கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி - நம்பிக்கை விருதுகள் விழா! - 2021

நம்பிக்கை விருதுகள் விழா
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பிக்கை விருதுகள் விழா

‘‘அப்பாவோ அம்மாவோ ஜெயிலுக்குப் போயிட்டு வந்தா அப்பன் வழியில்தான் புள்ள இருக்கும் அப்படிங்கற எண்ணம் இங்க இருக்கு, அப்படிச் சமூகம் புறக்கணிக்கிற குழந்தைகளுக்கு படிப்புதான் எல்லாத்தையும் மாத்தும்னு நினைச்சேன்

ஒரு விதையில் வளரும் ஆலமரம் எண்ணற்ற பறவைகளின் நம்பிக்கை. அதேபோன்ற நம்பிக்கையை எல்லோர் மனதிலும் விதைத்து மாற்றத்திற்கான பாதையை வெளிச்சமிட்டுக் காட்டும் மனிதர்களையும், குரலற்றவர்களின் குரலாய் ஒலித்தவர்களையும் பாராட்டி உச்சி முகர்கின்ற மேடையே ‘ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழா.' கொரோனாத் தாக்கத்தால் அரங்கத்தில் நிகழாமல் இரண்டு வருடங்களைக் கடந்துவிட்ட சூழலில் 2021, 2022 ஆண்டுகளின் நம்பிக்கை மனிதர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி 11-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தேறியது. பேனாவின் கூர்முனைகளைக் கலைநயத்தோடு காட்சிப்படுத்திய பிரமாண்டமான மேடையில், அரங்கு நிறைந்த பார்வையாளர்களோடு இரு நிகழ்வுகளும் நிகழ்ந்தேறின.

டாப் 10 மனிதர்கள் மற்றும் இளைஞர்கள் குடும்பம் குடும்பமாய் மேடைகளை அலங்கரித்தனர். அவர்களுக்கு சாதனைத் தமிழர்கள் பலர் நம் அழைப்பை ஏற்று வந்து, விருதுகளை வழங்கி மகிழ்வித்து மகிழ்ந்தனர். தெள்ளு தமிழ் உச்சரிப்பாலும், குறும்பான பேச்சாலும் இரு விழாக்களையும் தொகுப்பாளர்கள் ராஜ்மோகன், அனிதா சம்பத் இருவரும் தொய்வின்றித் தொகுத்து வழங்கினர். இந்த வாரம், 2021 நம்பிக்கை விருதுகள் விழாவிலிருந்து சில சுவாரஸ்யத் துளிகள்...

மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி - நம்பிக்கை விருதுகள் விழா! - 2021

* கர்ணன் திரைப்படத்தின் வாயிலாக ஓங்காரமெடுத்துப் பாடி நம் நாடி நரம்புகளை முறுக்கேற்றிய கிடாக்குழி மாரியம்மாள் அதே உச்சஸ்தாயியில் பாடி விழாவை இசையோடு தொடக்கி வைத்தார்.

*முதலில் மேடையேறியது கல்விச் செயற்பாட்டாளர் பேச்சிமுத்து. முதல் நம்பிக்கை விருதை அவருக்கு இளம் பகவத் ஐ.ஏ.எஸ் வழங்கினார். 2015-லிருந்து ‘கின்ஸ் அகாடமி' என்ற பெயரில் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை இலவசமாக நடத்திவரும் பேச்சிமுத்து, “எனது அகாடமியில் இதுவரை நூற்றுக்கணக்கான மாணவர்கள் தேர்ச்சிபெற்று அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களிடம் ஒரு பைசாகூட வாங்கியதில்லை. இனிமேலும் வாங்கப்போவதில்லை. வேலை பெற்று அரசுப் பணிக்குச் செல்பவர்கள் தரும் இனிப்பைத் தவிர எதையும் நான் மாணவர்களிடம் பெற்றதில்லை’’ என விருதை வாங்கிக்கொண்டு புன்முறுவலோடு சொன்னபோது அரங்கமே நெகிழ்ந்தது. ‘‘பேச்சிமுத்து ஐயா போன்றவர்களால்தான் என்னைப் போன்ற ஐ.ஏ.எஸ்-கள் உருவாவது சாத்தியமாகிறது. நமது நோக்கங்கள் தெளிவாக இருந்தால் நாம் எளிதில் வெற்றி பெறலாம்’’ என்று கூறிச் சென்றார் இளம் பகவத் ஐ.ஏ.எஸ்.

* சமூக சேவகர் டீக்கடை சிவக்குமாருக்கு இயக்குநர் அ.வினோத் நம்பிக்கை விருதை வழங்கினார். எளிமையான வார்த்தைகளால் விழாவினை நெகிழ்வாக்கினார் சிவக்குமார். ``என் ஊர் மக்கள் ரொம்ப நேர்மையானவங்க. என்கிட்ட கடன் கேட்டு டீ வாங்கினாலும் அறுவடை முடிஞ்சதும் காசைக் கொடுத்துடுவாங்க. ஆனா கஜா புயல் அவங்க நிலைமையை மாத்திப் போட்டுருச்சு. நாம ஏதாவது பண்ணணும்னுதான், அவங்க இதுவரை வச்சிருந்த கடன் எல்லாத்தையும் தள்ளுபடி பண்ணினேன்'' என்றார். அவருக்கு நம்பிக்கை விருது வழங்கிய இயக்குநர் அ.வினோத், “அப்பப்போ ஊராடா இதுன்னு தோணும். அந்த மாதிரி எண்ணங்களை இந்த மாதிரி மனிதர்கள்தான் மாத்தி, நம்பிக்கை தர்றாங்க!" என்றார்.

* சிறைத்துறை சமூக சீர்திருத்தத்துறையாக மாறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சிறைக்கைதிகளின் குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்கின்ற சீரிய பணியில் இருக்கும் கே.ஆர். ராஜா-வுக்கு கனிமொழி எம்.பி நம்பிக்கை விருது வழங்கினார். ‘‘அப்பாவோ அம்மாவோ ஜெயிலுக்குப் போயிட்டு வந்தா அப்பன் வழியில்தான் புள்ள இருக்கும் அப்படிங்கற எண்ணம் இங்க இருக்கு, அப்படிச் சமூகம் புறக்கணிக்கிற குழந்தைகளுக்கு படிப்புதான் எல்லாத்தையும் மாத்தும்னு நினைச்சேன். இப்ப எங்க மூலமா 400 பிள்ளைகள் படிச்சிட்டிருக்காங்க!'' என்று கே.ஆர்.ராஜா நெகிழ்ச்சியாகக் கூறினார்.

விருதினை வழங்கும் முன் கனிமொழிக்கு rapid fire கேள்விகள் தொகுப்பாளர்களால் முன்வைக்கப்பட்டன. வார்த்தைகளாக வரும் கேள்விகளுக்கு, மனதில் தோன்றுவதைக் கூற வேண்டும். காதல், கழகம், கடவுள், ஸ்டாலின், ஆதித்யன் என ஒவ்வொரு சொல்லுக்கும் நெகிழ்ச்சியான பதில்களைக் கொடுத்து அரங்கை அதிரவைத்தார் கனிமொழி. நிப்பான் பெயின்ட் இந்தியா நிறுவனத்தின் மனிதவளத் தலைவர் ராஜேஸ்வரி நடராஜன், கே.ஆர். ராஜாவுக்கு அன்புப்பரிசு வழங்கினார்.

* நிப்பான் பெயின்ட் நிறுவனத்தின் `N சக்தி’ திட்டம் மூலம் பயன்பெற்ற பெண்கள், தங்கள் வாழ்க்கை மாறிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

* தற்கொலைத்தடுப்புப் பிரசாரத்தைத் தொடர்ந்து செய்துவரும் நந்தினி முரளிக்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விருது வழங்கினார். தற்கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீட்கும் மகத்தான பணியைச் செய்துகொண்டிருக்கும் இவர், தானே அதிலிருந்து மீண்டு வந்த கதையை அரங்கில் சொன்னபோது அரங்கம் அமைதியானது. ‘‘இறந்த என் கணவருக்கு இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன். தற்கொலை என்பது உலகளாவிய பிரச்னை. அருகில் இருப்பவர்களின் நுண்ணிய உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்'' என்றார்.

வானதி சீனிவாசனிடம் வடிவேலு மீம்ஸ் படங்களுக்கு ஏதாவது ஒரு நபரின் பெயரைச் சொல்ல வேண்டும் என்று டாஸ்க் கொடுக்க, தனக்கே உரிய பாணியில் எதிர்கொண்டு அரங்கத்தைச் சிரிப்பொலியில் ஆழ்த்தினார்.

* பழங்குடிகள் உரிமை செயற்பாட்டாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனிடம் விருதைப் பெற்றார். ‘‘நான் மட்டும் இந்த விருதினைப் பெறுவது குற்றவுணர்ச்சி அளிக்கிறது. என்னுடன் பயணித்த அனைத்துத் தோழர்களுக்கும் இதில் பங்குண்டு!'' என்று கூறியவர், தோள் கொடுத்த தோழர்கள் அனைவரையுமே மேடையேற்றி மகிழ்ந்தார். ஒவ்வொருவரைப் பற்றியும் அவர்களின் செயல்கள் பற்றியும் உணர்வுபூர்வமாக, குதூகலத்தோடு அவர் விவரித்த காட்சி ஒரு நெகிழ்சித்திரம். பிரபா கல்விமணிக்கு, இருளர் சமுதாய இளைஞர்கள் தங்கள் மக்களின் பரிசாகத் தேன் கொடுத்தனர்.

தானும், பிரபா கல்விமணியும் கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க வீரப்பனிடம் தூது சென்றபோது நிகழ்ந்த சம்பவங்களை நினைவுப்பெட்டகத்திலிருந்து எடுத்துச் சொல்லிப் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினார் பழ.நெடுமாறன்.

நம்பிக்கை விருதுகள் விழா! - 2021 - ஆல்பம்

* தமிழ்மொழி குறித்தான ஆய்வு நூல்கள் பல எழுதிய பொ.வேல்சாமிக்கு பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் விருதினை வழங்கினார். பொ.வேல்சாமி, ‘‘விகடன் எனவோ, ஜெயகாந்தன் எனவோ தெரியாமல் நான் படித்த ஒரு சிறுகதை என்னை மிகவும் அழ வைத்தது. அங்கே இருந்துதான் நிறைய படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த விகடனிடமிருந்து விருது பெறுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்-ஸிடம், ‘‘நமது வரலாறு வடக்கிலிருந்து தொடங்குகிறதா; தெற்கிலிருந்தா?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு, ‘‘நம் வரலாற்றை ‘பிளாஷ்பேக் லிட்ரேச்சர்’ என்று கூறலாம். அந்த ஃப்ளாஷ்பேக் வைகை, பொருநை நதிக்கரை நாகரிகத்திலிருந்து தொடங்கும், அப்படிப் பார்க்கும் போது தெற்கிலிருந்துதான் தொடங்குகிறது'' என்று ஆணித்தரமாய்ச் சொன்னார்.

நெக்ஸ்ட் அட்வர்டைசிங் சொல்யூஷன்ஸ் தலைமை வணிக அதிகாரி ஜெகதீஸ் அத்தருணத்தில் உடனிருந்தார்.

* பெரம்பலூர் மாவட்டத்தில் கல்விப் புரட்சியை ஏற்படுத்திய தாரேஷ் அகமது ஐ.ஏ.எஸ்-க்கு முதல்வர் அலுவலக முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நம்பிக்கை விருதினை வழங்கினார். விருது பெற்ற தாரேஷ் அகமதுவுக்கு ஆச்சர்யம் ஏற்படுத்தும் வகையில் அவர் கொண்டு வந்த ‘சூப்பர் 30' திட்டத்தில் பயன்பெற்ற 7 மாணவர்கள் மேடையேறி தங்கள் நன்றியைத் தெரிவித்தனர். மேலும் ‘‘தாரேஷ் அகமது சார் பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டராக இருந்தபோது மாணவர்களோடு மாணவராக அமர்ந்து மேற்பார்வையிடுவார். சின்னப் பிரச்னை என்றாலும் களத்தில் வந்து அதற்கான நடவடிக்கை எடுப்பார்’’ என்று அந்த மாணவர்கள் நெகிழ்ச்சியோடு கூறினர். ``நான் மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தபோது தாரேஷ் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி தேர்தல் பணியில் உதவி கலெக்டராகப் பயிற்சியைத் தொடங்கினார். பதினாறு அடி பாயும் தீரர். அவரின் வளர்ச்சி எனக்கு பர்சனலாக பெருமை!'' என்றார் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.

* தொழில் முனைவோர் கிரிஷ் மாத்ருபூதத்துக்கான விருதை, அவரது நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி சுமன் கோபாலனிடம் விகடன் குழும மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் வழங்கினார். ‘‘உலகத்தரம் வாய்ந்த திறமைசாலிகள் தமிழ்நாட்டிலேயே உள்ளனர். ஆகையால் தமிழ்நாட்டை ‘புராடக்ட் நேஷன் ஆஃப் தி வேர்ல்டு’-ஆக மாற்ற வேண்டும்'' என்று கூறிய சுமன் கோபாலனை வாழ்த்தினார், பா.சீனிவாசன்.

* ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் விருது பெற்றார். தனது சொந்த ஊரான லால்குடியில் இருக்கும் மைதானம் பராமரிப்பின்றி புல்லும் கல்லும் வளர்ந்துள்ளதாகத் தெரிவித்த அவர், “மைதானத்தை சரிசெய்து சுற்றிலும் கேலரி அமைத்துத் தர வேண்டும் என்று விகடன் மேடையிலிருந்து அரசுக்குக் கோரிக்கை விடுக்கிறேன்!'' என்றார்.

அமைச்சர் ஜெயக்குமாரிடம் சில படங்களைக் காட்டி அவருக்குத் தோன்றும் பாடலைப் பாடச் சொன்னார் தொகுப்பாளர். சடுதியில் பாடி அரங்கைச் சிரிப்பில் ஆழ்த்தினார் ஜெயக்குமார்.

* தீ விபத்தொன்று மருத்துவமனையில் நிகழ்ந்துவிட, கரும்புகை சூழ்ந்த வேளையிலும் தன்னுயிரைத் துச்சமாக நினைத்து நூற்றுக்கணக்கான பச்சிளம் குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றிய முன்மாதிரி செவிலியர் ஜெயக்குமாருக்கு சபாநாயகர் அப்பாவு விருது வழங்கினார். ‘‘விகடன் விருதை என் மகளுக்கும், மனைவிக்கும் சமர்ப்பிக்கிறேன்’’ என்று நெகிழ்ந்தார் ஜெயக்குமார். ‘‘97 வருட பாரம்பர்யமிக்க விகடனைப் படிப்பவர்கள் இந்தச் சமூகத்தை சரியாகப் புரிந்துகொள்வார்கள். தவறுகளைத் தட்டிக் கேட்பதும், அதைத் துணிச்சலாக வெளியிடுவதுமே விகடன் வரலாறு. ஒரு கார்ட்டூனுக்காக அன்றைய ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டதும், இரண்டு நாள்களில் விடுதலை ஆனதும் வரலாற்று நிகழ்வுகள். இன்றும் தவறு செய்பவர்கள், ‘ஜு.வி-யில் வந்துவிடுவோமோ?' என்று பயப்படுவார்கள். சாமானிய மக்களுடன் பயணித்து வருகிற விகடனுக்கு வாழ்த்துகள்’’ என்று சபாநாயகர் அப்பாவு வாஞ்சையோடு சொன்னார்.

* சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்து ஆஸ்கர் வரை சென்ற ‘கூழாங்கல்' திரைப்பட இயக்குநர் வினோத் ராஜுக்கு நடிகர் சூரி விருது வழங்கினார். ‘‘நான் படிக்கல, திருப்பூர்ல குழந்தைத் தொழிலாளரா இருக்கும்போது அங்கே இருக்குற சூப்பர்வைசர் ஒரு புத்தகத்தைப் படிச்சிட்டிருப்பார். நானும் வாங்கி எழுத்துக்கூட்டி வாசிக்க ஆரம்பிச்சேன். அன்னிக்கு நான் அப்படி வாசிச்சது ஆனந்த விகடன் இதழ்தான். இப்போ அதே விகடன்கிட்ட இருந்து விருது கிடைச்சது ரொம்ப சந்தோஷம்’’ என்றார் வினோத்ராஜ்.

‘‘இந்தத் தம்பியினால தமிழ் சினிமா இந்திய அளவுலயும், இந்திய சினிமா உலகளவுலயும் புகழடையப்போகுது. அடுத்த வருடம் தம்பி மீண்டும் விகடன் மேடை ஏறுவாரு பாருங்க’’ என்ற சூரி, தான் கஷ்டப்பட்ட காலங்களில் ஆனந்த விகடன் மூலம் அடைந்த ஒரு பலனைச் சொல்ல, பார்வையாளர்கள் சிலிர்த்தனர்.

* சூரிய ஒளியில் இயங்கும் இஸ்திரி வண்டியைத் தயாரித்த மாணவி வினிஷா உமாசங்கருக்கு, சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ் விருது வழங்கினார். மாணவி தன் தந்தையை அழைத்துவந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.

* தமிழகத்தின் டெல்டா பகுதியில் நூற்றுக்கணக்கான நீர்நிலைகளை மீட்டுருவாக்கம் செய்துகொண்டிருக்கும் கைஃபா அமைப்பினருக்கு நடிகர் விமல் விருது வழங்கினார். ‘‘தஞ்சாவூர் தாண்டி திருச்சி வரை நெருங்கி வந்துவிட்டோம் இன்னும் ஐந்து வண்டிகள் மட்டும் இருந்தால் தமிழகத்தில் இருக்கும் அனைத்து நீர்நிலைகளையுமே தூர்வாரிவிடுவோம்!" என்று நம்பிக்கையோடு கைஃபா இளைஞர்கள் சொல்லச் சொல்ல சிலிர்ப்பனுபவமாய் இருந்தது.

மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி - நம்பிக்கை விருதுகள் விழா! - 2021

‘‘ `விலங்கு’ சீரிஸ் இவ்வளவு வரவேற்பைப் பெறும்னு நினைக்கல. கிராமம் வரை ரீச் ஆகியிருக்கு. எனக்கு விருது கொடுக்குற அங்கீகாரத்தை அளித்த விகடனுக்கு நன்றி’’ என்ற நடிகர் விமல், ‘‘திருச்சி வரை வந்துட்டீங்க... எங்க ஊர் மணப்பாறை வரை வந்து நீர்நிலைகளை கைஃபா தூர்வாரிக் கொடுக்கணும்’’ என்று அன்புக் கோரிக்கை வைத்தார். அதை ஆன் தி ஸ்பாட் ஏற்றுக் கொண்டு கரவொலியில் நனைந்தனர் கைஃபா குழுவினர்!

* சயீத் முஷ்டாக் போட்டியில் தமிழக அணியை வெற்றி பெறச் செய்த இளம் கிரிக்கெட் வீரர் ஷாரூக்கான் விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை. ஷாரூக் சார்பாக அவரின் தாயார் விகடன் குழும மேலாண் இயக்குநர் சீனிவாசன் அவர்களிடம் விருதினைப் பெற்றுக்கொண்டு விகடனுக்கு நன்றி கூறினார்.

* ஆதரவற்ற பிணங்களை, பொறுப்பேற்று அடக்கம் செய்யும் மீனா சத்தியமூர்த்திக்கு சென்னை மேயர் பிரியா விருது வழங்கினார். ‘‘என் அப்பா அம்மாவை அடக்கம் செய்வதைப் போலத்தான் ஒவ்வொருவரின் அடக்கத்தையும் செய்கிறேன். இதனை வாழ்நாள் முழுமைக்கும் தொடர்ந்து செய்யப்போகிறேன்" என்று கூறினார் மீனா. ‘‘அடுத்த மழைக்காலத்தில் எங்கும் தண்ணீர்தேங்கி நிற்காமல் இருக்க வேண்டும் என்பதே நோக்கம். அதை நோக்கிப் பயணிக்கப்போகிறேன்!'' என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் மேயர்.

* நடிகர் மணிகண்டனுக்கு இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி இருவரும் சேர்ந்து விருது வழங்கினர். ‘‘மணிகண்டனுக்குள் ஒரு பெரிய இயக்குநர் ஒளிந்திருக்கிறார். சூப்பரான ஸ்கிரிப்ட் வைத்திருக்கிறார். சீக்கிரமே இயக்குநராக அவர் கால்ஷீட் கொடுக்க வேண்டும்!" என்று புஷ்கர்-காயத்ரி தம்பதி அவரிடம் கோரிக்கை வைத்தார்கள். பதிலுக்கு, தன்னை நம்பி விக்ரம் வேதா திரைப்படத்தின் வசனம் எழுதும் பொறுப்பை ஒப்படைத்ததற்கு நன்றி கூறினார் மணிகண்டன். விக்ரம் வேதா படத்தில் வரும், ‘ஒரு கதை சொல்லட்டா சார்?' என்னும் வசனத்தை ஜனகராஜ் - டெல்லி கணேஷ் பேசியிருந்தால் எவ்வாறு இருக்கும் என்று மிமிக்ரி செய்து காட்டினார். இந்த மனிதருக்குள் இவ்வளவு திறமையா என பலர் வியந்தனர்.

* மாற்றத்திறனாளியாக இருந்து ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, இப்போது பாலக்காட்டில் சப்-கலெக்டராக இருக்கும் ரஞ்சித்குமார் ஐ.ஏ.எஸ்-க்கு, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ் விருது வழங்கினார். தன் பெற்றோரை மேடைக்கு அழைத்த ரஞ்சித் குமார், ‘‘அவர்கள் மட்டும் இல்லை என்றால் நான் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றிருக்க முடியாது’’ என்றார். ‘‘சின்ன வயசிலேயே அவருக்குக் காது கேட்காதுன்னு தெரிஞ்சது. அப்போதிருந்து லிப் மூவ்மென்ட் பிராக்டிஸ் கொடுத்துட்டு வர்றோம். கல்லூரி முடிச்ச பிறகு மாற்றுத்திறனாளிகளும் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதலாம்னு தெரிஞ்சுச்சு. உடனே அதுக்கான பயிற்சியை ஆரம்பிச்சோம், முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றிருக்கார். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு’’ என்று கூறி விகடன் விருதுகளுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார் ரஞ்சித்தின் அம்மா.

* சொல்லிசைக் கலைஞர் அறிவுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் கட்டியணைத்து நம்பிக்கை விருதினை வழங்கினார். விருதைப் பெற்றுக்கொண்ட அறிவு வேங்கைவயல், இந்தி, தமிழ்நாடு போன்ற வார்த்தைகளுக்குப் பொருத்தமான பாடலைப் பாடினார். குறிப்பாக ‘குடிக்கின்ற நீரில் மிதக்கின்ற சாதி’ என்று பாடவும் அரங்கில் மௌனம் நிலவியது. ‘நம்பிக்கை’ என்ற வார்த்தைக்கு அவரிடம் பாடல் கேட்டதற்கு, ‘‘குக்கூ குக்கூ’’' என்று அவர் பாட, ‘‘தாத்தா தாத்தா களவெட்டி’' என்று கோரஸாய் அரங்கில் இருந்த குழந்தைகள் உட்பட பெரியவர்கள் வரை எசப்பாட்டுப் பாட, அகமகிழ்ந்து, ‘‘இதுதான் என் நம்பிக்கை’’ என்று பஞ்ச் வைத்து அப்ளாஸ் அள்ளினார்.

அறிவை முதன்முதலில் தனக்கு பா.இரஞ்சித் அறிமுகப்படுத்திய அந்தக் கணத்தை நினைவுகூர்ந்த மாரிசெல்வராஜ், ‘‘சமகால தமிழ்ச் சூழலில் சொல்லிசையை மிக நேர்த்தியாக, கலையின் அடர்த்தியோடு சமூக நீதிக்காக ஓங்கி ஒலிக்குற ஒரு குரலா நான் தம்பி அறிவைப் பார்க்கிறேன். அறிவுடைய வளர்ச்சியும் சமூக அக்கறையும் பிரமிக்க வைப்பவை’’ என்று வாழ்த்திய மாரி செல்வராஜ், அண்மையில் மறைந்த தெருக்கூத்துக்கலைஞர் நெல்லை தங்கராஜின் மறைவு எந்த அளவுக்குத் தன்னை பாதித்தது என்பதைச் சொல்லி நெகிழ்ந்தார்.

* விருது பெற்ற அறிவு, ஆரோக்கிய ராஜீவ் இருவருக்கும் சென்னை சில்க்ஸ் நிறுவன இயக்குநர் கார்த்திக் அன்புப்பரிசு வழங்கினார்.

* கொரோனா காலகட்டத்தில் ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்து மக்களுக்குப் பல உதவிகள் செய்த வியாசை தோழர்கள் அமைப்பினருக்கு ‘பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன் விருது வழங்கினார். அரங்கம் அதிர விருதைப் பெற மேடை ஏறிய அவர்கள் அனைவரும் அம்பேத்கர் மாஸ்க் அணிந்திருந்தனர். ‘‘கண்கொள்ளாக் காட்சி... எத்தனை அம்பேத்கர் ஒரே மேடையில் நிற்கிறார்கள்’’ என்று கூறி தொகுப்பாளர் ராஜ்மோகன் கைதட்ட, அரங்கமே எழுந்து கைதட்டியது. ‘‘எங்களில் பலர் முதல் பட்டதாரிகள். ஆட்டோ ஓட்டிக்கொண்டே படித்து இப்போது வழக்கறிஞராக இருக்கிறோம். தொடர்ந்து எங்கள் பகுதியில் கல்விக்கான முக்கியத்துவத்தைக் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்து, கல்வி மட்டும்தான் சமத்துவம் உண்டாக்கும் என்பதை உணர்த்திவருகிறோம். வியாசர்பாடி மக்களுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த வடசென்னை மக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறோம்'' என்று கூறினர்.

* லிடியனின் இசைக்கச்சேரி செவிக்கு விருந்தளிக்க, மதிய உணவுடன் விகடன் வாசகர்களின் அன்பினாலும் விருதாளர்களின் உள்ளார்ந்த மகிழ்ச்சியினாலும் ஆனந்த விகடன் 2021 நம்பிக்கை விருதுகள் விழா இனிதே நிறைவடைந்தது.

(அடுத்த வாரம், ஆனந்த விகடன் 2022 நம்பிக்கை விருதுகள் விழா நிகழ்வின் சுவராஸ்யத் துளிகள்...)