நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

இதுவே கடைசி வங்கியாக இருக்கட்டும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

ங்கி வரலாற்றில் தமிழகத்துக்கு என்றும் தனி இடம் உண்டு. நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் தொடங்கப்பட்டு இன்றும் சிறப்பாக நடந்துவரும் வங்கிகள் பல உண்டு. ஆனால், 94 ஆண்டு பழைமையான லட்சுமி விலாஸ் வங்கி தற்போது ஆர்.பி.ஐ.யின் செயல்பாட்டு முடக்கநிலையை (Moratorium) அடையும் அளவுக்கு மோசமாகியுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் மிகச் சிறப்பான வளர்ச்சி கண்டுவந்த லட்சுமி விலாஸ் வங்கி, அதன் பிறகு மெல்ல மெல்லத் தடம்புரள ஆரம்பித்தது. இந்த வங்கியையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல நிறுவனங்கள் முயற்சி செய்தன. இந்தியா புல்ஸ் ஹவுசிங் நிறுவனம் இந்த வங்கியின் நிர்வாகத்தைப் பிடிக்க நினைத்தபோது, ஆர்.பி.ஐ அதற்கு அனுமதி தரவில்லை. ஆனால், வங்கி நிர்வாகத்தில் எப்படியோ நுழைந்த சில ‘கறுப்பாடு’கள், இந்த வங்கியில் டெபாசிட் ஆகியிருந்த பணத்தை யார் யாருக்கோ கடனாகக் கொடுக்க, 2017-ல் 2.8 சதவிகிதமாக இருந்த இந்த வங்கியின் வாராக் கடன், 2019-ல் 15.3 சதவிகிதமாகவும், 2020-ல் 25.4 சதவிகிதமாகவும் உயர்ந்து, இன்று செயல்பாட்டு முடக்கநிலையை எட்ட முக்கியமான காரணம்.

கொரோனா வருவதற்கு முன்பே இந்த வங்கியில் பிரச்னை என்பதை அறிந்த டெபாசிட்தாரர்கள், இந்த வங்கியிலிருந்து பணத்தை எடுக்கத் தொடங்கினார்கள். கடந்த சில ஆண்டுகளில் சுமார் 10,000 கோடி ரூபாய் டெபாசிட் பணம் திரும்ப எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏறக்குறைய 20 லட்சம் டெபாசிட்தாரர்கள் ரூ.20,000 கோடி டெபாசிட் பணத்தை இந்த வங்கியிலேயே தொடர்ந்து வைத்திருக்கின்றனர். இந்த டெபாசிட் பணத்துக்கு பாதிப்பு எதுவும் இல்லை என ஆர்.பி.ஐ தரப்பிலிருந்து சொல்லப்பட்டு இருப்பது சற்று ஆறுதலான விஷயம்.

என்றாலும் இந்த வங்கியை நம் நாட்டில் இருக்கும் ஏதோ ஒரு பொதுத்துறை வங்கியுடன் இணைக்காமல், டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் சிங்கப்பூர் (DBS) வங்கியின் இந்தியப் பிரிவுடன் இணைக்க ஆர்.பி.ஐ யோசித்து வருவது ஆச்சர்யம் அளிப்பதாக இருக்கிறது. ‘லட்சுமி விலாஸ் வங்கியை வாங்குகிற அளவுக்கு இந்தியாவில் எந்த வங்கியும் இல்லை’ என்கிற முடிவுக்கு ஆர்.பி.ஐ வந்துவிட்டதா அல்லது ‘சிங்கப்பூர் வங்கியால் மட்டும்தான் லட்சுமி விலாஸ் வங்கியை சிறப்பாக நடத்த முடியும்’ என்று நினைக்கிறதா? நாட்டு மக்களுக்கு இதற்கான விளக்கத்தை ஆர்.பி.ஐ அளித்தே ஆக வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மக்கள் தங்கள் பணத்தை பத்திரமாக வைத்திருக்க உதவும் வங்கிகள் மிகச் சரியாகச் செயல்படத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஆர்.பி.ஐ எடுத்து, வங்கிகள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையானது எள்ளளவும் குறையாமல் காக்க வேண்டும். ஆர்.பி.ஐ-யின் செயல்பாட்டு முடக்கநிலையை அடையும் கடைசி வங்கியாக லட்சுமி விலாஸ் வங்கி இருக்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு!

- ஆசிரியர்