நமக்குள்ளே...

##~## |
'வேளாண்மை, தொழில், கல்வி என அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு வந்தே தீருவேன்' என்று அரசியல் தலைவர்கள் ஆளாளுக்கு ஒரு இலக்கு வைத்து, அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால், அப்படி எந்தவித திட்டமிடலும் இல்லாமல், தானாகவே ஒரு விஷயம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. ஆனால், அது பெருமைப்படக்கூடிய விஷயமல்ல... மிகமிக வருத்தப்பட வேண்டிய விஷயம்.
'விவாகரத்து விஷயத்தில் இந்தியாவிலேயே தமிழகத்துக்குத்தான் முதலிடம்' என்கிற செய்தியைத்தான் சொல்கிறேன் தோழிகளே!
நேற்று வரை, 'கல்லானாலும் கணவன்... புல்லானாலும் புருஷன்' என்று தொன்று தொட்டு தொடரும் மனப்பான்மையோடு வாழ்ந்து கொண்டிருந்த நம் பெண்களிடத்தில், பலத்த மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதும் இதற்கு மிகமுக்கிய காரணம். படிப்பும், பொருளாதார பாதுகாப்பும் இல்லாத காரணத்தால்... எல்லாவற்றுக்கும் ஆண்களை சார்ந்தே இருந்தது ஒரு காலம்!
இப்போதோ... 'உன்னாலும் தனித்து இயங்க முடியும்' என்கிற நம்பிக்கையை பெண்களுக்குள் விதைக்கும் வகையில் பலவிதமான மாற்றங்கள் இங்கே நடந்து கொண்டே இருக்கின்றன. கட்டட கூலியாக இருக்கும் பெண் தொடங்கி, கம்ப்யூட்டர் இன்ஜினீயராக இருக்கும் பெண் வரையிலும், சொந்தக் காலில் நிற்க முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆக, 'ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை' என்பது நிரூபணம் ஆகிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், தவிர்க்க முடியாத... தவிர்க்கக் கூடாத இந்த மாற்றத்தை, ஆண்கள் புரிந்து கொண்டே ஆகவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அதேசமயம், தங்களின் இந்த பொருளாதார சுதந்திரம், எதிர்மறையான விளைவுகளை தங்களுக்குள் உண்டாக்கிவிடாதபடி நிதானம் காட்டுவது பெண்களுக்கும் முக்கியம்!
கருத்து வேறுபாடு என்பது கணவன்-மனைவிக்கு இடையே வராமல் இருக்கவே முடியாது. அது வள்ளுவன்-வாசுகியாக இருந்தாலும் சரி... அம்பிகாபதி-அமராவதியாக இருந்தாலும் சரி. ஆனால், அதை பரஸ்பரம் எப்படி கையாள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது... குடும்பத்தின் வெற்றி!
என்ன தோழிகளே, நான் சொல்வது சரிதானே!
உரிமையுடன்

ஆசிரியர்