தொடர்கள்
Published:Updated:

சரிகமபதநி டைரி 2022

உமையாள்புரம் சிவராமன்
பிரீமியம் ஸ்டோரி
News
உமையாள்புரம் சிவராமன்

பாடும் ராகத்தையும், பாடலையும் மேடையில் அறிவிப்பது, கேட்பவர்களுக்குக் கையில் ஆதார் கார்டு இருப்பது மாதிரி.

நாரதகான சபாவில் கணேஷ் - குமரேஷ் வயலின் டூயட். இந்த ஸ்மார்ட் சகோதரர்கள் கச்சேரி மேடையேறி 50 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. தங்களின் பொற்கால அனுபவங்களை சமீப மாதங்களில் முகநூலில் தவணை முறையில் அவர்கள் விவரித்தது விறுவிறுப்பான சுயசரிதை!

கச்சேரியில் அவர்களுக்கே சொந்தமான ஸ்டீரியோஃபோனிக்் சவுண்டில் விதிகளுக்குட்பட்ட வாசிப்பு எப்போதும்போல் வசீகரம்! குமரேஷ் வாசித்த ரஞ்சனி ராக ஆலாபனையில் குழைவுகள் சுழன்றன. கீழ் ஸ்தாயியில் வாசித்த கணங்களில் ‘ச்சு' போட வைத்தார். அந்தப் பகுதி முடிந்ததும் ‘நான் வாசிக்கிறேன்’ என்று சங்கராபரணத்தை வில்லில் எடுத்தார் கணேஷ். அரங்கம் முழு அமைதியில் இருக்க, சங்கராபரணத்தின் முழு வடிவம் கணேஷின் வடிவமைப்பில் தகதகத்தது. ரஞ்சனியில் துர்மார்க்கஜராவும், சங்கராபரணத்தில் ஸ்வர ராக சுதாவும் வாசிக்கப்பட்டன என்பதையும் பாசக்கார சகோதரர்கள் ஏனோ அறிவிப்பு எதுவும் செய்யவில்லை என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். எல்லோருக்கும் எல்லாம் புரியாதே!

கணேஷ் - குமரேஷ்
கணேஷ் - குமரேஷ்

இருபது வருட இடைவெளிக்குப்பின் இவர்களுடன் மேடையேறி வாசித்தார் மிருதங்க மேதை உமையாள்புரம் சிவராமன். இவ்வளவு காலம் இவர்களுக்கு வாசிக்காமல் விட்டதையெல்லாம் சேர்த்து வைத்து அன்றைய ‘தனி'யில் மதம் பிடித்த மாதிரி வாசித்து ரசிகர்களை மிரள வைத்தார் சிவராமன். பெரியவருக்கு, கடம் கிரிதர் உடுப்பா பக்கா சப்போர்ட். சாது மாதிரி ஆரம்பித்து க்ளைமாக்ஸில் மிரண்டபோது சிவராமனுக்கு எழுந்த அப்ளாஸ் காடு (ஹால்) கொள்ளவில்லை! ஆனந்தப் பரவசத்தில் எழுந்த நீண்ட நெடிய கரகோஷம் அடங்கியதும், ‘‘உங்க எல்லோருக்கும் அனந்த கோடி நமஸ்காரம்... உங்களுடைய அன்புக்கு நான் எப்பவும் பாத்திரமாக இருக்கணும்... ஐ லவ் யூ... (கைத்தட்டல்) யூ லவ் மீ டு...’’ என்றார் 87 வயது சிவராமன்!

எம்.பாலமுரளிகிருஷ்ணா கச்சேரியைக் கேட்கும்போது உடலில் ஆக்சிஜன் செலுத்துவது மாதிரி புதுத் தெம்பு கிடைக்கும். அதுவும் வயலினுடன் அக்கரை சுபலட்சுமி உட்காருவது டபுள் டமாக்கா! மிருதங்கத்துக்கு பத்ரி சதீஷ்குமார் என்றால் கேட்கணுமா? இது என்ன கேள்வி? கண்டிப்பாகக் கேட்டே ஆக வேண்டும்!

MADrasana இந்த முறை தன் கூடாரத்தை தரமணிக்கு மாற்றிக் கொண்டது. அங்கே ஆசியன் ஜர்னலிசம் கல்லூரி (ACJ) வளாகத்தில் மிகப் பிரமாதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி அரங்கில் ஐந்து நாள்கள் இசை விழா. தினமும் மூன்று கச்சேரிகள். துல்லியமான ஒலியமைப்பு. காது அருகே உட்கார்ந்து பாடுவது - வாசிப்பது போல் உள்ளது. மேடையில் மட்டும் மிதமான வெளிச்சக் கீற்றுகள். அரங்கம் கிட்டத்தட்ட இருட்டில்! அமைப்பாளர்களும் அவர்களின் குழுவினரும் காண்பிக்கும் உபசரிப்பு எங்கும் காண முடியாத ரகம்.

உமையாள்புரம் சிவராமன்
உமையாள்புரம் சிவராமன்

கானடா வர்ணம். அமீர் கல்யாணி ராகத்தில் ‘தூமணி மாடத்து...’ என்ற ஆண்டாள் பாசுரம் இந்தச் சங்கீத மாடத்தில் சுற்றும் விளக்கெரிய பாலமுரளி பாடிக்கொண்டிருந்தபோது, தன் பெயர் கொண்ட ஹாலில் முன்வரிசையில் அமர்ந்து எம்.எஸ் கேட்க நேரிட்டிருந்தால் எத்தனை மகிழ்வுற்றிருப்பார்!

ரஞ்சனி மற்றும் கமாஸ் ராகங்களை மிக விரிவாக பாலமுரளி ஆலாபனை செய்தபோது அவர் குரல் குட்டிக்கரணமிட்டு சர்க்கஸ் செய்வதுபோல் இருந்தது. மேல், கீழ் ஸ்தாயியிகளில் ராகத்தின் சங்கதிகள் சொன்னபடியெல்லாம் கேட்டது - துளியும் அபஸ்வரம் அண்டாமல்! இந்த இரண்டு ராகங்களை, அவற்றின் நீள அகலங்களை, அக்கு வேறு ஆணிவேறாக ஆராய்ந்து சாறு பிழிந்து கொடுத்தபோது பருகப் பருக ருசி!

ரஞ்சனியில் கணபதி சச்சிதானந்த சுவாமியின் ‘தத்தாத்ரேய...’ பாடலும், கமாஸ் ராகத்தில் ஊத்துக்காடு வெங்கடகவியின் ‘காணீரே’ பாடலும், சித்தர் பாடலும் பசும்பாலில் குங்குமப்பூ!

அக்கரை சுபலட்சுமியும், பத்ரி சதீஷ்குமாரும் பாலமுரளியை பாதம் தொடர்ந்து சென்றது கச்சேரிக்கு அசுர பலம்! பாடுபவருக்கும், வயலின் மிருதங்கக் கலைஞர்களுக்கும் கிடைத்த கரவொலிகள், அரங்கத்தின் பிரத்தியேக ஒலியமைப்பின் காரணமாக அடர்த்தியாக ஒலித்தன!

மயிலை, தி.நகர், etc...க்களுடன் ஒப்பிட்டால் சற்றுத் தொலைவிலுள்ள இந்த ஹாலுக்கு வந்தவர்களில் பசையுள்ள பார்ட்டிகளே அதிகம்!

பாடும் ராகத்தையும், பாடலையும் மேடையில் அறிவிப்பது, கேட்பவர்களுக்குக் கையில் ஆதார் கார்டு இருப்பது மாதிரி. முதல் மூன்று பாடல்களுக்கு வானொலி கணக்கில் அறிவிப்பு செய்துவிட்டு பின்னர் மறந்துவிட்டதுபோல் அம்போ என்று விடுவது நியாயமே இல்லை! தியாகபிரம்மகான சபாவுக்காக வாணி மகாலில் பாடிய எஸ்.மஹதி உட்பட அனைவருக்கும் இது பொருந்தும். பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி இயற்றிய நாட்டை ராக வர்ணத்தைப் பிள்ளையார் சுழியாக வைத்துக்கொண்டார் மஹதி. பிலஹரியில் ஊத்துக்காடு வெங்கடகவியும், ஸரசாங்கியில் பட்டணம் சுப்ரமணி ஐயரும் பின்தொடர்ந்தார்கள்.

மெயினாக மேடைக்கு வந்தார் கல்யாணி. எடுத்த எடுப்பிலேயே ‘கண்டேன் கல்யாணியை’ என்னும் விதமாகக் கோடு போட்டுவிட்டு, அந்த ராகத்தின் அழகையும் ஆழத்தையும் நளினத்தையும் வெளிப்படுத்தும் வண்ணம் ரோடும் போட்டார் சூப்பர் சிங்கர்களின் நடுவர் மஹதி. ரயில் பிடிக்கும் அவசரத்தில் கையில் தம்புராவைத் தூக்கிக்கொண்டு ஓடாமல், பதினைந்து மணித்துளிகள் எடுத்துக்கொண்டு நிறுத்தி நிதானமாக ராக சொரூபத்தை வெளிப்படுத்தினார். சுருதி பேதமும் நிச்சயம் உண்டு. சுத்த தன்யாசி!

பாலமுரளிகிருஷ்ணா, மஹதி, ராமகிருஷ்ணன் மூர்த்தி
பாலமுரளிகிருஷ்ணா, மஹதி, ராமகிருஷ்ணன் மூர்த்தி

வயலின் வாசித்த பி.யு.கணேஷ் பிரசாத், பாடகி பாடியதைவிட ஐந்து நிமிடங்களுக்குக் குறைவாக நேரமெடுத்துக்கொண்டு பக்கவாத்திய தர்மத்தைக் காப்பாற்றினார்.

தியாக பிரம்மத்தின் ‘ஏதாவுநரா’ கீர்த்தனையை மஹதி பாடிக்கொண்டிருந்தபோதே, நிரவலுக்கு எந்த வரியை எடுத்துக்கொள்வார் என்று மனதுக்குள் பட்டிமன்றம் நடக்க, ‘ கருடகு’ அல்லாமல் ‘சீதா கௌரீ...’ என்று தீர்ப்பானது!

டெல்லி சாய்ராம் மிருதங்கமும், திருச்சி முரளி கடமும் வாசிக்க, முன்னவர் வெற்றிப் படிக்கட்டில்!

அன்று அரங்கில் தானாகக் கூட்டம் சேர வில்லை. அட்லீஸ்ட் அழைத்து வந்திருக்கலாம்!

மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் ராமகிருஷ்ணன் மூர்த்தி. வயலின்: சாருலதா ராமானுஜம், மிருதங்கம்: என்.சி.பரத்வாஜ், கஞ்சிரா: ஜி.குருபிரசன்னா.

இப்போதெல்லாம் ஒரு சில மேடைகளில் லே - அவுட் மாற்றி உட்காருவதைப் பார்க்க முடிகிறது. மிருதங்கம் - கடம் வித்வான்களை எதிர் எதிராக முகம் பார்த்து உட்கார வைப்பதும், பாடகரின் இடது அல்லது வலது பக்கத்தில் வயலின் கலைஞரை அமர வைத்துக்கொள்வதும் இப்போது ஃபேஷன். இதனால், வயலினுக்கு வாய்ப்பாட்டுதான் பக்க வாத்தியமோ என்ற சந்தேகம்கூட ஏற்படுகிறது!

இன்னும் சற்று கணீரென்று உயர்ந்து இருக்கிறது ராமகிருஷ்ணன் மூர்த்தியின் குரல். சுத்தசீமந்தினி ராகத்தில் அமைந்த ‘ஜானகி ரமண' என்ற தியாகராஜரின் பாடலுடன் ஆரம்பித்து இந்தோள ராக ஆலாபனை. பையில் போட்டு வீட்டுக்கு எடுத்துச் செல்லத் தூண்டும் லட்டு சங்கதிகளில் அவ்வளவு இனிப்பு. ‘மா ரமணன்' பாடலில் ‘மலை மேல் உறைபவன், பாற்கடல் அலை மேல் துயில்பவன், ஆயிரம் பெயரால் அழைப்பினும் ஆயிரம் உயிர் மாறினும்...’ என்றெல்லாம் பாபநாசம் சிவன் அழகுத் தமிழில் விவரிக்கும் வரிகளுக்கு உயிர் கொடுத்தார் ரா.மூர்த்தி. சிவனையும், விஷ்ணுவையும் மாறி மாறித் துதித்தோம்.

தமிழில் ஒரு பாடல் பாடிவிட்டால் அடுத்ததும் அதே மொழிப்பாடலாக இருந்துவிடக்கூடாதே! கன்னட ராகத்தில் தீட்சிதரின் ‘ மாத்ருபூதம்’ பாடல் மூலம் பாசஞ்சர் ரயிலில் திருச்சி அழைத்துச் சென்று திரும்பினார். இந்தப் பாடலில், நறுமணம் வீசும் அப்போது மலர்ந்த ஜவ்வந்திப் பூவில் மனநாட்டம் கொண்டவரும், கருணையுள்ளம் படைத்தவருமான மாத்ரு பூதேஸ்வரரை தீட்சிதர் வர்ணிப்பது அவ்வளவு அழகு!

கச்சேரியில் பக்கவாத்தியப் பிரிவில் மிகவும் கவர்ந்தது குருபிரசன்னாவின் கஞ்சிரா வாசிப்பு! ‘‘குருபிரசன்னாவின் கஞ்சிரா கேட்டேன்... கொடுக்க மறுத்துட்டார்...’’ என்று கச்சேரி முடிந்ததும் தயிர்வடை சாப்பிட்டுக்கொண்டே நண்பர் சொன்னது கல்வெட்டுக்கால ஜோக்!

- பக்கங்கள் புரளும்...