கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

அன்பு வணக்கம்!

நம்முடைய வாசகர்களின் வட்டத்தில் கணிசமானவர்கள் கல்லூரி மாணவர்கள். அவர்களில் பலருக்கும் ஆட்டோமொபைல் துறையில் வேலைக்குச் சேரவேண்டும் என்பதுதான் கனவு; லட்சியம்! ஆட்டோமொபைல் துறையில் வேலை இல்லாவிட்டாலும், அது சார்ந்த துறைகளில் வேலை கிடைத்தாலும் அவர்கள் மகிழ்வார்கள். அவர்கள் தங்கள் லட்சியத்தை அடைய வழிகாட்ட, `வேலைக்கு வித்தைகள் தேவை’ என்ற புதிய தொடர், இந்த இதழில் இருந்து ஆரம்பமாகிறது. வித்தைகள் அதாவது தொழில்சார்ந்த திறன்கள் (SKILLS) ஒரு மாணவருக்குக் கிடைத்துவிட்டால், வேலைக்காக மாணவர்கள் எந்த கம்பெனியையும் தேடிச் செல்லத் தேவையில்லை. கம்பெனிகள் அவர்களைத் தேடி வரும். இதுபோன்ற செறிவான விஷயங்கள் பல சமயங்களில் கடினமான மொழிநடையில் அமைந்துவிடுவதால்... அது பெரும்பாலானவர்களை விட்டு சற்று விலகியே நின்றுவிடும். இந்தக் கட்டுரைத் தொடர் அப்படி அமைந்துவிடக்கூடாது என்பதால், இதை பரத் - பவன் போன்ற கதாபாத்திரங்களைக் கொண்டு சுவாரஸ்யமான மொழிநடையில் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள் இரண்டு பேர்.

தங்களின் பல்லாண்டு கால அனுபவங்களை வாசகர்களோடும் மாணவர்களோடும் பகிர்ந்துகொள்ள முன்வந்திருக்கும் மஹிந்திராவின் துணைத் தலைவரான ஷங்கர் வேணுகோபால் மற்றும் இன்ஃபோசிஸின் முதன்மை ஆலோசகர் எஸ்.ராமச்சந்திரன் ஆகிய இருவரும் இந்தத் தொடருக்காக அளிக்கும் முனைப்பும் நேரமும் மிகவும் அதிகம்.

அவர்களின் இந்தத் தொடரை ஆங்கிலத்தில் படிக்க விரும்பினால், அது விகடன் இணையதளத்தில் சற்று விரிவாகவே இடம்பெற்றிருக்கிறது. நேரமும் வாய்ப்பும் உள்ளவர்கள் அதைப் படிப்பது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல; பள்ளி மாணவர்களும் நம் வாசகர் வட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு என பிரத்தியேகமாக டிசைன் பற்றிய 5 நாள் பயிலரங்கத்துக்கு மோட்டார் விகடன் இந்த மாதம் ஏற்பாடு செய்திருப்பதைப் பற்றி, சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தோம். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அதேபோல கடந்த மாத இறுதியில் மோட்டார் விகடன் ஏற்பாடு செய்திருந்த 2 நாள் ஆன்லைன் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயிலரங்கத்திலும் ரேஸ் ஆர்வலர்கள் உற்சாகத்தோடு கலந்துகொண்டதோடு... `அடுத்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயிலரங்கம் எப்போது?’ என்று கேட்டுத் துளைத்து எடுத்துவிட்டார்கள்.

உங்களது இப்படிப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் பதிலாக, கூடிய விரைவிலேயே அறிவிப்புகள் வரும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது மோட்டார் விகடன்.

அன்புடன்

ஆசிரியர்