நடப்பு
Published:Updated:

நீண்ட கால வளர்ச்சிக்கான பட்ஜெட் இது!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

த்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் 2019-20-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், ஒரே சமயத்தில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது. சர்வதேசப் பொருளாதார நிலை சரியில்லை; இதனால் நமது நாட்டிலும் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது. இந்த நிலையில்கூட, தன்னால் முடிந்த அளவுக்கு நல்லதொரு பட்ஜெட்டையே தாக்கல் செய்திருக்கிறார் நிதி அமைச்சர்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைத்து உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதன்மூலம் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார் நிதி அமைச்சர். வாங்கக்கூடிய விலையிலான வீடுகளுக்கான கடனுக்கு வரிச் சலுகை அளித்திருப்பதன்மூலம் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி காண வாய்ப்புண்டு.

வங்கிகளுக்கு 70,000 கோடி ரூபாய் மூலதனம், வங்கிசாரா நிதி நிறுவனங்களைச் சீர்படுத்தும் திட்டங்கள், உள்நாட்டில் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு புதிய வரி, ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கான வரி நீக்கம் போன்றவற்றைச் செய்து ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தைப் பலப்படுத்தியிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர். விவசாயத் துறை வளர்ச்சிக்கு ஜீரோ பட்ஜெட் போன்ற திட்டத்தை அறிவித்த அதேசமயம், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மேம்பாட்டுக்கும் சில திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் பொதுமக்களின் பங்களிப்பு 35 சதவிகிதமாக அதிகரிக்கப்பட உள்ளதால், நல்ல பங்குகள் இன்னும் குறைந்த விலைக்குக் கிடைக்கக்கூடும். இதனால் அதிகமான முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வாய்ப்பு உருவாகும். சமூகத் தொண்டு நிறுவனங்கள் தங்கள் பங்குகளைப் பட்டியலிட ஒரு தனி எக்ஸ்சேஞ்ச் உருவாக்குவதும் வித்தியாசமான முயற்சியே.

இத்தனை நல்ல திட்டங்களை அறிவித்திருந்தாலும் இந்த பட்ஜெட்மீது சில விமர்சனங்களை வைக்காமல் இருக்க முடியாது. அடிப்படை வருமான வரி உச்சவரம்பு இன்னும் கொஞ்சமாவது உயர்த்தப்படும் என்று நடுத்தர வர்க்கத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால், புதிய வரி எதையும் போடாமல் இருந்ததே பெரிய விஷயம் என்கிறமாதிரி சொல்லிவிட்டுப் போய்விட்டார் அமைச்சர். தவிர, பெட்ரோல், டீசலுக்கு ரூ.1 எக்ஸைஸ் வரி விதித்திருப்பதால் பொருள்களின் விலை உயர்ந்து, பணவீக்கம் அதிகரிக்கவே செய்யும். புதிய எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாட்டினை அதிகரிக்கச் சலுகைகள் அளிப்பது பாசிட்டிவான விஷயம்தான். ஆனால், அது வேகமாக நடக்குமா?

ஆக மொத்தத்தில், இந்த பட்ஜெட்மூலம் அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங் களால் பொருளாதார வளர்ச்சி உடனடியாக ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், இவை நீண்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் திட்டங்களே. இந்த பட்ஜெட்டினால் என்னென்ன நன்மைகள் விளையப்போகின்றன என்பதைப் பார்க்க, நாம் சற்றுப் பொறுமையுடன் இருப்பது அவசியம்!