சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

அன்பார்ந்த வாசகர்களே!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

வணக்கம்.

விகடன் தீபாவளி மலருக்கென்று தனித்துவமான ஓர் அடையாளம் உண்டு. அரிய ஆன்மிகத் தகவல்கள், படித்து வியக்கவேண்டிய பாரம்பர்யப் பெருமைகள், வேறெங்கும் காணக்கிடைக்காத ஓவியங்கள் - புகைப்படங்கள், தெரிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுத் தகவல்கள், இலக்கியப் பக்கங்கள், பயணக் கட்டுரைகள், திரைத்துறை ஆளுமைகள் குறித்த செய்திகள் என எல்லாமே இதில் இடம்பெற்றிருக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கும். அதற்குக் கொஞ்சமும் குறைவைக்காமல், உங்கள் ஆவலைப் பூர்த்திசெய்யும் விதமாக உங்கள் கைகளில் தவழ்கிறது இந்த ஆண்டு விகடன் தீபாவளி மலர்.

அன்பார்ந்த வாசகர்களே!

ஓவியர்கள் எஸ்.ராஜம், சில்பி, நடிகர் எஸ்.வி.ரங்காராவ் மூவரும் நூற்றாண்டு காணும் கலைஞர்கள்; கொண்டாடப்பட வேண்டியவர்கள். இந்த மூவரைப் பற்றிய நெகிழ்ச்சிப் பதிவுகள், இந்த ஆண்டு விகடன் தீபாவளி மலரின் தனிச்சிறப்பு. எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனின் அத்திவரதர் குறித்த புராணச் சிறுகதை, `தென்னகத்துக் காசி’ என்று போற்றப்படும், விசுவநாதர் அருள்பாலிக்கும் தென்காசித் திருத்தலம் குறித்த பதிவு, அருளுரைகளோடுகூடிய மகான்களின் அற்புதமான ஓவியங்கள்... இவையெல்லாம் இந்த மலருக்குப் பெருமை சேர்க்கும் ஆன்மிகப் பக்கங்கள்.

`தமிழர் நாகரிகம் மிக உயர்ந்தது’ என்பதை உலகறியச்செய்துகொண்டிருக்கின்றன தொல்லியல் ஆய்வுகள். கீழடி மட்டுமல்லாமல் அழகன்குளம், கொடுமணல், பட்டரைப்பெரும்புதூர், ஆதிச்சநல்லூர், பொருந்தல் ஆகிய இடங்களில் நடந்த ஆய்வுகள், கிடைத்த அரிய பொருள்கள் பற்றி விவரிக்கும் கட்டுரை இந்த மலரை அலங்கரித்திருக்கிறது. இலக்கிய ஆளுமைகள் எஸ்.ராமகிருஷ்ணன், மகுடேசுவரன், சுகுமாரன் ஆகியோரின் நிறைவான கட்டுரைகள்; 50 ஆண்டுகளைக் கடந்து எழுத்துலகில் வலம்வரும் எழுத்தாளர் ராஜேஷ்குமார், வண்ணநிலவன், இரா.முருகவேள், பாக்கியம் சங்கர் அளித்திருக்கும் பிரத்யேகப் பேட்டிகள்; இந்தியாவில் கிரிக்கெட் வேரூன்றி, விரிந்து வளர்ந்த வரலாற்றை விவரிக்கும் எழுத்தாளர் முகிலின் ஆவணக் கட்டுரை ஆகியவையும் உங்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கின்றன.

அமிர்தசரஸ், மன்றோ தீவு, லடாக், வெள்ளிங்கிரி, ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டி குறித்த கட்டுரைகள் அவற்றை நேரில் பார்த்த உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தும். ஐடி வேலையை உதறித்தள்ளிவிட்டு, பாரம்பர்ய நெசவுத் தொழிலுக்குத் திரும்பியவரின் வாழ்க்கை; இருளர் சமூகத்திலிருந்து முனைவர் பட்டம் வாங்கிய முதல் பெண்; கழுத்தைப்புலி, மயில், புலிகளுக்கெல்லாம் சிகிச்சையளிக்கும் வனக் காப்பகத்தில் பணியாற்றும் மருத்துவர்; யானைகளை லாரியில் ஏற்றிச் செல்லும் சவாலான வேலையைச் செய்யும் ஓட்டுநர் ஆறுச்சாமி போன்ற அரிய மனிதர்களின் வாழ்க்கை இம்மலரில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், சினிமா பிரபலங்களின் பேட்டிகள், சிறுகதைகள், கவிதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் என ஒரு பெரிய தீபாவளி விருந்தே உங்களுக்காகக் காத்திருக்கிறது. ஆண்டுதோறும் விகடன் தீபாவளி மலருக்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவு மகத்தானது. இந்த மலரில் இடம்பெற்றிருக்கும் அத்தனை பதிவுகளையும் படித்து மகிழுங்கள். தீபாவளித் திருநாளில் மங்கலம் பொலியட்டும்; மகிழ்ச்சி பொங்கட்டும்!

அன்புடன்,

ஆசிரியர்