நடப்பு
Published:Updated:

ஹலோ வாசகர்களே..!

ஹலோ வாசகர்களே..!

##~##

இதற்கு எதற்கு அரசாங்கம்?

ரயில் கட்டணத்தை உயர்த்தி சோம்பல் முறித்த கையோடு டீசல் விலையை உயர்த்தும் அதிகாரத்தை ஆயில் கம்பெனிகளுக்குக் கொடுக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. டீசலை மானிய விலையில் அளிப்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும்... இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களை ஒரு நாளைக்கு 364 கோடி வரை இந்த நஷ்டம் பாதிப்பதாகவும் சொல்லி விலையேற்றத்தை நியாயப்படுத்தப் பார்க்கிறது மத்திய அரசாங்கம்.

மானியங்கள் எல்லாக் காலத்திலும் தொடரவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் இல்லைதான். ஆனால், தனக்கு இருக்கும் நிதிப் பற்றாக்குறையைப் போக்கிக்கொள்வதற்கு எப்போதுமே அரசாங்கம் கடைப்பிடிக்கும் ஒரே வழி 'மக்கள் தலையில் கை வைப்பதுதான்' என்றால், அதை எப்படி ஜீரணிக்க முடியும்!

சட்டம் இயற்றுவதும்... வரி வசூல் செய்வதும் மட்டும்தான் ஒரு அரசாங்கத்தின் வேலையா? நம்பிக்கையோடு தன்னிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்த மக்களுக்கு, தன்னால் முடிந்த அளவுக்கு உபகாரமாக இருக்கவேண்டியதும் அரசாங்கத்தின் கடமை அல்லவா? எந்த பிரச்னை வந்தாலும் அதற்கு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் சாமர்த்தியம் மட்டுமே இருந்துவிட்டால்... அதை எப்படி நேர்மையான அரசாங்கம் என்று சொல்ல     முடியும்?

நாட்டின் இயற்கை வளங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தவும், வேலை வாய்ப்புகளைப் பெருக்கவும், உழைக்கும் மக்களின் சக்தியை முழுமையாகப் பயன்படுத்தி பொருளாதாரத்தை நிமிர்த்தவும், வெளிநாடுகளுடன் நடக்கும் வர்த்தகத்தின் மூலம் நம் தேசத்துக்கு லாபம் வரக்கூடிய வழிவகைகளை திட்டமிடவும் இந்த அரசாங்கம் உருப்படியாக என்னதான் முயற்சி செய்கிறது?

ஆற்றலும், புத்தி சாதுர்யமும் மிக்க ஒரு வியாபாரியைப்போல செயல்பட்டு, கஜானாவை நிரப்புவதற்குப் பாடுபடுவதுதான் ஒரு நல்ல அரசுக்கான அடையாளம். எதற்கெடுத்தாலும், அப்பாவி மக்களின் தலையில் மிளகாய் அரைப்பது அல்ல!

ஹலோ வாசகர்களே..!