தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

பேட்மின்டன் சாம்பியன் பட்டத்தை பி.வி.சிந்து, பாரா பேட்மின்டன் சாம்பியன் பட்டத்தை மானசி ஆகியோர் வென்றிருக்கிறார்கள்.

விளையாட்டுத் துறையில் நம் பெண்கள் தங்கள் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்துவரும் செய்திகள் அடுத்தடுத்து நம்மை மகிழ்விக்கின்றன. உலக பேட்மின்டன் சாம்பியன் பட்டத்தை பி.வி.சிந்து, பாரா பேட்மின்டன் சாம்பியன் பட்டத்தை மானசி ஆகியோர் வென்றிருக்கிறார்கள். துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார் இளவேனில். நம் பெண்கள் உலக சாம்பியன்களாக முடிசூடும் இவ்வேளையில், விளையாட்டுப் போட்டிகளில் ஆண் பெண் சமத்துவம் இருக்கிறதா, இருபாலினரையும் ஒன்றாக நடத்தும் பாங்கு இருக்கிறதா என்பது போன்ற கேள்விகளையும் எழுப்ப வேண்டியிருக்கிறது.

இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் முக்கிய பிரச்னை, ஊதிய சமத்துவமின்மை. 2018-ம் ஆண்டு, இந்தியாவின் கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ-யின் கிரிக்கெட் ஒப்பந்தங்களில், மூன்றாம் நிலை ‘சி’ கிரேடு ஆண் கிரிக்கெட்டர்களின் ஊதியம் ஒரு கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ‘ஏ’ கிரேடு முதன்மைப் பெண் கிரிக்கெட்டர்களின் ஊதியம் 50 லட்ச ரூபாய் மட்டுமே. இந்தியாவின் மிகப் பிரபலமான விளையாட்டான கிரிக்கெட்டுக்கே இந்த கதி என்றால், மற்ற விளையாட்டுகளைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? ஸ்பான்சர்கள் மட்டுமே இந்தப் பாகுபாட்டுக்குக் காரணம் என்பது உண்மையல்ல.

நமக்குள்ளே...

ஊதிய விஷயத்தில் பாரபட்சம் ஒருபக்கம்... பாலியல் துன்புறுத்தல்களோ மறுபக்கம்... இவை வீராங்கனைகளை விளையாட்டைவிட்டே துரத்துமளவுக்கு இருக்கின்றன. 2010-ம் ஆண்டு இந்திய மகளிர் ஹாக்கி அணியின் 31 வீராங்கனைகள் தங்கள் கோச்சுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர். பாக்சர் நேஹா குமாரை அவரது கோச், டிரைவர், மற்றுமொரு நபர் என மூவர் சேர்ந்து, பயிற்சி செய்யும் ஜிம்மிலேயே பாலியல் வன்முறை செய்ய முயல, பெரும்பாடுபட்டு தப்பி வந்தார் அவர்.

ஆடைகள் குறித்து விளையாட்டு வீராங்கனைகள் கேலி செய்யப்படுவதும் இங்கே வழக்கமாக நடப்பதுதான். சானியா மிர்சா உலகின் சிறந்த ஆட்டக்காரராகி பதக்கங்கள் வென்றபோதும், அவரது வெற்றி பேசப்படாமல், அவரது ஆடைகளே தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாயின.

ஒரே போட்டிக்குச் செல்லும் ஆண் வீரர்களுக்கு நகரின் நடுவே உள்ள ஸ்டார் ஹோட்டல்களிலும், வீராங்கனைகளுக்கு ஊருக்கு ஒதுக்குப்புறமான ஹாஸ்டல்களிலும் தங்கும் வசதி செய்து தரப்படுவது இங்கு வாடிக்கை. ரியோ ஒலிம்பிக் இறுதிப்போட்டி வரை சென்று தங்கத்தைத் தவறவிட்டவர் ஜிம்னாஸ்ட் தீபா கர்மாகர். இவர் இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் கால்வலி சிகிச்சைக்கு பிசியோதெரபிஸ்ட் உதவி கேட்க, `ஆள் இல்லை’ என்று காரணம் காட்டி கைவிரித்தது ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா.

2016-ம் ஆண்டு `தேசிய விளையாட்டு நெறி கமிஷன்’ சட்டவரைவு பிரிவு 16(2), விளையாட்டு ஃபெடரேஷன்களை பெண்களுக்கான பணியிடப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கொண்டுவரும் வகையில் முன்மொழிந்தது. ஆனால், அது இன்னும் சட்ட வடிவம் பெறாமல் நிலுவையிலேயே உள்ளது. இத்தனை இன்னல்களையும் தாண்டித்தான் பெண்கள் விளையாட்டுத் துறையில் தங்களின் திறமையை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.

வெற்றிப் பெண்களான இளவேனில், மானசி, சிந்து ஆகியோரை இந்தியாவே மனதாரப் பாராட்டுவது நல்ல விஷயம். அதேவேளையில், ஊதிய சமத்துவம், பாலியல் புகார்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் போன்றவற்றையெல்லாம் உறுதிப்படுத்துவது மிக முக்கியம். இதுதான், மேலும் மேலும் விளையாட்டுத்துறையில் நம்பிக்கையோடு பெண்களைத் தடம் பதிக்கச் செய்வதற்கான ஒரே வழி. இதை அரசாங்கமும் ஆண்வர்க்கமும் உண்மையாக உணர வேண்டும்!

நமக்குள்ளே...