சினிமா
தொடர்கள்
Published:Updated:

வாழ்த்தி வரவேற்கிறது விகடன்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

அறுதிப் பெரும்பான்மை பெற்றுத் தமிழக முதல்வராக முதல்முறையாகப் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி வரவேற்கிறது விகடன். சென்னை மாநகர மேயராகவும் அமைச்சராகவும் துணை முதல்வராகவும் இருந்து தனது நிர்வாகத் திறமையை நிரூபித்தவர் அவர். அந்த அனுபவங்கள் அவருக்கு முதல்வர் பதவியில் திறம்படச் செயல்படுவதற்குக் கைகொடுக்கும்.

‘எத்தகைய கனவுகள் கொண்டதாகத் தமிழகம் அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தப்போகும் ஆட்சி இது’ என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஐந்நூறுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகள், அடுத்த பத்தாண்டுக்கான செயல் திட்டங்கள் என தி.மு.க தன் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த பல திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான வாய்ப்பைத் தமிழக மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.

அதேநேரத்தில், ‘தி.மு.க தனக்கு அளிக்கப்பட்ட மக்கள் தீர்ப்பைச் சரியாகச் செயல்படுத்துகிறதா’ என்பதைக் கண்காணிக்கும் வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்படும் பொறுப்பையும் அ.தி.மு.க-வுக்கு வழங்கியிருக்கிறார்கள். தமிழக மக்களின் நலனில் அக்கறை கொண்டு ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

தமிழகத்தின் நிதிநிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது; கடன் சுமையும் கழுத்தை நெறிக்கிறது. மக்கள் நலத்திட்டங்களைக் குறைக்காமல் இந்த இரண்டையும் சமாளிக்க வேண்டிய கடமை புதிய அரசுக்கு இருக்கிறது. வருமானத்துக்கான வழிகளை உருவாக்குவதே, நிதி நிலையைச் சரிசெய்வதற்கு உதவும்.

தலையங்கம்
தலையங்கம்

எத்தனையோ பிரச்னைகளுக்கு மத்தியிலும் தமிழகம் அதிக தொழில் முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாகவே தொடர்ந்து திகழ்கிறது. கொரோனாத் தொற்றால் பொருளாதாரமே முடங்கிய நேரத்திலும் தமிழகத்துக்குத் தொழில் முதலீடுகள் கணிசமாக வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த நிலை தொடர வேண்டும். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும், தொழில் நடத்துவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதிலும் புதிய அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இது மிக முக்கியம்.

புதிய அரசுகள் பொறுப்பேற்கும்போது அதிகாரிகள் மட்டத்தில் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்வது வாடிக்கை. இப்போதோ தமிழகம் கொரோனாப் பெருந்தொற்றின் உச்சத்தைச் சந்தித்துவருகிறது. பல்வேறு துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து, நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிகளைச் செயல்படுத்தவும் கண்காணிக்கவும் முந்தைய அரசு ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்துள்ளது. அதில் பெரிதாகக் குழப்பமோ, மாற்றமோ செய்யாமல், அதை மேம்படுத்துவதற்கான வழிகளை மட்டும் புதிய அரசு செய்ய வேண்டும். இந்த நோய் அச்சத்திலிருந்து தமிழக மக்களை மீட்பதில் எந்த சுணக்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது. அதையே புதிய அரசு தன் முதல் கடமையாக உறுதியேற்க வேண்டும்.