிழையில் ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது அ.தி.மு.க. இனிவரும் இரண்டாண்டுகளில் தங்களின் கடந்தகாலத் தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், மக்கள் மத்தியில் தங்கள் ஆதரவைப் பெருக்கிக்கொள்ளவுமான வாய்ப்பு எடப்பாடி அரசுக்கு இருக்கிறது. குறிப்பிட்ட அளவு தொழில் வளர்ச்சி இருந்தாலும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதில் எடப்பாடி அரசு கவனம் செலுத்த வேண்டும்.  நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளைப் பெற்று, பல இடங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது ஆச்சர்யமே! 

மத்திய பா.ஜ.க அரசு, மாநில அ.தி.மு.க அரசு, பெரும்பான்மை நாடாளுமன்றத் தொகுதிகளை வென்ற தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் அனைவருக்கும் மக்கள்நலன் ஒன்றே இலக்காக இருக்க வேண்டும்.

மக்களே இறுதி எஜமானர்கள்!