சா.வடிவரசு; படங்கள்: க.பாலாஜி
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால், சமையல்கலைக்காக நடத்தப்படும் ஒலிம்பிக் தெரியுமா? அந்த ஒலிம்பிக் போட்டியின் 100 ஆண்டு கால வரலாற்றில், இதுவரை ஒரே ஒரு இந்தியர் மட்டுமே தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். அவர், சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த உமாசங்கர்!
2012-ம் ஆண்டு நடைபெற்ற 'சமையல்கலை ஒலிம்பிக் போட்டி’யில் இந்தியாவின் சார்பாகக் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றிருக்கும் உமாசங்கர், தற்போது சென்னையில் சமையல்கலை சார்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். 'இந்திய சமையல்கலைக் கழகம்', இந்தியா முழுவதிலும் இருந்து தலைசிறந்த 50 சமையல் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைக் கௌரவிக்கும் விதத்தில் '50 மாஸ்டர் செஃப்ஸ்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள மிக இளைய வயதுக்காரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
''திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டைதான் சொந்த ஊர். அங்குள்ள ரயில்வே சாலையில் எங்கள் குடும்பம் இட்லிக் கடை நடத்தி வந்தது. தினமும் காலை 6 - 9 மணி வரை அங்கே வேலை செய்துவிட்டு பள்ளிக்குச் செல்வேன். பள்ளி முடிந்ததும் நண்பர் ஒருவருடைய இனிப்புக் கடைக்குச் சென்று வேலை செய்வேன். இப்படியே பள்ளிகால வாழ்க்கையே உணவைச் சுற்றி இருந்ததால், சமையல்கலை சார்ந்த படிப்பையே படிக்க விரும்பினேன். வசதி இல்லாவிட்டாலும், ஆர்வத்தைப் புரிந்துகொண்ட என் தந்தை, கடன் வாங்கி படிக்க வைத்தார்.

மிகுந்த ஆர்வத்துடன் கல்லூரிக்குச் சென்ற எனக்கு, ஆங்கிலம் பெரிய தடையாக இருந்தது. முயற்சி எடுத்து ஆங்கிலம் கற்றேன். இரண்டாம் ஆண்டு கல்லூரிக் கட்டணத்தை நண்பர்களிடம் கடன் வாங்கித்தான் கட்டினேன். பெரியம்மா வனதாட்சி, தான் வேலை செய்துவந்த வீட்டு முதலாளியம்மாவிடம் என் இரண்டாமாண்டு மதிப்பெண் பட்டியலைக் காட்டி, மூன்றாம் ஆண்டு கட்டணத்தை கடனாக வாங்கிக்கொடுக்க... ஒரு வழியாக படிப்பை முடித்தேன்!'' என்று தன் கல்விப் போராட்டத்தை விவரித்த உமாசங்கர், தொடர்ந்தார்.
'காய்கறி சிற்பக்கலை என்பது, சமையல்கலையில் ஓர் அங்கமாகவும், மக்களை வெகுவாக கவரக்கூடியதாகவும் இருந்ததால், காய்கறி சிற்பக் கலையில் கைதேர்ந்த விரிவுரையாளர் ஒருவரிடம் கற்பதற்காக சென்றபோது... என்னையும் என் உடையையும் பார்த்து ஏளனம் செய்தார். அந்த அவமானத்தோடு வெளியேறி, எனக்குத் தெரிந்த அடிப்படைக் கல்வி அனுபவத்தைக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அதைக் கற்றேன். அந்தச் சமயத்தில் சமையல்கலை ஒலிம்பிக்கில் பலமுறை தங்கம் வென்ற வெளிநாட்டுக்காரர் ஒருவரை இ-மெயில் மூலம் தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெற்றதோடு, நேரடியாகச் சந்தித்தும் பயிற்சி எடுத்தேன். அவர் கொடுத்த நம்பிக்கையில்தான், 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெர்மனியில் நடைபெற்ற 'சமையல்கலை ஒலிம்பிக் போட்டி’யில், கலந்துகொண்டு, காய்கறி சிற்பக்கலை பிரிவில் தங்கம் வென்றேன்'' என்றவர், போட்டி பற்றிய தகவல்கள் சொன்னார்.
''நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்தப் போட்டியில் 50 நாடுகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டு, காய்கறிகளில் பல்வேறுவிதமான சிற்பங்களை உருவாக்கி அசத்தினார்கள். அதில் எனக்கு தங்கப்பதக்கம் என்று அறிவித்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. இதை வென்ற முதல் இந்தியன் என்பது அளவில்லா மகிழ்ச்சியும் பெருமையும் தந்தது!'' என்பவர், காய்கறிகளில் மான், மயில், கிளி என்று உருவங்களைச் செதுக்கி அசத்துகிறார். இக்கலையை ஆர்வமுள்ள இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுத்தும் வருகிறார். ஆனபோதும் இவருக்குள் ஒரு வருத்தம் குடிகொண்டிருக்கிறது. அது...
''விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றால், நாடே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. இதுவே சமையல்கலை ஒலிம்பிக் போட்டி என்றால்... அரசோ, மக்களோ சிறு பாராட்டைக்கூடத் தருவதில்லை. இதைஎல்லாம் நினைக்கும்போது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. இனியாவது தமிழக அரசு 'சமையல்கலை ஒலிம்பிக்’ போட்டிக்கும் மதிப்பளித்து இளைஞர்களுக்கு ஊக்கமும், பயிற்சியும் அளிக்கவேண்டும்!''