ஸ்பெஷல் 1
ரெகுலர்
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

##~##

'குடும்ப வன்முறை குற்றங்கள், நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகம் என்று, நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறது மத்திய அரசு'

- குடும்ப வன்முறைகளுக்கு எதிராக, காவல் நிலையங்களில் தமிழக பெண்கள் பதிவு செய்திருக்கும் வழக்குகளின் புள்ளிவிவரங்களை வைத்துதான் இப்படி ஒரு செய்தி.

இதைத் தொடர்ந்து, ''தமிழகத்தில்தான் சாதாரண விஷயங்களுக்குக்கூட கணவனை எதிர்த்து காவல்நிலையம் செல்லும் 'சண்டைக்காரிகள்' அதிகம்'' என்று இந்த விஷயத்துக்கு பொழிப்புரை எழுதப்படுகிறது... வடமாநில மீடியாக்களில்!

'வீட்டுக்கு வீடு வாசற்படி' என்பதுபோல குடும்ப வன்முறைகள் நாடு முழுவதுமே... ஏன், உலகம் முழுக்கவேதான் நடக்கின்றன. படிப்பு, வேலை, சம்பாத்தியம், வெளியுலக பரிச்சயம்... என்று பல விஷயங்களில் மற்ற மாநிலங்களைவிட, தமிழக பெண்கள், பல படிகள் மேலே இருக்கிறார்கள்! இதன் காரணமாகவே... தங்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளை பல்லைக் கடித்துக்

நமக்குள்ளே...

கொண்டு சகித்துக்கொள்ளும் 'பாரம்பரிய மனோபாவ'த்திலிருந்து விடுபட்டு, காவல் நிலையம்... நீதிமன்றம் என்று படியேறத் துவங்கியுள்ளனர்... இங்கே! அதேசமயம், இன்னமும் 'கட்டுப்பெட்டித்தன'மாக இருக்கும் வடமாநிலங்களில், இவையெல்லாம் வெளிச்சத்துக்கு வருவதே குறைவாகத்தான் இருக்கிறது. புள்ளிவிவரங்களில் தமிழகம் முதல்படியில் இருப்பதற்கு முக்கிய காரணம், இதுவாகவும் இருக்கலாம்தானே!

சரி, வடமாநிலமா... தென்மாநிலமா என்கிற விவாதத்தை விட்டுத் தள்ளுவோம். குடும்பத்துக்கு வெளியில் நடந்தாலும்... உள்ளே நடந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறை... முற்றிலுமாகக் கண்டிக்கத்தக்கதுதான். அதேசமயம், சின்னச் சின்ன விஷயங்களுக்காகக்கூட காவல் நிலையம், நீதிமன்றம் என்று படியேறத்தான் வேண்டுமா என்பதையும் யோசிக்க வேண்டும். இன்றைக்கு நீதிமன்றங்களில் பதிவாகியிருக்கும் விவாகரத்து வழக்குகளில் பலவும்... பைசா பிரயோஜனமில்லாத காரணங்களுக்காகவும் பதிவாகியிருக்கின்றன என்பதும் நாம் அவ்வப்போது கேள்விப்படும் சங்கதிதானே!

ஒரு காலத்தில், வீட்டில் என்ன பிரச்னை என்றாலும், உடனிருக்கும் அப்பாவோ... அம்மாவோ அல்லது அக்கம்பக்கத்து பெரியவர்களோ முன்வந்து பேசி சமரசம் செய்து வைப்பார்கள். சின்னப் பிரச்னைகள்தான் என்றில்லை. பெரும் பெரும்பிரச்னைகள் கூட, இந்த 'சமரச நீதிமன்ற'ங்களிலேயே சமாதானமாகி விடுவதுதான் இங்கே வாடிக்கை! ஆனால், தனிக்குடும்பங்கள் அதிகரித்து வரும் இக்காலத்தில் இதற்கெல்லாம் வாய்ப்பில்லாமல் போய்விட்டதுதான் சோதனை.

யானையின் தும்பிக்கையால்... தரையில் கிடக்கும் ஒரு சின்ன ஊசியையும் எடுக்க முடியும். பெரிய அரச மரத்தை வேரோடு பெயர்த்தெடுக்கவும் முடியும். ஏறக்குறைய பெண்களும் அப்படித்தானே!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்