ஸ்பெஷல் 1
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

''கோடை விடுமுறைக்கு உறவினர்களும் குழந்தைகளுமாகக் குவிந்து, பக்கத்து வீடே மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. 'அத்தை, மாமா, பாட்டி' என மழலைகள் கொஞ்சிப் பேசுவதை கேட்பதே இனிமைதானே! 'அடடே... வீடே களை கட்டியிருக்கிறதே’ என சந்தோஷப்பட்டு விசாரித்தால்... அந்த வீட்டுத்  தோழியின் பேச்சோ... நேர்மாறாக இருந்தது.

'பொல்லாத சந்தோஷம்.... அவரோட தம்பி, தங்கைங்க... குடும்பத்தோட வந்திருக்காங்க. வடிச்சி வடிச்சி கொட்ட வேண்டியிருக்கு. அவங்களுக்கு மட்டும் தான் இங்க அனுபவிக்கிற உரிமை இருக்கு. என் தம்பியோ, தங்கையோ வந்தா... கொஞ்சமும் மரியாதை இல்லை’ என அநியாயத்துக்குப் புலம்பினார்.

நமக்குள்ளே...

இவருடைய கணவர், 'அவளோட உறவுக்காரங்க வந்தா மட்டும்தான்  அசைவ உணவு, பலகாரம்னு தடபுடலா சமைக்கறா. என் சொந்தக்காரங்க வந்துட்டா, உடம்பு சரியில்லை... அது, இதுனு சொல்லி, சிம்பிளா சமையலை முடிச்சுடுவா’ என கடந்த ஆண்டு கோடையின்போது, என் கணவரிடம் புலம்பியது, இப்போது என் காதுகளில் 'ரீவைண்ட்' ஆனது''

- இது, என் தோழி ஒருவர், என்னிடம் பகிர்ந்த பக்கத்து வீட்டுக் கதை!

'வீட்டுக்கு வீடு வாசற்படி கதைதானே இது' என்கிறீர்களா?

இதற்கு நேர்மாறாக... இருபுற சொந்தங்களை ஒருங்கே மதிக்கும் குடும்பங் களையும், அங்கே உண்மையாகவே தாண்டவமாடும் மகிழ்ச்சியையும் பல  சந்தர்ப்பங்களில் நாம் பார்க்கிறோம்தானே! உறவுகள்... எப்போதுமே பொக்கிஷம்தான். கடிதம் எழுதிய காலத்திலாவது, பாசத்தை எழுத்தில் குழைத்து பதிவுசெய்தனர். ஆனால்,  இந்த  கைப்பேசி  காலத்தில், குறுஞ்செய்திகளைப் போலவே உறவுகளும், உறவின் நெருக்க மும் நாளுக்குநாள் குறுகிக்கொண்டே வருகின்றன. கூட்டுக்குடும்பங்கள் விடைபெற ஆரம்பித்து, ஒற்றைப் பிள்ளைகளோடு தனிக்குடித்தன குடும்பங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. உறவுகள் தந்த ஓராயிரம் உற்சாகங்கள், அவர்கள் நம்மைக் கொண்டாடி தீர்த்த தருணங்கள்... இவையெல்லாம் வரும் தலைமுறைக்கும் வாய்க்க வேண்டும் என்றால், கண்டிப்பாக உறவுக்கு  வாழ்த்துச் சொல்லி, வீட்டு வாசல்களை அகலமாகத் திறந்து வையுங்கள்.

வேலை, படிப்பு, குழந்தைகள், சம்மர் கேம்ப்... இப்படி 'இடைஞ்சல் காரணங்கள்' பல படையெடுக்கத்தான் செய்யும். இவற்றுக்கு நடுவேயும்... உறவுகளுக்கு கைகொடுப்பதைக் கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். இல்லையென்றால், 'அடச்சே, தப்பு பண்ணிட்டோமே...' என்று பின்னாளில் வருந்தப்போவது... காலத்தின் கட்டாயமாகிவிடும்.

என்ன... இந்தக் கோடைக்கு உறவினர்களை வரச்சொல்லி, போன்  போட ஆரம்பித்துவிட்டீர்கள்தானே!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்