நடப்பு
Published:Updated:

தங்கத்தைத் தாண்டிச் செல்வோம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

ஹலோ வாசகர்களே..!

டந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தங்கத்தின் தேவை நம் நாட்டில் மிகக் குறைவாக இருப்பதாக வேர்ல்டு கோல்டு கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 496 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது, இந்த ஆண்டில் வெறும் 252 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தங்கம் விலையும் வெங்காயத்தின் விலையும் நமக்குக் கண்ணீரை வரவழைப்பதாகவே இருக்கின்றன. கடந்த ஆகஸ்ட்டில் சென்னையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 43,300-க்குமேல் சென்றது; தற்போது ரூ.37,900 என்ற அளவில் விற்பனை ஆகிவருகிறது. ரூ.25,000 என்ற அளவில் தங்கம் வாங்கிப் பழகிய நம்மவர்கள் இது அதிகமான விலைதான் என்று நினைப்பதால், மிக மிக அவசியம் என்று நினைப்பவர்கள் மட்டுமே இப்போது தங்கம் வாங்குகிறார்கள். மற்றவர்கள், விலை எப்போது குறையும் என்று காத்துக் கிடக்கிறார்கள்.

ஆபரணம் அணிந்து அழகு பார்ப்பது, சமூக அந்தஸ்து என்பதுடன் அதிக மதிப்பு கொண்ட சிறிய சொத்தாக மாற்றுவது, ஆபத்தில் உதவுவது எனப் பல செளகர்யங்கள் தங்கத்தில் உண்டு என்றாலும், இந்த அம்சங்களைத் தாண்டி அதன்மூலம் பெரிய வருமானம் எதுவும் கிடைப்பதில்லை என்பதற்கு முதலீட்டு நிபுணர்கள் எத்தனையோ புள்ளிவிவரங்களை அளிக்கிறார்கள். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்ததைவிட, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து அதிகம் சரிந்ததே நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்ததற்கு முக்கியக் காரணம் என்பதை நம் மக்கள் புரிந்துகொண்டால், தங்கத்தின் மீது அதிக ஆர்வம் காட்டுவது குறையும்.

இதற்காகத் தங்கம் வாங்குவதே கூடாது என்றில்லை. நம் தேவைக்கு சிலபல பவுன் தங்கத்தை வாங்கிவிட்டு, மீதமுள்ள பணத்தை வேறு முதலீடுகளில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்வதன்மூலம் கூடுதலான வருமானத்தை நம்மால் பெற முடியும். உலகில் ஆசிய நாடுகளில் மட்டும்தான், அதிலும் இந்தியாவில்தான், கிடைக்கும் பணம் அத்தனையும் தங்கத்திலும் நிலத்திலும் போடும் வழக்கம் உள்ளது. மேற்குலகத்தினர் ஓரளவுக்குமேல் தங்கத்தில் பணம் போடுவதே இல்லை. தங்கத்தைவிட பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் என வேறு முதலீடுகளையே அவர்கள் அதிகம் நாடுகின்றனர். இது நம் கலாசாரம் தொடர்பான விஷயமாக இருந்தாலும் எல்லாமே மாறிவருகிற இந்தக் காலத்தில் பழைய விஷயங்களைக் கொஞ்சம்கூட மாற்றாமல் அப்படியே பின்பற்ற வேண்டுமா என்பதே நம் கேள்வி.

கொரோனா தாக்கம், உலக நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் சூழலால் தங்கம் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை என்கிறபோது, ‘வாங்கினால் தங்கம் மட்டும்தான் வாங்குவேன்’ என்றிருப்பதைவிட, வேறு முதலீடுகளிலும் உள்ள நல்ல விஷயங்களை விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து, அதை நோக்கிச் செல்வதில் தவறில்லை. நாம் இனியாவது தங்கத்தைத் தாண்டி சிந்திக்கத் தொடங்குவோம்!

- ஆசிரியர்