சுட்டீஸ்
ஸ்பெஷல் 1
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

##~##

ந்த இதழுக்குள் இடம்பிடித்திருக்கும் 'விண்ணை முட்டும் விலைவாசி... கவலை வேண்டாம் மாத்தி யோசி' கட்டுரையைப் படித்துவிட்டீர்கள்தானே!

'சின்ன வெங்காயம், ஒரு கிலோ 160 ரூபாய்... பீன்ஸ் 120 ரூபாய்... இஞ்சி 250 ரூபாய்... மிளகு 400 ரூபாய்...' கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுக்க இதே பேச்சாகத்தானே இருக்கிறது!

'இதை வாங்கிச் சமைக்கலாம்... அதை வாங்கிச் சமைக்கலாம்... இது இல்லாம எப்படி சமைக்கிறது?' என்று பெரும்பாலான இல்லத்தரசிகளும் ஆளாளுக்கு பேசிக் கொண்டும், மாற்றி மாற்றி யோசித்துக் கொண்டும்தானே இருக்கிறார்கள்.

அவர்களையெல்லாம் கொஞ்சம் 'மாத்தி யோசி'க்க வைக்க வேண்டும் என்பதற்காகவேதான் அந்தக் கட்டுரை!

நமக்குள்ளே...

'சிவன் எப்ப வருவார்... வரம் எப்ப தருவார்' என்பது மாதிரி, காய்கறிகளின் விலை எப்போது குறையும் என்று தெரியவில்லை. 'மழை பெய்யல... வெயில் காயுது... காத்தடிக்குது’ என விதம்விதமான காரணங்கள் வரிசை கட்டுகின்றன விலைவாசி உயர்வுக்கு. நிலைமை இப்படியே நீடித்தால்... ரோட்டோரங்களில் முளைத்துக் கிடக்கும் காட்டாமணக்கு, வேலிக்கருவை, அருகம்புல்... என்று பலதையும் சமைக்க வேண்டிய கட்டாயம், எட்டிப் பார்த்துவிடும்போல!

இத்தகைய நிலையில்தான், அழகழகான ஆலோசனைகளை அள்ளி வழங்கியிருக்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். 'ஆப்பிளுக்காக காத்திருக்காமல், கொய்யாப்பழத்தைச் சாப்பிடுங்கள். பாலுக்காக ஏங்கி நிற்காமல், கேழ்வரகு கஞ்சியைக் குடியுங்கள்' என்று அவர்கள் சொல்வதெல்லாமே... 'விலைவாசி' உச்சத்தில் இருக்கும் இந்தக் காலத்துக்கு மட்டுமல்ல, எக்காலத்துக்கும் ஏற்ற, அற்புத யோசனைகள் என்பதுதானே உண்மை..!

'விலை ஏறுகிறது... விலை ஏறுகிறது' என்று பேசிக் கொண்டிருக்கும் சூழலில், அதற்கான நிஜ காரணங்களையும் கொஞ்சம் பேசலாம் என நினைக்கிறேன். விளைநிலங்களெல்லாம் 'விலை' நிலங்களாக மாறி, நேற்று நெல் முளைத்த வயலில் இன்று, அடுக்குமாடிக் குடியிருப்பு முளைத்து நிற்கிறது. இருக்கின்ற நிலத்தில் விளைய வைக்கலாம் என்றாலும், தண்ணீர் இல்லை, கரன்ட் இல்லை, உரம் இல்லை, வேலை ஆள் இல்லை என்று பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார்கள் விவசாயிகள். இத்தகைய சூழலில், சொற்ப இடத்தில் விளையும் காய்கறிகளுக்கு விலை கூடாமல் என்ன செய்யும்?

'உலகமெல்லாம் பருவமழை  ஒத்தபடி பெய்யட்டும்

உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்' என்று எல்லோரும் வேண்டிக் கொள்வோம்!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்