ஸ்பெஷல் 1
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

பிரபல தனியார் பள்ளியில் படிக்கும் மகளைப் பற்றியும், அந்தப் பள்ளி பற்றியும் என் தோழி அடிக்கடி சொல்வாள். அப்படி ஒருமுறை அவள் சொன்ன தகவல்... வித்தியாசமாகவும், வியப்பாகவும் இருந்தது.

வழக்கம்போல காலை வழிபாட்டுக்காக மைதானத்தில் மாணவர்கள் கூடியிருக்க... ஒரு மாணவனின் பையிலிருந்து செல்போன் ஒலித்திருக்கிறது. அவனை அழைத்துக் கண்டித்த சில நிமிடங்களுக்குள், இன்னொரு மாணவியின் பையிலிருந்தும் செல்போன் சிணுங்கல். கோபம் அடைந்த தலைமை ஆசிரியர், ''இன்னும் எத்தனை பேர் செல்போன் கொண்டு வந்திருக்கீங்க?'' என்று கேட்க... நிறைய கைகள் உயர்ந்திருக்கின்றன.

''பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், பென்சில் பாக்ஸ், டிபன் பாக்ஸ் தவிர, வேறு எதுவும் பையில் இருக்கக்கூடாது. மற்றவற்றை வகுப்பறைக்கு வெளியே வைத்து விட்டு, வீடு திரும்பும்போது எடுத்துச் செல்லுங்கள்'’ என்று சூடாகச் சொன்ன தலைமை ஆசிரியர்,

நமக்குள்ளே...

''இனி தினமும் செக்கிங் நடக்கும். தவறு செய்பவர்கள், கடும் நடவடிக்கைக்கு ஆளாவார்கள்!'' என எச்சரித்திருக்கிறார்.

அடுத்த சில நிமிடங்களில் திரைப்பட டி.வி.டி-க்கள், கிஃப்ட் பொருட்கள், கிரீட்டிங் கார்டுகள்... ஏன், காதல் கடிதங்கள்கூட வகுப்பறை வாசலில் குவிந்ததைப் பார்த்து, அதிர்ந்துள்ளனர் ஆசிரியர்கள்.

''எனக்கு லவ் லெட்டர் வந்திருக்கு'’ என்று எடுத்துக் காட்டிய ஐந்தாம் வகுப்பு சிறுமி, 'சினிமாவில் வருவதுபோல் ஏதாவது நடந்துவிடுமோ?' என அழவும் செய்திருக்கிறாள்.

இதையடுத்து, குறிப்பிட்ட மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் தனித்தனியாக, தகுந்த மனநல ஆலோசகர் மூலம் கவுன்சலிங் அளித்திருக்கிறது பள்ளி நிர்வாகம். அக்கறை மிகுந்த இந்த முயற்சி, பல மாணவர்களை நேர்வழிப்படுத்தியிருக்கிறது என்பதுதான் ஹைலைட்டே!

''பள்ளிக்கூட வயதிலேயே காதல் வருவது போல் திரைப்படங்களில் சித்திரிக்கப்படுவது, பள்ளிக்குழந்தைகள் மத்தியில் இப்படி வயதுக்கு மீறிய சிந்தனைகளையும் பயத்தையும் விதைத்திருக்கிறது'’ என்று பெற்றோரிடம் தங்களின் வருத்தத்தைப் பதிவு செய்யத் தவறவில்லை, கவுன்சலிங் தந்தவர்கள்.

சமூகத்தில் சந்திக்க வேண்டிய பிரச்னைகள் நிறையவே இருக்கின்றன. எனவே, 'படிக்கவில்லை... மதிப்பெண் எடுக்கவில்லை...' என்று குறைகளை மட்டுமே தேடாமல், குழந்தைகளின் பிரச்னைகள், தேடல்கள், தேவைகள் என்னென்ன என்று நல்ல நண்பர்களாக பெற்றோர்கள் காது கொடுக்கவேண்டும் என்பதை நன்றாகவே புரிய வைத்துள்ளது இந்த பள்ளியின் நடவடிக்கை என்றே நினைக்கிறேன்.

இது தேர்வு நேரம். தேற வேண்டியது குழந்தைகள் மட்டுமல்ல, நாமும்தானே தோழிகளே!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்