
தலையங்கம்
பாதுகாப்பு, புதிய அம்சங்கள், புது டிசைன்கள் ஆகியவற்றுக்குப் பஞ்சமே இல்லாமல் இந்த ஆண்டு பல புதிய கார்களும் பைக்குகளும் ஸ்கூட்டர்களும் அறிமுகமாகின. எதிர்காலம் என்பது மின்சார வாகனங்கள்தான் என்று முடிவாகிவிட்ட நிலையில்... பல முன்னணி கார் கம்பெனிகள் EV கார்களை அறிமுகப்படுத்தின. இதில் Born Electric என்ற முத்திரையுடன், சில கம்பெனிகள் கார்களை உற்பத்தி செய்கின்றன. அதாவது IC இன்ஜின் கொண்ட கார்களை EV கார்களாக மாற்றாமல், உருவாக்கும்போதே மின்சார கார்களாக உருவாக்கின.
இந்த ஆண்டும் மஹிந்திரா, வேகம் குறையாமல் ஸ்கார்ப்பியோ N, ஸ்கார்ப்பியோ க்ளாஸிக் என்று வாகனங்களை விற்பனைக்கு இறக்கியது. இந்தக் கார்களுக்கு முன்பதிவுகள் நடந்த வேகம் பிரமிப்பூட்டுவதாக இருந்தது.
குறைந்த விலை கார்களுக்குப் பெயரெடுத்த மாருதி சுஸூகியோ ஹைபிரிட் கார்கள் ரூட் எடுத்து அதில் ஸ்மார்ட் ஹைபிரிட், ஸ்ட்ராங் ஹைபிரிட் என்று டொயோட்டா உடன் சேர்ந்து புதுப் புது கார்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
கார் கம்பெனிகளுக்குச் சற்றும் சளைக்காமல் டிவிஎஸ், ராயல் என்ஃபீல்டு, ஹீரோ மோட்டோ கார்ப், ஹோண்டா என்று பல பைக் தயாரிப்பு கம்பெனிகளும் இந்த ஆண்டு கூடுதல் சுறுசுறுப்போடு செயல்பட்டு, பல புதிய கார் மற்றும் பைக்குகளைக் களம் இறங்கினார்கள். அதிலும், ஹீரோ குழுமத்தில் இருந்து ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹீரோ எலெக்ட்ரிக் என்று இரு பிரிவுகளில் இருந்தும் புது மின்சார வாகனங்கள் அறிமுகமாகின. ஓலா, ஏத்தர் போன்று EV வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்யும் கம்பெனிகள் அறிமுகப்படுத்திய வாகனங்கள், வாடிக்கையாளர்களின் கவனம் ஈர்த்தன.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சிறந்த கார், பைக் ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பது நமது தேர்வுக் குழுவுக்குப் பெருத்த சவாலாக இருந்தது. இருப்பினும் நீங்கள் வழங்கிய வழிகாட்டல்கள் இந்தச் சவாலைச் சற்றே எளிதாக்கியது. நன்றி.
- ஆசிரியர்