சினிமா
தொடர்கள்
Published:Updated:

கடைசி வாய்ப்பு!

கடைசி வாய்ப்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
கடைசி வாய்ப்பு!

கடைசி வாய்ப்பு!

‘தமிழகத்தின் 29 மாவட்டங்களில் இருக்கும் ஏரி குளங்களைத் தூர்வாருவதற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது’ என அரசாணை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. விசித்திரம் என்னவென்றால், ‘மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே தூர்வாரும் பணிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று அரசு பெருமைப்பட்டுக்கொண்டிருப்பதுதான்.

கடைசி வாய்ப்பு!

பொதுவாகவே, மேற்குத்தொடர்ச்சி மலைப்பிரதேசத்தில் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிடும். இந்த ஆண்டுக்கான பருவமழை ஜூன் 8ஆம் தேதியே தொடங்கிவிட்ட நிலையில், ‘பருவமழைக்கு முன்னதாகவே தூர்வாரும் பணி தொடங்கிவிட்டது’ என்று ஜூன் 14ஆம் தேதியன்று அறிவிப்பை வெளியிடுவது ஏமாற்றுவேலையே.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பிப்ரவரி மாதத் தொடக்கத்திலேயே ஏரி குளங்கள் என நீர்நிலைகள் வற்றத்தொடங்கி, மார்ச் மாத இறுதிவாக்கில் முற்றாக வற்றிவிடும். அப்போதே தூர்வாரும் பணிகளை ஆரம்பித்தால்தான், மழைக்கு முன்னதாகப் பணிகளை முடிக்க முடியும். இந்த ஆண்டுபோலவே கடந்த ஆண்டிலும் ஜூன் மாதத்தில்தான் குடிமராமத்துப் பணிகள் தொடங்கப்பட்டன. அதேவேகத்தில் பருவமழை வந்ததால் பணிகள் தடைப்பட்டன.

கடந்த இருபது, முப்பது ஆண்டுகளாகவே மழை ஆரம்பமாகும் சமயமாகப் பார்த்துதான் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. காரணம், பாதிப்பணிகள் நடக்கும்போதே நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து, பணிகள் தடைப்படும். அதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளை அளவிட முடியாமலும் போய்விடும். அதாவது, பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டதா, இல்லையா என்பதைக் கண்டறிய முடியாத அளவுக்கு நீர் நிரம்பிவிடும். அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அனைவரும் கூட்டுபோட்டுக் கொண்டு, ‘முழுமையாகப் பணிகள் முடிக்கப்பட்டன’ என்று கணக்கெழுதி, மொத்தமாகப் பணத்தைப் பங்குபோட்டுக்கொண்டுவிடுவார்கள்.

‘இதுவரை அரசு எத்தனை ஏரிகளைத் தூர்வாரியிருக்கிறது. எத்தனை குளங்களைச் சுத்தம் செய்திருக்கிறது. எவ்வளவு செலவிடப்பட்டது’ என்று எதிர்க்கட்சியான தி.மு.க இப்போது கோரிக்கைக் குரல் கொடுக்கிறது. ஆனால், இவர்களுடைய ஆட்சிக்காலத்திலும் இதே கதைதான் என்பது ஊரறிந்ததே!

உண்மையில், நீர்நிலைகளின் மீதான அதிகாரம் அந்தந்தப் பகுதி மக்களிடமிருந்தவரை, ‘குடிமராமத்துப் பணி’ ஆத்மார்த்தமாக மேற்கொள்ளப்பட்டது. நீர்நிலைகள்மீதான மக்களின் அதிகாரம் பொதுப்பணித்துறை நிர்வாகங்களின் கைகளுக்கு மாறிய பிறகு ஆபத்து ஆரம்பமானது.

நடந்ததெல்லாம் நடந்தவையாக இருக்கட்டும். இனி, நடப்பவையாவது நல்லவையாக இருக்கட்டும். ‘கடைசி மீனும் பிடிபட்டது’ என்பதுபோல, ‘கடைசிச் சொட்டுநீரும் வற்றிவிட்டது’ என்கிற கொடுமையான சூழலில் தமிழகமே தவித்துக்கொண்டிருக்கிறது. இதற்குப் பிறகாவது, முன்னெச்சரிக்கையோடும் முழுமையாகவும் திட்டங்களை மேற்கொள்ள ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் முன்வர வேண்டும்.  இதுவே ‘கடைசி வாய்ப்பு.’ இப்போதும் திருந்தாவிட்டால், அடுத்து இப்படி வருந்துவதற்குக்கூட ஒரு வாய்ப்பு கிடைக்காது - ஜாக்கிரதை!