தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே

ஹைதராபாத் நகரில் கால்நடை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டிருக்கிறார்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தப்ப முயன்று என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசம் உன்னாவ் நகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண், நீதிமன்றம் செல்லும் வழியில் எரித்துக்கொல்லப்பட்டிருக்கிறார். காஞ்சிபுரத்தில் ஓர் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார். கோவைப் பூங்கா ஒன்றில் 16 வயது மாணவி, ஆறு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.

இப்படி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் கொலைகளும் தொடர் கதையாகி வருகின்றன. பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ளப் பழகுதல் என்பது எப்போதுமே அவசியம். அதோடு நம் ஆண் குழந்தைகளுக்கு பெண் உடல் பற்றிய அறிவையும், பெண்ணின் நிபந்தனையற்ற `ஒப்புதல்’ என்பது காதலுக்கோ, உடல்சார்ந்த உறவுக்கோ அவசியம் என்கிற அடிப்படையையும் கற்றுத்தர வேண்டும். குற்றங்கள் நடப்பதைத் தடுப்பது எப்படி என்பதையும் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டே நிர்பயா சட்டப்பரிந்துரையின்படி போக்ஸோ மற்றும் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை விசாரிக்க 1,023 துரித நீதிமன்றங்கள் அமைக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. அவற்றின் இப்போதைய நிலை என்ன, காலியாக உள்ள நீதிபதி பதவிகளுக்கு நியமனங்கள் செய்யப்பட்டனவா, நிர்பயா நிதியில் இருந்து என்ன ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்துத் தெளிவுபடுத்தவேண்டிய நிலையில் அரசு இருக்கிறது. இருப்பினும், எல்லாவற்றையும் அரசே பார்த்துக்கொள்ளும் என்று இல்லாமல், மக்களாக நாமும் நம் கடமையை மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் செயல்படும் 1091 என்ற எண்ணை இதுபோன்ற அவசரநிலைகளின்போது பெண்கள் அழைத்து உதவி கோரலாம். பெண் காவலர்கள் இந்த அழைப்பை எடுத்து விரைவாக உதவ ஏற்பாடு செய்கிறார்கள். தவிர `Kavalan - SOS’ என்ற ஆப் ஒன்றையும் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பெண்கள் அதிக எச்சரிக்கை உணர்வுடனும், ஆண்கள் பெண்கள்மீது அதிக அக்கறையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பதையே மீண்டும் இந்தச் சம்பவங்கள் நமக்கு உணர்த்திவருகின்றன. `நமக்கு நாமே பாதுகாவல்’ என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருப்போம்... வருமுன் காப்போம்.

நமக்குள்ளே
நமக்குள்ளே