நமக்குள்ளே...
திருமண விழா ஒன்றுக்கு சென்று திரும்பியிருந்த உறவினரிடம், 'என்ன... கல்யாண விருந்தெல்லாம் படுஜோர்தானே?' என்று பொதுவானதொரு கேள்வியை முன்வைத்தேன்.
'ப்ச்' என சலித்துக்கொண்டவர், 'பந்தி போட்டு, தலைவாழை இலைவிரிச்சு பரிமாறின காலங்கள்ல, போதும்போதும்னு சாப்பிட முடிஞ்சது. அந்தக் காலமெல்லாம் இனி காணாமலே போயிடும் போல! என்னமோ பஃபே சிஸ்டம்னு சொல்லி சாலட், சப்பாத்தி, புல்கா, காலிஃப்ளவர் குருமானு டேபிள் மேல அடுக்கி வெச்சிருக்காங்க. தெர்மாக்கோல் தட்டுகள கையில தூக்கிக்கிட்டு, 'சாப்பிட

முடியுமா... முடியாதா'னுகூட தெரியாம, கிடைச்ச எல்லாத்தையும் தட்டுல நிரப்பிக்கிட்டு, உட்கார்ந்து சாப்பிட இடம் இல்லாம, நின்னுகிட்டே சாப்பிட்டோம். வயசானவங்களால தட்டைத் தூக்கிட்டு, நின்னுட்டே சாப்பிட முடியுமா? இதுமட்டுமில்ல, பாதி சாப்பாட்டைக் குப்பையில போட்டுட்டு போறவங்கதான் அதிகமா இருந்தாங்க. இதெல்லாம் என்ன கலாசாரமோ?' என நொந்துகொண்டார்.
நமக்குப் பிடித்த உணவை, தேவைக்கேற்ப எடுத்து, வீணடிக்காமல் நாமே சாப்பிட வேண்டும் என்கிற நோக்கத்தில் பரவ ஆரம்பித்திருப்பதுதான் பஃபே சிஸ்டம். ஆனால், அதன் நோக்கமே சிதைந்து, கண்ணில் கண்ட உணவுகளையெல்லாம் தட்டுகளில் நிரப்பிக்கொண்டு, அளவுக்கதிகமான உணவை வீணாக்குவது... கொடுமையிலும் கொடுமைதான். 'ஒரே ஒரு பருக்கை உணவைக்கூட கீழே சிந்தியதில்லை திருவள்ளுவர்’ என்றெல்லாம் கதைகதையாகக் கேட்டு வளர்ந்த தலைமுறையே, தற்போது இப்படி உணவை வீணாக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, 'இப்படி நல்லொழுக்க கதைகள் எதையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சூழலில் வளர்ந்துவரும் இன்றைய தலைமுறை, உணவு விஷயத்தில் நாளைக்கு எப்படி நடந்துகொள்ளப் போகிறதோ?' என்கிற அச்சம்தான் எட்டிப்பார்க்கிறது.
இப்படி வீணடிக்கப்படும் உணவுப் பொருள்கள் ஒவ்வொன்றையும் உற்பத்தி செய்வதற்காக, அரசாங்கம் செய்யும் செலவுகள், உழவர்கள் கொட்டிக் கொடுக்கும் உழைப்புகள், செலவிடப்படும் தண்ணீர், இந்தப் பொருட்களை வாங்குவதற்காக நாம் செலவழிக்கும் தொகை என்று அனைத்தையும் கணக்கிட்டுப் பாருங்கள்... அதிர்ச்சி மேல் அதிர்ச்சிக்குத்தான் ஆளாவோம்.
'கற்றுக்கொடுத்தலே கற்றலை வளர்க்கும்’ என்பார்கள். அதாவது, அடுத்தவருக்கு ஒரு விஷயத்தை சொல்லிக் கொடுக்கும்போதுதான், சொல்லிக் கொடுப்பவருக்கும் அது நன்கு புரியும் என்பதுதான் இதன் அர்த்தம். உணவை வீணடிக்காமல் இருக்க குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்போம்... கற்றுக்கொள்வோம்.
என்ன தோழியரே... நான் சொல்வது சரிதானே!
உரிமையுடன்

ஆசிரியர்