விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 'செஞ்சிக்கோட்டை' வரலாற்று புகழ்பெற்றது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கோன் வம்ச அரசர்களால் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த கோட்டை, இன்றும் பழமை மாறாமல் தமிழ் மண்ணில் காணப்படும் பிரம்மாண்ட பொக்கிஷம்.
எனவே, இந்தக் கோட்டையின் பாரம்பரியத்தை வெளியுலகிற்கு உணர்த்தும் விதமாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் `மரபு நடை விழா' நேற்று முதல் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக செஞ்சிக் கோட்டையில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற தொடக்க விழாவில் பள்ளி சிறார்கள் மற்றும் கல்லூரி மாணவர்களைக் கொண்டு நடனம், பறையிசை வாத்தியம், மல்லர் கம்பம், சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேட்டியளித்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், "ஏழு நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களுக்கு, நுழைவு கட்டணம் இல்லாமல் கோட்டையை சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வந்து சுற்றி பார்க்கும் மக்கள், புகைப்படங்களை எடுத்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பலாம் (@DistrictColVpm - twitter பக்கத்திற்கு அனுப்பலாம்). அதில் சிறந்த 100 புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு நிறைவு விழா அன்று பரிசுகள் வழங்கப்படும். இந்த கோட்டையின் வரலாற்றை எல்லோரும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்றுதான் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன.
நிச்சயமாக ஆண்டு தோறும் இது போன்ற நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்படும். கோட்டைக்கு வரும் சாலை சற்று பழுதாக இருப்பதால், அதை சரி செய்வதற்கான செயல்முறைகள் பரிந்துரை செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. விரைவில் தரமான சாலை அமைத்து தரப்படும். மக்களின் பாதுகாப்பிற்காக போலீஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்படும்" என்றார். இந்நிலையில், மரபு நடை விழாவினை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில், ஜனவரி 14-ம் தேதி வரை காலை 10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து செஞ்சி கோட்டைக்கும், மாலை 5 மணிக்கு செஞ்சி கோட்டையில் இருந்து விழுப்புரத்திற்கும் இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

செஞ்சி கோட்டையின் சிறப்புகள் தான் என்ன? சில முக்கிய தகவல்கள் இதோ... நம் தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டியர்களின் கலைநயம் மிக்க பல கோயில்களை நாம் இன்றளவும் கண்டு மகிழ்கிறோம். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, நம் தமிழ் மண்ணான செஞ்சியில் இயற்கை பாதுகாப்பு அரண்களோடு அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அமைப்பு தான் செஞ்சிக்கோட்டை. அகழி, நீண்ட மதில்சுவர், குதிரை லாயங்கள், மாட மாளிகைகள், தர்பார் மண்டபம், கோயில்கள், தானியக் களஞ்சியங்கள், பீரங்கி மேடை, வெடிமருந்துக் கிடங்கு, பாதாள சிறை உள்ளிட்ட சகல அம்சங்களோடு பறந்து விரிந்து காணப்படும் ஆச்சரியங்கள் நிறைந்த கோட்டை.
மலை முகடுகள், காடுகள் என இயற்கை அரண் சூழ்ந்த பாதுகாப்பான செஞ்சி கோட்டையை, "கிழக்கு உலகத்தின் ட்ராய்" என ஐரோப்பியர்கள் புகழ்ந்துள்ளனர். இன்று சிறு பேரூராட்சியாக இருக்கும் செஞ்சி, ஒரு காலத்தில் ஆந்திராவின் நெல்லூரிலிருந்து தஞ்சை வரை பரவியிருந்த நெடுநிலத்தின் தலைநகராக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சுற்றிலும் நான்கு மலைகள், அவற்றின் உச்சியில் ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திராயன் துர்கம், சங்கிலி துர்க்கம் என கோட்டை காவல் அமைப்புகள். இந்த மலைகளின் மீது பிரமாண்டமான மலை பாம்பு போல நீளும் கோட்டைச் சுவர். நடுவில் திறந்தவெளி இதுதான் செஞ்சி! சுமார் 800 அடி உயரம் கொண்ட ராஜகிரி மலையில், இயற்கையாகவே அமைந்துள்ள மலைப்பிளவில் தற்காலிக பாலம் அமைத்துப் பயன்படுத்தி வந்த அரசர்கள், போர்க்காலம் எனில் அந்தப் பாலத்தை நீக்கி விடுவார்களாம். இதனால், அங்கு எதிரிகள் எளிதில் நெருங்க முடியாதவாறு திகழ்ந்துள்ளது.
செஞ்சியில் முதலில் கோட்டை கட்டி ஆண்டவர்கள் கோன் வம்ச அரசர்கள் என கூறப்படுகிறது. அதன்பின் விஜயநகர பேரரசு செஞ்சியை வெற்றி கொண்டது. சுமார் 200 ஆண்டுகள் செஞ்சியை ஆண்ட நாயக்க மன்னர்கள், கோட்டையை இன்னும் மேம்படுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பீஜப்பூர் படை, பின் மராட்டிய சிவாஜி போன்றோர் கோட்டையை தன் வசப்படுத்தியுள்ளனர். கோட்டையை மேலும் பாதுகாப்பாக மாற்றிய சிவாஜி, "மராட்டிய மண்ணில் கூட இவ்வளவு பாதுகாப்பான கோட்டை இல்லை" என பூரித்துள்ளார். பின்னர், இந்த கோட்டை மொகலாய பேரரசின் கட்டுப்பாட்டில் போனது.
செஞ்சி என்றதுமே நம்மில் பலருக்கும் முதலில் ஞாபகம் வருவது "ராஜா தேசிங்கு". ஆனால், அவர் செஞ்சியை ஆண்டது சுமார் பத்து மாதங்கள் மட்டுமே. மொகலாயர்களின் ஆளுநராக இருந்து செஞ்சியை நிர்வாகம் செய்த சொரூப் சிங் மகனே 'தேஜ் சிங்'. அவரையே காலப்போக்கில் தேசிங்கு என்றனர். சொரூப் சிங் மறைவைத் தொடர்ந்து தனது 22-வது வயதில் ஆட்சிக்கு வந்துள்ளார் தேசிங்கு. இதனை மொகலாயப்பேரரசு அங்கீகரிக்கவில்லை. அதேவேலை, சமாதானத்திற்கும் தேசிங்கு வரவில்லை. அதனால் ஆற்காடு நவாப் செஞ்சி மீது படையெடுக்க, சொற்ப நேரங்களிலேயே அவரிடம் தேசிங்கு வீழ்ந்துள்ளார்.

செஞ்சிக் கோட்டை பிரெஞ்சு கட்டுப்பாட்டில் வந்த போதுதான், பீரங்கிகள் நிறுவப்பட்டு, துப்பாக்கியால் சுடும் கூண்டுகள் கட்டப்பட்டு பாதுகாப்புகள் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் கோட்டை பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் சென்றுள்ளது. சுமார் 150 ஆண்டு காலமாக போர்களும், சூறையாடல்களுமாக நாட்கள் நகர்ந்ததால் நகர மக்கள் வெளியேறி நகரம் கலையிழந்து ஒரு சிறிய கிராமமாக செஞ்சி சுருங்கியுள்ளது. பல மன்னர்களால் ஆளப்பட்டு, பல போர்களை சந்தித்த இந்த பிரம்மாண்ட கோட்டை... இன்றளவும் பழமை மாறாமல் ஒவ்வொரு சிறு பாகங்களும் பல்வேறு ஆச்சரியங்களையும், வரலாறுகளையும் சுமந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்திலும் தம்மை தேடி வரும் வரலாற்றின் மீது காதல் கொண்டோர்களுக்காக...