Published:Updated:

சரிகமபதநி டைரி 2022

சாருமதி ரகுராமன் - சந்தீப் நாராயண்
பிரீமியம் ஸ்டோரி
News
சாருமதி ரகுராமன் - சந்தீப் நாராயண்

படங்கள்: முத்ரா பாஸ்கர், ஹேமா

`அவருக்குப் பதிலாக இவர்...'

உடல்நிலை சரியில்லாத காரணத்தால், மியூசிக் அகாடமியில் ஒரு நாள் சுதா ரகுநாதனுக்குப் பதிலாக பாலமுரளி கிருஷ்ணா... இன்னொரு நாள் ராமகிருஷ்ணன் மூர்த்திக்குப் பதிலாக ஸ்ரீராம் பரசுராம்... நாரதகான சபாவில் சுதா ரகுநாதனுக்குப் பதிலாக சாருமதி ரகுராமன்!

நாரதகான சபாவில் சாருமதி ரகுராமன் சோலோ வயலின், அரங்கின் முதல் வரிசையில் ரஞ்சனி, காயத்ரி!

மியூசிக் அகாடமியில் பகல் இரண்டு மணிக்கு கல்யாணபுரம் அரவிந்த். முன் வரிசையில் உட்கார்ந்து ரசித்தவர், சுதா ரகுநாதன்!

மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் ஜனவரி முதல் தேதி காலை, லால்குடி கிருஷ்ணன் - விஜயலட்சுமி வயலின் டூயட். அரங்கின் மூன்றாவது வரிசையில் பாம்பே ஜெயஸ்ரீ!

பாடகர் சித் ஸ்ரீராம் நாரதகான சபாவுக்கு தேதி கொடுத்தபோது, ‘‘வயலினுக்குப் பதில் நான் நாகஸ்வரத்துடன் பாடுகிறேன்...’’ என்று அனுமதி பெற்றிருக்கிறார். ஆனால் கச்சேரிக்குச் சில தினங்களுக்கு முன்பாக சபாவுடன் தொடர்பு கொண்டு, ‘‘மன்னிக்கவும்... நாகஸ்வர வித்வானுடன் ஒருங்கிணைந்து பிராக்டீஸ் செய்ய இயலவில்லை. வழக்கம்போல் வயலினுடனேயே பாடுகிறேன்’’ என்று முடிவை மாற்றிக்கொண்டுள்ளார் சித் ஸ்ரீராம்.

வம்பு தும்பு போதும். விஷயத்துக்கு வருவோம்.

வயலின் மும்மூர்த்திகள் என்று மதிக்கப்பட்டவர்களில் ஒருவரான மறைந்த மகாவித்வான் டி.என்.கிருஷ்ணனின் மாணவி சாருமதி ரகுராமன். வயலினில் குரு வெளிப்படுத்திய சுநாதம் (Bowing sound) அச்சு அசலாக சாருமதியின் வயலினுக்குள் குடி புகுந்திருக்கிறது. அவருக்குப் பின் தன் சொந்த முயற்சியால் மேலும் நெளிவு சுளிவு களைக் கற்றறிந்து இன்று ஜோரான வயலின் வாசிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார் சாருமதி.

தாலாட்டும் தென்றலாக மாயாமாளவகௌள ராக ஆலாபனை. ஆரபியில் ‘ஸாதிஞ்செநே ஓ மநஸா’ வாசித்து தியாகராஜரின் பகுள பஞ்சமி ஆராதனைக்கு அட்வான்ஸ் அஞ்சலி செலுத்தினார் இந்த இளைஞி. அனந்தா ஆர்.கிருஷ்ணனும், சுனில்குமாரும் மேடையில் எதிரெதிரே மிருதங்கம், கஞ்சிராவுடன்.

காம்போதி ஆலாபனை கிளாஸ். விமானப் பயணத்தில் பிசினஸ் கிளாஸ் இருக்கையில் சொகுசாக சாய்ந்து உட்கார்ந்து காதுகளில் ஹெட் போனுடன் ஏகாந்தமாக இசையைக் கேட்கும் உணர்வைத் தந்தது சாருமதியின் வாசிப்பு! முத்துசுவாமி தீட்சிதரின் மாஸ்டர்பீஸ் பாடல்களில் ஒன்றான ‘ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே...’வை நிறுத்தி நிதானமாக சாருமதி வாசித்தது மன அமைதி கொடுத்தது. கவலையை மறக்கடித்தது.

பின்குறிப்பு: இந்தக் கச்சேரிக்கு சாருமதியின் அம்மா அப்பாவும், மிருதங்கம் அனந்தாவின் மாமனார் மாமியாரும் வந்திருந்தார்கள். ஆனால் இவர்கள் நால்வரல்லர், இருவர். ஏனெனில் அனந்தாவும் சாருமதியும் கணவன் - மனைவி.

சாருமதி ரகுராமன் - சந்தீப் நாராயண்
சாருமதி ரகுராமன் - சந்தீப் நாராயண்

கல்யாணபுரம் அரவிந்த் மியூசிக் அகாடமியில் இரண்டாவதாக எடுத்துக் கொண்ட பாடல் ‘அப்ப ராமபக்தி யெந்தோ...' பந்துவராளி ராகத்தில் தியாகராஜர் இயற்றியது. ஜீனியஸ் டி.என்.சேஷகோபாலன் அமைத்துக் கொடுத்த வெல்வெட் பாதையில் சறுக்கி விழாமல் பயணித்தார் சீடர் அரவிந்த். சீசன் அல்லாத காலத்திலும் நிறைய கச்சேரிகள் பாடி வரும் இவர், மேலும் குரலைப் பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறார். கீழ், மேல் கால சங்கதிகளில் குருவின் மகிமை தெரிகிறது.

ராமபக்தியின் அருமை பெருமைகளை தொடர் கேள்விகளால் அடுக்கிச் செல்லும் இந்தப் பாடலின் அனுபல்லவியிலிருந்து ‘த்ரிபடலநு நில்பி கண்டி...' வரிகளை அரவிந்த் நிரவலாக ரிபீட் செய்தபோது, சறுக்கு மரம் மாதிரி பந்துவராளி சங்கதிகள் வழுக்கி விழுந்தன.

‘தசரதன் மைந்தனே! உன் கடனைத் தீர்க்க என்னாலாகுமா? ஆசை தீர தூர தேசங்களில் என்னைப் பிரகாசிக்குமாறு செய்த ரசிகர் தலைவனே!’ என்றெல்லாம் சக்கரவர்த்தி திருமகனுக்குப் பாராட்டுச் சால்வை அணிவிக்கும் தியாகராஜரின் தோடி ராகப் பாடலை (தாசரதீ) அரவிந்த் பாடிய விதம், இந்த வருடம் சப் சீனியர் பிரிவில் மிகச் சிறந்த பாடகராக அவர் தேர்வாக முக்கியக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

இரண்டு மணி நேரக் கச்சேரியில் ராகம் - தானம் - பல்லவியும் கட்டாயம் பாடச் சொல்லும் மியூசிக் அகாடமியின் முரட்டுப் பிடிவாதம் தளர்த்தப்பட்டால் நல்லது. அவசர கதியில் அரவிந்த் பாடிய சுரட்டி RTP கொஞ்சமும் பரவசப்படுத்தவில்லை.

அன்று சூப்பர் சிங்கரில் எஸ்.பி.பி-யின் மோதிர விரலால் குட்டுப்பட்டது... இன்று லேடி சூப்பர் ஸ்டார்கள் ரஞ்சனி - காயத்ரியின் இசை மாணவியாக ஒவ்வொரு படிக்கட்டாக மேலேறி வருவது போன்ற காரணங்களால் பாவாடை சட்டைப் பெண் ஸ்பூர்த்தி ராவ் பாடுமிடமெல்லாம் அதிக அளவில் ரசிகர்களை ஈர்த்துவருகிறார். நாரதகான சபாவின் மினி ஹால் பகல் இரண்டு மணிக்கு நிற்க இடமின்றி நிரம்பி வழிந்தது. சின்ன மேடையிலும் விசிறிகள் உட்கார வைக்கப்பட்டார்கள். மகிழ்ச்சி மிக்க தருணமிது!

பூர்விகல்யாணியில் முத்தெடுத்து விளையாடினார் ஸ்பூ‌ர்த்தி. முதல் இழுப்பிலேயே ராகத்தை அடையாளம் காட்டினார். குருமார்கள் கற்றுக்கொடுத்ததை உள்வாங்கிக்கொண்டு அவர்கள் ஸ்டைலில் அல்வா துண்டங்கள் மாதிரியான சங்கதிகளில் சடுகுடு ஆடினார். இடது காதை அவ்வப்போது மூடியபடி க்ளைமாக்ஸில் சிறிது நேரம் பயணித்தது இந்த மினி எக்ஸ்பிரஸ். ஜங்ஷனில் பூர்வி கல்யாணியை நிறுத்தியபோது வயதுக்கு மீறிய ஸ்பூர்த்தியின் திறமையை மெச்சும் விதமாக அரங்கம் பலத்த கைத்தட்டலுடன் அவரை வாழ்த்தியது. தியாகராஜரின் பிரபலமான ‘ஞான முசகராதா' பாடலில் வரும் மிகப் பிரபலமான ‘பரமாத்முடு ஜீவாத்முடு...' வரிகளை நிரவலுக்கு எடுத்துப் பாடியதைக் கேட்டபோது ரசிக மகாஜனங்கள் சிலிர்த்து ரசித்தார்கள்.

மோகன ராக ஆலாபனையிலும், தொடர்ந்த தானம், பல்லவியிலும் ஸ்பூர்த்தியின் குரலில் சற்றே அயர்ச்சி தெரிந்தது. சாய் ரக்ஷித், வயலினில் இதமான, மோகனமான வாசிப்பால் அந்தக் குறையைப் போக்கினார்!

திருவாரூர் பக்தவத்சலம் - நெய்வேலி சந்தானகோபாலன் - லால்குடி கிருஷ்ணன் - லால்குடி விஜயலட்சுமி
மியூசிக் அகாடமியில் மூன்று வருடங்களுக்கு நான்கு சங்கீத கலாநிதிகள்...!
திருவாரூர் பக்தவத்சலம் - நெய்வேலி சந்தானகோபாலன் - லால்குடி கிருஷ்ணன் - லால்குடி விஜயலட்சுமி மியூசிக் அகாடமியில் மூன்று வருடங்களுக்கு நான்கு சங்கீத கலாநிதிகள்...!

முத்ராவின் (ஆன்லைன்) இசை விழாவில் ஒருநாள் ஜுகல்பந்தி. ஸ்ரீராம் பரசுராம் இந்துஸ்தானி வயலின்; ரமணா பாலசந்திரன் கர்னாடிக் வீணை; ஆர்.சங்கரநாராயணன் மிருதங்கம்; பண்டிட் ராஜேந்திரா நக்கோடு தபலா.

தர்பார் வர்ணம் முடித்து, அமீர் கல்யாணியை ஸ்ரீராமும் ரமணாவும் ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக்கொண்டு வாசித்தார்கள். சுவாதி திருநாள் பாடலைப் பாடிக்கொண்டே ரமணா வாசித்தபோது பாடுவது ரமணாவா அல்லது வீணையா என்று வியக்க வைத்தது.

அழகான சாருகேசி, வீணையில் மேலும் அழகாக ஒலித்தது. ஒரு கட்டத்தில் சாருகேசியை ஸ்ரீராமுக்கு 'பாஸ்' செய்ய, அவர் தானும் ருசித்து, பார்ப்போரையும் ருசிக்க வைத்தார். இங்கேயும் தியாகராஜர் ஆஜர். ‘ஆடமோடி கலதே...' பாடல், விரிவான ஸ்வரங்கள் இருவரிடமிருந்தும்! துணையும் நிழலும் நீயே என்பதுபோல் ஸ்ரீராமும் ரமணாவும் சாருகேசியைப் பந்தியில் பரிமாறி வயிறுமுட்டச் செய்தார்கள்! (‘மோடி’ என்றால் பிகுவா என்று பொருள் கொள்க!)

மேதை கே.வி.நாராயணசாமியின் சீடர் மட்டுமல்ல அஷ்வத் நாராயணன், நெருங்கிய உறவும்கூட. தனது ஆறாவது வயதில் ஆபோகியில் ஆலாபனையும், அண்ணமாசார்யாவின் பாடல் ஒன்றையும் பாடிக் காண்பித்து அவரின் மாணவனாகச் சேர்ந்திருக்கிறார். முதலில் சரஸ்வதி ராகமும், ‘அனுராகமுலேனி' கீர்த்தனையும் சொல்லிக்கொடுத்திருக்கிறார் ஆசான். அவரின் மறைவுக்குப் பிறகு அவருடைய மனைவி பத்மா நாராயணசாமியிடம் கற்றல் தொடர்ந்தது. மற்றவை ஹிஸ்டரி!

அஷ்வத் நாராயணன், ஸ்பூர்த்தி ராவ், கல்யாணபுரம் அரவிந்த்
அஷ்வத் நாராயணன், ஸ்பூர்த்தி ராவ், கல்யாணபுரம் அரவிந்த்

இப்போது நூற்றாண்டு விழா காணும் உயர்ந்த பாடகர் கே.வி.என் சாரின் சீடர் அஷ்வந்த் உயர்ந்த மனிதனாக (Tall guy!) வளர்ந்திருக்கிறார்! வலுவான குரல் வளத்துடன் முன்வரிசை நோக்கி வேகமாக முன்னேறிவருகிறார். இன்னமும் இசையைத் தொழிலாக்கிக்கொள்ளவில்லை. பணியில் இருந்தபடியே பண்களும் பாடுகிறார்!

பேகடா வர்ணம். அஸாவேரியில் ‘ராரா மாயிண்டிதாக...' என்று ராமனுக்கு அழைப்பு விடுத்துவிட்டு மலயமாருதம் ஆலாபனையில் மையம் கொண்டார் அஷ்வந்த். (Tag - பிரம்மகான சபா) அரைத்தூக்கத்தில் இருந்தவர்களையும் அது தட்டி எழுப்பியது. ‘மநஸா எடுலோர்த்துநே..' (தியாகராஜர்) பாடலை அஷ்வத் பாடிய விதம் ஜோர். ‘கலிலோ ராஜஸ தாமஸ குணமுல...' என்ற பொருள் நிறைந்த வரிகளை நிரவல் செய்து, ஸ்வரம் பாடி பலேக்கள் பல பெற்றார்.

அருணாசல கவிராயரின் ராம நாடகப் பாடல்களில் ஒன்று யதுகுலகாம்போதியில் அமைந்த ‘ஆரென்று ராகவனை எண்ணினீரம்மா...' இலக்குவனுக்கும் சீதா பிராட்டியாருக்கும் நடந்த சூடான வாக்குவாதத்தை வீடியோ எடுத்துக் காட்டும் பாடல். இதைப் பாடிவிட்டு பதம் பிரித்து விளக்கினார் அஷ்வத். பாடலுக்கு யதுகுலகாம்போதி பொருந்துவதை ஆராய்ந்தார். பாட்டு மேடை, பட்டிமன்ற மேடையானது.

திருவனந்தபுரம் சம்பத் (வயலின்), திருவாரூர் பக்தவத்சலம் (மிருதங்கம்), கார்த்திக் (கடம்) மூவரும் பாடகருக்குப் பாதுகாப்பான பக்கவாத்திய பவுன்சர்கள்!

ஸ்ரீராம் - ரமணா
ஸ்ரீராம் - ரமணா

பார்த்தசாரதிசுவாமி சபாவில் Top form-ல் இருந்தார் சந்தீப் நாராயண். குரு சஞ்சய் சுப்பிரமணியனின் மேனரிசம் எதுவும் இப்போது சுத்தமாக இல்லை. வயலின் (மைசூர் வி. ஸ்ரீகாந்த்), மிருதங்கம் (சாய்கிரிதர்), கடம் (கிருஷ்ணா) மூவரிடமும் டீம் ஸ்பிரிட் பொங்கியது!

நிரோஷ்டா ராகம் உள்ளிட்ட முதல் மூன்று பாடல்களின்போதே ஒரு முடிவோடுதான் சந்தீப் மேடை ஏறியிருக்கிறார் என்பது தெளிவானது. தேசிகதோடி வந்தது. போர்வெல்லுக்கு மிஷின் கொண்டு குழி தோண்டுவது மாதிரி குரல் வழியாக ராகத்தின் அடி ஆழம் வரை பயணித்து அசத்தினார். அங்கங்கே கார்வை கொடுத்து கலக்கினார். சங்கதிகளில் வெளிப்பட்ட கமகங்களில் அவ்வளவு குழைவுகள். வல்லினமும் மெல்லினமும் வரிசையில் நின்று வணக்கம் சொல்லின!

‘ராஜு வெடல ஜுதாமு' பாடலில் ‘காவேரீ தீரமுநநு பாவநமகு ரங்கபுரிநி' வரியில் நிரவல். காவேரிக் கரையில் பவித்திரமான ஸ்ரீரங்கத்தில் திரு விளங்கும் சித்திரவீதியில் விநோதமாக கஸ்தூரி ரங்கராஜன் பவனி வருவதைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார் சந்தீப். தியாகராஜர் அதைக் கேட்டிருந்தால் குஷியாகியிருப்பார்.

அடுத்ததாக சாமா ராக ஆலாபனை இன்னொரு மகுடம். மேலே தேசிகதோடிக்குச் சொல்லியிருப்பவை மிஸ்டர் சாமாவுக்கும் பொருந்தும். தானம் பாடும்போது மிருதங்கமும் கடமும் இணைந்துகொள்ள, கேட்பது சுகானுபவம்! நீளமான ஸ்வரங்கள் வயலினில் வாசிக்க வாய்ப்புக் கொடுத்தபோது டி20 மேட்ச்சின் கடைசி ஓவர் பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீகாந்த்! கரகோஷம் காதைப் பிளக்க, ‘Thats why I wanted you to play’ என்று அவரைப் பாராட்டினார் சந்தீப்.

சீசனில் கேட்ட இந்தக் கச்சேரியை மறக்க முடியாமல் அமைத்துக்கொடுத்தமைக்கு... வாவ், சந்தீப்!

- நிறைவு