Published:Updated:

மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி - நம்பிக்கை விருதுகள் விழா! - 2022

மூத்த படைப்பாளி பூமணிக்கு  ‘பெருந்தமிழர் விருது’
பிரீமியம் ஸ்டோரி
News
மூத்த படைப்பாளி பூமணிக்கு ‘பெருந்தமிழர் விருது’

“என் மவள நினைக்காத நாளே இல்ல. ஆனா இன்னும் நியாயம் கிடைக்கல. அம்மா தைரியமா எங்க நியாத்துக்காகப் போராடுனதுக்கு நன்றி!”

2022-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழா, ராஜ்மோகன், அனிதா சம்பத் இருவரும் தொய்வின்றித் தொகுத்து வழங்க, சென்னை கலைவாணர் அரங்கில் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக நடந்தேறியது. விழாவிலிருந்து சில சுவாரஸ்யத் துளிகள்...

* முதல் நிகழ்ச்சியாக ‘தமிழ் ஓசை’ எனும் சங்கத்தமிழிசையைத் தன் குழுவினருடன் பார்வையாளர்களுக்கு விருந்தாக்கினார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். பார்வையாளர்களையும் ஆட்டம் பாட்டத்தில் சேர்த்துக்கொண்டு கொண்டாட்டமாக நிகழ்வைத் தொடங்கியது புத்துணர்வு அளித்தது.

* இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமத்தின் (Council of Scientific and Industrial Research - CSIR) தலைமை இயக்குநர்... தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் என்.கலைச்செல்விக்கு முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நம்பிக்கை விருதை வழங்கினார். “தமிழனின் நம்பிக்கையில் அறிவியலும் இடம் பிடித்திருக்கிறது. அறிவியலால் இந்த உலகைத் தமிழன் ஆளவேண்டும்” என்ற தன் கனவினை வெளிப்படுத்திய கலைச்செல்வி, அதைச் சாத்தியமாக்கிய ஒரு செய்தியையும் மேடையில் வெளியிட்டார்.

நம்பிக்கை விருது
நம்பிக்கை விருது

“இரு தினங்களுக்கு முன் ஜம்மு காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இயற்கை நம்மை அமோகமாக ஆசீர்வதித்திருப்பதைக் காட்டுகிறது. லித்தியம் பேட்டரி மூலம் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டுக்கு நாம் முழுமையாக மாறிடும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்றார். அவருக்கு விருது வழங்கிய டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தனது பணிக்காலத்தில் தொடங்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு தேர்தல் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

* விழாவின் மிக முக்கிய விருதான ‘பெருந்தமிழர் விருது’ மூத்த படைப்பாளி பூமணிக்கு வழங்கப்பட்டது. அவருக்கு கவிஞர் கலாப்ரியா, எழுத்தாளர் சோ.தர்மன், எழுத்தாளர்-நடிகர் வேல ராமமூர்த்தி, கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, விகடன் குழும மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து, விகடன் வழங்கிய ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையுடன் ‘பெருந்தமிழர்’ விருதை வழங்கி நெகிழ்ந்தார்கள்.

விகடன் குழும மேலாண் இயக்குநர் சீனிவாசன், “நூற்றாண்டை நோக்கிச் செல்லும் ஆனந்த விகடன், சிந்தனையால், எழுத்தால், சொல்லால் தமிழ்ச் சமூகத்துக்குப் பெருமை சேர்த்த ஆளுமைகளை கௌரவித்து வருகிறது. அந்த வகையில் கரிசல் இலக்கியத்தைத் தமிழ் மண்ணில் பரவச் செய்த எழுத்தாளர் பூமணியைப் பெருமைப்படுத்துகிறோம்” என்று கூறினார்.

“இந்த விருது மிகவும் பொருத்தமானவருக்குச் சென்று சேர்ந்திருக்கிறது” என்றார் வேல ராமமூர்த்தி. “கரிசல் எழுத்துகளின் முன்னத்தி ஏர் ‘கி.ரா’ அவர்களின் வழித்தோன்றலாக பூமணி இருக்கிறார்” என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார் கலாப்ரியா. “கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இவருடைய எல்லா முயற்சிகளிலும் ஒன்றாகப் பயணித்துள்ளேன் என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது!” என்று புளகாங்கிதத்தோடு கூறினார் ட்ராட்ஸ்கி மருது. “ஆசிரியருக்கு மாணவர்கள் சேர்ந்து விருது அளிக்கும் அபூர்வமான இந்நிகழ்வு ஆனந்தம்தான். இவருடைய நிழலில்தான் நாங்கள் பிறந்து வளர்ந்தோம்” என்று புகழாரம் சூட்டினார் மனுஷ்யபுத்திரன்.

“எங்கயோ இருந்தேன். என்னைத் தேடிக் கண்டுடிச்சுக் கூட்டிட்டு வந்துட்டாங்க!” என்று வாஞ்சையோடு் நன்றிகூறி பலத்த கைத்தட்டலோடு விருதைப் பெற்றுக்கொண்டார் எழுத்தாளுமை பூமணி.

* நெய்தல் நில மக்களின் வாழ்வியலையும் அறிவியலையும் தொடர்ந்து தன் படைப்பில் முன்வைக்கும் வறீதையா கான்ஸ்தந்தினுக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் விருது வழங்கினார். சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிர்வாக இயக்குநர் வைஷ்ணவி சங்கர் வறீதையாவுக்கு அன்புப்பரிசு வழங்கினார்.

வறீதையா கான்ஸ்தந்தின், “குரலற்ற கடலோடி மக்களுக்காக நான் வாங்கும் விருது இது. இதை என் மகள் நான்சிக்கு சமர்ப்பிக்கிறேன். மேலும் சமவெளி நில மக்கள் மீனவர்களுக்குத் தரும் விருதாக இதனைப் பார்க்கிறேன்“ என்று கூறினார். எழுத்தாளர் பெருமாள் முருகன், தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்ட அனுபவத்தைக் கூறிச் சென்றார்.

நம்பிக்கை விருது
நம்பிக்கை விருது

* வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மணல் கொள்ளையால் பாதிக்கப்பட்ட உள்ளி என்ற கிராமத்தில், குறுங்காட்டை உருவாக்கி பசுமையை மீட்டெடுத்த ஸ்ரீகாந்த்துக்கு, மறைந்த நடிகர் விவேக் அவர்களின் மனைவி அருள்செல்வி விவேக் விருது வழங்கினார். தன் அண்ணனின் அகால மரணத்துக்குப் பின்னர் அவர் உடல் உறுப்புகளை தானம் செய்த விஷயத்தைச் சொல்லி, அவர் நினைவாக மரங்கள் வளர்க்க ஆரம்பித்ததாகவும், 25 ஏக்கரில் நடைபெற்ற மணற்கொள்ளையைத் தடுத்திருப்பதாகவும் கூறி நெகிழ வைத்தார் ஸ்ரீகாந்த்.

“என் கணவரிடம் கலாம் ஐயா ஒரு கோடி மரங்கள் நடும் பணியினைக் கொடுத்திருந்தார். அவர் வாழ்நாளில் 37 லட்சம் மரங்களை நட்டுள்ளார். தேசியச் சுற்றுச்சூழல் நிறுவனத்தோடு இணைந்து நான் இப்போது அப்பணியினைத் தொடர்கிறேன்” என்று நெகிழ்ச்சியோடு கூறினார் அருள்செல்வி விவேக்.

* தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த வழக்குரைஞர் ப.பா.மோகனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விருது வழங்கினார். துள்ளலாக மேடையேறி வந்த ப.பா.மோகன் திருமாவைக் கட்டியணைத்து, “மக்களின் நம்பிக்கையாக இருக்கும் ஒருவரிடமிருந்து நம்பிக்கை விருது வாங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

“தலித் அல்லாத ஒருவர் தலித் மக்களுக்கு நீதியை வாங்கித் தந்திருக்கிறார். இதுதான் சமூக நீதியைப் பெறுவதற்கான சமத்துவ வழி. சமத்துவத்தை ஏற்றுக்கொண்டால் சாதி உதிர்ந்துபோகும்!” என்று கணீர் குரலில் முழங்கினார் தொல்.திருமாவளவன். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் வழக்குக்கு உறுதுணையாக இருந்த வழக்கறிஞர் பார்த்திபன், கோகுல்ராஜின் தாயார், சகோதரர் மூவரும் மேடையில் இருந்தார்கள். மோகனுக்கு விருது வழங்கும்போது ‘ஜெய்பீம்’ முழக்கமும், ‘லால் சலாம்’ என்ற வாழ்த்தொலியும் அரங்கத்தை நிறைத்தன.

நம்பிக்கை விருதுகள் விழா! - 2022 -ஆல்பம்

* சதுரங்கப் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா, குகேஷ் மற்றும் போல்வால்ட் வீராங்கனை ரோஸி மீனா பால்ராஜ் ஆகியோருக்கு தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விருது வழங்கினார். குகேஷ் நேரில் வந்திருந்தார். மற்ற இருவரின் சார்பாக அவர்களின் பெற்றோர் விருதினைப் பெற்றுக்கொண்டனர்.

“கஜகஸ்தான்ல விளையாடிட்டிருக்கிற என் பொண்ணு விகடன் மேடையில சொல்லச் சொன்ன மெசேஜ்: மைதானத்துல விளையாடுங்க... போன்ல லூடோ மாதிரியான கேம் விளை யாடாதீங்க...” என்று ரோஸி மீனாவின் தந்தை பால்ராஜ் மேடையில் பெருமிதத்தோடு கூறினார்.

விருதினை வழங்கிய ஆதவ் அர்ஜுனாவிடம், ‘விளையாட்டுத் துறையில் வீரராகத் தொடராமல் நிர்வாகத்தில் நுழைந்தற்கான காரணம் என்ன?’ என்ற கேள்வியை எழுப்பினார்கள் தொகுப்பாளர்கள். தான் பார்த்த இரண்டு வீரர்களின் தற்கொலைகள் தன் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்று குறிப்பிட்ட அர்ஜுனா, “நான் சங்கத்தின் தலைவரான பிறகு சிபாரிசு மூலம் ஒரு வீரரைக்கூடத் தேர்வு செய்யவில்லை. சிறுவயதிலிருந்து விளையாட்டு, அரசியல் என இரண்டுமே என் வாழ்க்கையில் இருந்து வருவதால் அதிகாரத்தில் இருந்து மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று விரும்புகிறேன். விளையாட்டு வீரர்களுக்கான 3% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கிறேன்” என்றார். ஆதவ் அர்ஜுனாவின் விளையாட்டு சேவைகளை அங்கீகரித்து விகடன் குழும மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் நினைவுப் பரிசு வழங்கினார்.

* திருநங்கை தொழில்முனைவோர் மர்லிமா முரளிதரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா விருது வழங்கினார். “இந்த வருடம் எனக்கு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இப்போதுதான் முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் இருந்து சிறந்த திருநங்கை விருது பெற்றேன். அடுத்து விகடன் விருது பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என் பெற்றோர் என்னை வெறுக்காமல் ஆதரித்தனர். அதுபோல அனைவரும் இருந்தால் திருநங்கைச் சமூகம் இன்னும் பல சாதனைகளைச் செய்யும்” என்றார் மர்லிமா.

“கிரிமினல் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை அதிகார வரம்பை விரிவுபடுத்துவது தொடர்பாக 70-ல் ஒரு தனிநபர் மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர், 45 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங் களவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தனிநபர் மசோதா, நான் கொண்டுவந்த ‘திருநங்கையர்களின் உரிமைகள் தொடர்பான மசோதாதான்... அதற்கான விதை, தமிழ்நாட்டில் திருநங்கைகள் நல வாரியம் உருவாக்கிய கலைஞரின் தொலைநோக்குச் சிந்தனைதான். அதை நான் வியந்து பார்க்கிறேன்” என்று நெகிழ்ந்தார் திருச்சி சிவா.

* மாணவர்களைப் போலவே சீருடை அணிந்து அவர்களுக்குப் பாடம் சொல்லித் தரும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு நடிகை தேவயானி விருது வழங்கினார். “என்னை மாணவர்களில் ஒருவராக அவர்கள் ஏற்றுக்கொள்ள வசதியாகத்தான் இந்த சீருடையை அணிந்துகொண்டேன். தோழமையோடு சரியான வழிகாட்டுதலை வழங்கிவிட்டால் மாணவர்கள் நல்ல நிலைக்கு வந்துவிடுவார்கள்” என்று முத்தாய்ப்பாகக் குறிப்பிட்டார் ராமச்சந்திரன்.

* காவலர்களின் மறைவால் தவிக்கும் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் செயல்படும் ‘காவலர் உதவும் கரங்கள் 2003 குழு’வுக்கு சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விருது வழங்கினார். 2003 பேட்ஜைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மேடையேறி ஆணையர் கரங்களால் பெருமிதத்தோடு விருதைப் பெற்றார்கள். 2003-ம் ஆண்டு பணியில் இணைந்த ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சமூக ஊடகங்கள் வழியாக குழுவாக இணைந்து இதுவரை 10 கோடி ரூபாய் அளவுக்கு உதவி செய்துள்ளதாகக் கூறி, மேடையிலே ஒரு குடும்பத்திற்கு 29.05 லட்சத்துக்கான காசோலையைக் கொடுத்தனர். “எங்கள் குடும்பத்திற்கு நான் விருது கொடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது!” என்று காவல் ஆணையர் குறிப்பிட்டார். காவலர்களால் அரங்கமே விழாக்கோலம் பூண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

* தூத்துக்குடித் துப்பாக்கிச் சூடு தொடர்பான அறிக்கையை அளித்து நம்பிக்கையேற்படுத்திய நீதியரசர் அருணா ஜெகதீசனுக்கு, ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான 5 பேரின் குடும்பத்தினர் விருதினை வழங்கினர். “இந்த விசாரணையைத் தொடங்குவதற்குமுன் என் கணவர்தான் நம்பிக்கை அளித்தார். ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று விசாரணை செய்து அறிக்கையை சமர்பித்தேன். எனக்கு பலமாக இருந்த தூத்துக்குடி மக்களுக்கும் என் குடும்பத்தினருக்கும் நன்றி” என்றார் அருணா ஜெகதீசன்.

அடுத்து பேசிய, துப்பாக்கிச்சூட்டில் பலியான ஸ்னோலினின் தாயார், “என் மவள நினைக்காத நாளே இல்ல. ஆனா இன்னும் நியாயம் கிடைக்கல. அம்மா தைரியமா எங்க நியாத்துக்காகப் போராடுனதுக்கு நன்றி!” என்றார். உயிரிழந்த ரஞ்சித்குமாரின் உறவினர் கைக்குழந்தையோடு தங்கள் குடும்பம் எதிர்கொண்ட துயரத்தைப் பேசியது கண்களைக் குளமாக்கியது. மேலும் தூத்துக்குடியில் இறந்தவர்களுக்காக நினைவுச் சின்னம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இவ்விருதினை வழங்கும்போது அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.

* பாலினச் சமத்துவம், பெண்ணுரிமை எனத் தொடர்ந்து களமாடும் இளம் வழக்கறிஞர் திலகவதிக்கு வழக்கறிஞர் அருள்மொழி விருது வழங்கினார். முதன்முதலாக விகடன் வாசித்த பேருந்துப் பயணத்தை நினைகூர்ந்து, “என்னோட வாசிப்புக்குத் துணையா இருந்தது ஆனந்த விகடன், ஜூனியர் விகடன்தான். அந்த விகடன்ல இப்போ விருது கிடைச்சது மகிழ்ச்சியா இருக்கு!” என்று நெகிழ்ந்தார் திலகவதி.

“இங்கு கல்வி இருக்கு, வேலை இருக்கு. கூடவே ஆணாதிக்க மனப்பான்மையும் இருக்கு. 8 மணிக்கு மேல ஒரு பெண் வீட்டுக்கு வரலைன்னா யாரைப் பார்த்து பயப்படுறோம்... சிங்கம் அடிச்சுருக்கும், புலி அடிச்சிருக்கும்னா..? இல்ல, சக மனுஷனப் பார்த்துதான் பயமா இருக்கு. இந்த நிலை மாறணும். அதுக்கு பல திலகவதிகள் உருவாகணும்” என்றார் அருள்மொழி தீர்க்கமாக.

நம்பிக்கை விருது
நம்பிக்கை விருது

* தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தியும் பொதுநல வழக்குகள் போட்டும் பல மருத்துவமனைகளை மேம்படுத்திய செயற்பாட்டாளர் மதுரை வெரோணிக்கா மேரிக்கு இயக்குநர்-நெறியாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் விருது வழங்கினார்.

“மதுரையில் பிரத்யேகமாக குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றை அமைக்கவேண்டும். ஸ்மார்ட் பள்ளிகள் உருவாக்குவது போல் அரசு ஸ்மார்ட் மருத்துவமனைகளை உருவாக்கவேண்டும் என்று மேடையில் கோரிக்கை வைத்தார் வெரோணிக்கா மேரி. தான் இயக்கும் திரைப்படம் பற்றிப் பகிர்ந்துகொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன், வெரோணிக்கா மேரியின் பணியை வெகுவாகப் பாராட்டினார்.

* தாய் தந்தையை நோய்க்குப் பறிகொடுத்த துயரைக் கடந்து மருத்துவப் படிப்பை முடித்து ராணுவத்தில் சேவையாற்றும் மேஜர் கிருஷ்ணவேணிக்கு பூர்ணிமா பாக்யராஜ் விருது வழங்கினார்.

“அகரம் அமைப்பு மூலமாதான் படிச்சேன். அங்கே எனக்குக் கத்துக்கொடுத்தது ஒண்ணுதான், ‘உனக்கான பாதைய நாங்க உருவாக்கிக் கொடுத்துட்டோம். அடுத்து வர்ற குழந்தைகளுக்கு நீ ஒளியா இருந்து வழிகாட்டு...’ இப்ப அதைத்தான் பண்ணிட்டு இருக்கேன்” என்று நன்றி நவின்றார். மேலும் விருது மேடைக்கு தன் சகோதரரையும், அகரம் பணிகளை வழிநடத்தும் இயக்குநர் த.செ.ஞானவேலையும் அழைத்தார். “அகரம் விதைகள் வீரியமாக இருக்கும் என்பதற்கு கிருஷ்ணவேணியே சாட்சி” என்றார் த.செ. ஞானவேல்.

* தமிழ்வழி மருத்துவக் கல்வி சாத்தியமெனத் தொடர்ந்து அதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் மருத்துவர் சு.நரேந்திரனுக்கு தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருது வழங்கினார். தன்னை ‘அறுத்துவன்’ (Surgeon) என அறிமுகப்படுத்திக்கொண்ட மருத்துவர் நரேந்திரன், ‘‘தமிழ்நாட்டில் தமிழ்தான் மருத்துவக் கல்வி மொழி என்னும் நிலை வரும் காலம் தொலைவில் இல்லை” என்றார். “இப்போது ஐந்து சர்வதேச மருத்துவ நூல்களைத் தமிழக அரசு மொழிபெயர்த்திருக்கிறது. இது மிகப் பெரும் சாதனை. மேலும் 21 நூல்கள் விரைவில் வரவிருக்கின்றன” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். மருத்துவர் நரேந்திரனுக்கு கீதம் வெஜ் ரெஸ்டாரன்ட் நிர்வாக இயக்குநர் முரளி அன்புப்பரிசு வழங்கினார்.

* சாதி, மத, பாலின வேறுபாடின்றி, கிராமசபை எனும் அமைப்பை வலுப்படுத்தி முன்னுதாரணமாக விளங்கும் கம்பூர் கிராம இளைஞர்களுக்கு இயக்குநர் பாண்டிராஜ் நம்பிக்கை விருது வழங்கினார். “கொட்டாம்பட்டியில் இருந்த எங்களை தலைநகருக்கு அழைத்து வந்து விருது தந்த விகடனுக்கு நன்றி. இந்த விருதை கம்பூர் மக்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறோம்!” என்று அந்த இளைஞர்கள் நெகிழ்ந்தனர். இளைஞர்களை வாழ்த்தி மகிழ்ந்தார் பாண்டிராஜ்.

* நாட்டு மாடுகளைப் பாதுகாப்பது, நாடோடிகளாக வாழும் கீதாரிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள ‘தொழுவம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பெரி.கபிலனுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விருது வழங்கினார். “மதுரையில் 20 தன்னார்வலர்கள் இணைந்து கிடைமாட்டுப் பண்ணை மற்றும் ஆய்வகத்தை உருவாக்கி யிருக்கிறோம். பாரம்பர்ய மேய்ச்சல் வழித்தடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்!” என்றார் பெரி.கபிலன்.

“ஆவின் இங்கிருக்கு. ஆனால் அதுக்கான பால் ஆந்திராவிலிருந்து வருது. ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல... வருமானம். அதைத்தான் அன்புத் தம்பி கபிலன் செய்கிறார். அவருக்கு விருது கொடுப்பதைப் பெருமையாக நினைக்கிறேன்!” என்றார் சீமான்.

* கிராமப்புற மாணவர்களைத் தேடிப்பிடித்து, உதவித்தொகை தந்து பயிற்சியளித்துத் தன் நிறுவனத்தில் பணியளிப்பதோடு, அவர்களின் தலைமைத்துவத்தையும் வளர்த்தெடுக்கும் செந்தில்குமாருக்கு விருது வழங்கினார் தொழில் அதிபரும் எழுத்தாளருமான சுரேஷ் சம்பந்தம். “இப்போது 10 இடங்களில் 420 ஊழியர்களோடு இருக்கும் என் நிறுவனம், 5,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்க உதவியிருக்கிறது” என்று பலத்த கரவொலிகளுக்கிடையே சொன்னார் செந்தில்குமார். ‘‘சமீப காலத்தில் கிராமங்களை நோக்கித் தொழில்முனைவோர்களின் கவனம் திரும்பியிருப்பது வரவேற்கத்தக்கது’’ என்றார் சுரேஷ் சம்பந்தம்.

* பார்வைச் சவால் உள்ள பேராசிரியர் ரகுராமன் பன்னாட்டு நிறுவனங்களில் பல மாற்றுத் திறனாளிகளைப் பணியமர்த்தி, அவர்கள் வாழ்க்கைத்தரம் உயரப் பாடுபட்டு வருபவர். அவருக்கு இயக்குநர் மிஷ்கின் கன்னத்தில் முத்தமிட்டு விருதை வழங்கினார்.

“சினிமாவில் காட்டுவது ரீல் ஹீரோக்கள்; இவங்கதான் ரியல் ஹீரோக்கள். விகடன் ஒவ்வொரு விருது விழாவுக்கும் என்னை மறக்காம அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவனாய் உணர்கிறேன்!” என நெகிழ்ந்தார் மிஷ்கின்.

* சிறு யோசனையை பெரும் தொழிலாய் விரித்த ‘குமரி ஷாப்பி’ ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் நிறுவனர் தீபினுக்கு நடிகை பார்வதி நாயர் விருது வழங்கிப் பாராட்டினார்.

“ஆரம்பத்தில் சின்னச் சின்னத் தவறுகள் செய்தேன். தவறுகளைத் திருத்திக்கொண்டதால் சில மாதங்களிலேயே சக்சஸ்ஃபுல் பிசினஸாக என் நிறுவனத்தை மாற்றிக் காட்டினேன்!” என்று தீபின் சொன்னது எல்லோருக்குமான சக்சஸ் மந்திரம். இதை அரங்கம் கைதட்டிப் பாராட்டியது.

* ஜவ்வாது மலையடிவாரத்திலிருந்து வந்திருந்த ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கத்தினருக்கு இயக்குநர் த.செ.ஞானவேல் விருது வழங்கினார். இயக்க உறுப்பினர் ஒருவரின் பெண் குழந்தை, மேடையில் ஓடியாடி சூழலைக் கவித்துவமாக்க, விருதுபெற்ற அனைவரும், நன்றிசொல்லித் தரையில் சிரம் பதித்து மேடையில் விழுந்து வணங்கினார்கள்.

“இவர்கள் கிணற்று நீரை மட்டும் அல்ல, சாதியையும் சேர்த்துத் தூர் வாரியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது. இப்படி ஒரு பிரமாண்டமான மேடையை அவர்களுக்கு அமைத்துக்கொடுத்த விகடனுக்கு நன்றி. நீரின்றி அமையாது உலகு என்பதை உலகுக்கு உணர்த்தும் நீர்க்காவலர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்!” என்றார் த.செ.ஞானவேல்.

* ஒரு மின்விபத்தில் மணிக்கட்டுக்குக் கீழே இரு கைகளையும் இழந்த டிரம்மர் தான்சேன் வழங்கிய துள்ளல் இசை அரங்கத்தை சிலிர்ப்பூட்டியது.

- இப்படி மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய்ச் சென்ற பிரமாண்டமான 2022 விகடன் நம்பிக்கை விருதுகள் விழா, இரவு உணவுடன் நிறைவுபெற்றது.