
அழகு தமிழில் அன்பைப் பகிர்வது எத்தனை சுகமானது என்பதை உணர்ந்து மொழியார்வத்தை இளைய சமுதாயத்திடம் விதைப்போம்.
“இன்று உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி... மகிழ்ச்சி... சொற்களால் தெரிவிக்க முடியாத மகிழ்ச்சி” என்று நிலானி கூற, அரங்கம் கைத்தட்டல்களால் அதிர்கிறது. “அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்” என்ற குறளை நிலானி பாட, மகிழ்ச்சியின் எல்லைக்கே செல்கிறார்கள் கூட்டத்தினர். சென்னையில் சீன அதிபர் வருகையை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு தரப்பு சந்திப்பு ஒன்றில்தான் குறள் பாடி கொஞ்சுமொழி பேசினார்கள் இரு சீனப் பெண்கள். நிலானி, அவர் தோழி கலைமகள் ஆகிய இருவரும் சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்தவர்கள்... தமிழ் மாணவிகள். சீன ஊடகக் குழுமத்தின் தமிழ்ப் பிரிவுத் தலைவர் கலைமகள் (ஹாவோஜியாங்). உலகளவில் தமிழ்மொழியைப் பரப்ப தனக்கு ஆர்வம் இருப்பதாகவும் அதற்கான அனைத்து முயற்சிகளையும் சீன ஊடகக் குழுமம் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
வெளிநாட்டவர் தமிழ்மீது ஆர்வம்கொண்டு அதைக் கற்றுப் பேசுவதும் எழுதுவதும் புதிதல்ல. தமிழ் கற்றுத் தேர்ந்து தமிழ் அச்சுக்கூடம் அமைத்து தமிழின் முதல் அச்சு நூலான `தம்பிரான் வணக்க’த்தை 1578-ம் ஆண்டில் வெளியிட்ட ஹென்ரிக் ஹென்ரிக்கஸ், போர்த்துகீசியர்! `தத்துவ போதக சுவாமிகள்’ என்று தன்னை அழைத்துக்கொண்ட இத்தாலியரான ராபர்ட் நோபிலி, தமிழில் உரைநடை நூல்களை எழுதிக் குவித்தார். இத்தாலியரான கான்ஸ்டன்டைன் பெஸ்கி தமிழகம் வந்து தமிழ் கற்றுக்கொண்டு தன் பெயரை `வீரமாமுனிவர்’ என்று மாற்றிக்கொண்டு தமிழ் மரபுப்படி வாழ்ந்து மறைந்து 272 ஆண்டுகள் ஆகின்றன. சதுரகராதி, தேம்பாவணி, காவலூர்க்கலம்பகம், தொன்னூல் என்ற இலக்கண நூல் என்று அவர் தமிழ் கற்றுணர்ந்து எழுதிக் குவித்த நூல்கள் கணக்கிலடங்காதவை. திருவள்ளுவர் மேல் பெரும் காதல்கொண்ட ஆங்கிலேய ஆளுநர் பிரான்சிஸ் எல்லிசு வைட் துரை, 1800-களில் வள்ளுவரின் உருவம் பொறித்த தங்கக் காசை வடிவமைத்தார்... `சென்னைப் பட்டணத்து எல்லீசன்’ என்று தன் பெயரால் கல்வெட்டும் பொறித்தார். இப்படி எண்ணிலடங்காத வெளிநாட்டவர் தமிழ்மீது பற்றுகொண்டு அதைக் கற்று, நூல்கள் எழுதியது வரலாறு.
கீழடியில் தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் நம் தொன்மையை, நாம் தாய்மொழியை 2600 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவைத்துச் சென்ற செறிவைச் சொல்கின்றன. மெத்தப் படித்த அறிவாளிகள் எழுதவில்லை, பானைகளில் கீறி வைத்தவன் மிகச் சாதாரணன். அத்தகைய மொழியாற்றல் மிக்க தமிழர்தாம் இன்று, `என் மகளுக்குத் தமிழ் அவ்வளவாக வராது... தமிழ் படித்தால் மதிப்பெண் வராது’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். நம் வீடுகளில் `மம்மி, டாடி’ என்று குழந்தைகள் பெற்றோரை ஆங்கிலத்தில் அழைப்பதும், பள்ளிகளில் தமிழில் பேசும் மாணவர்களுக்கு நிர்வாகம் அபராதம் விதிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
அழகு தமிழில் அன்பைப் பகிர்வது எத்தனை சுகமானது என்பதை உணர்ந்து மொழியார்வத்தை இளைய சமுதாயத்திடம் விதைப்போம். சீனரும் ஐரோப்பியரும் வந்துதான் நம் மொழிச் சிறப்பை எடுத்துச் சொல்லவேண்டுமா? நம் தமிழ்; நம் மொழி; நம் உயிர் எனக் கொள்வோமே!
