
தலையங்கம்
இடைவிடாத சைரன் சத்தங்களும் வரிசைகட்டி நின்ற ஆம்புலன்ஸ்களுமாகப் பெருந்தொற்றின் பிடியில் தவித்த சென்னை, மெல்ல விடுபட்டுவருவது நம்பிக்கை தருகிறது. இந்த நிலைக்குக் காரணம், அரசின் துடிப்பான செயல்பாடுகளும், லாக்டௌன் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தடுப்புப் பணிகளும், மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வும், தடுப்பூசி போடும் விகிதம் உயர்ந்ததும்தான்.
சென்னையில் பெருந்தொற்றுப் பரவல் தணிந்திருக்கும் சூழலில், தமிழகத்தின் பிற பகுதிகளில் எண்ணிக்கை வேகமெடுப்பது கவலையளிக்கிறது. குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் தொற்று வேகம் கட்டுப்பாட்டை மீறியிருக்கிறது. திருச்சி, மதுரை, கன்னியாகுமரி போன்ற பகுதிகளும் தப்பவில்லை. கொரோனாப் பரிசோதனை முடிவுகள் கிடைக்கத் தாமதமாவது, நிலைமையை இன்னும் கவலைக்குரியதாக ஆக்குகிறது.
கிராமங்களில் கொரோனாத் தொற்று பேரழிவை ஏற்படுத்திய வரலாற்றைப் பல மாநிலங்களில் பார்த்தோம். அந்த நிலை தமிழகத்துக்கு ஏற்படக் கூடாது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற விஷயங்களில் இன்னமும் சிறுநகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பெரும் அலட்சியம் நிலவுகிறது. கொரோனா அறிகுறிகளையும் மக்கள் உணர்ந்து உரிய நேரத்தில் பரிசோதனைக்கு வருவதில்லை. தயக்கமும் அச்சமும் பலரை வாசல் தாண்டி வரவிடாமல் செய்கிறது. மருத்துவமனைக்குச் செல்வதையே ஆபத்தான விஷயமாகக் கருதும் மனநிலை ஆபத்தானது. நிலைமை தீவிரமான பிறகே பலர் மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். சமூகத்தின் பங்களிப்பு இல்லாமல் இந்தத் தொற்றிலிருந்து நாம் விடுபட முடியாது. இதை நாம் அனைவரும் உணர வேண்டும்; அரசு உணர்த்த வேண்டும்.
தொழில் வளம் நிறைந்த மாவட்டங்களில், நோய்த்தொற்று பரவ அதுவே ஒரு காரணமாக இருந்தது. மக்களுக்கு எல்லா சேவைகளும் இயல்பாகக் கிடைக்க, தொழிற்சாலைகள் இயங்க வேண்டியது அவசியம்தான். என்றாலும், அவை நோய்த்தொற்றைப் பரப்பும் மையங்களாக மாறிவிடக்கூடாது. தொழில் நிறுவனங்கள் கொரோனாப் பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதியாகப் பின்பற்ற வேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, தலைநகர் சென்னையில் இருக்கும் மருத்துவ வசதிகளில் சரிபாதியளவுக்குக்கூட பிற நகரங்களில் இல்லை. ஒரே நம்பிக்கையாக இருக்கும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் வட்டார அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். அங்கு ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க வேண்டும். தொற்றாளர்களை அந்தந்தப் பகுதிகளிலேயே தடுக்கும் விதமாக ஒவ்வொரு பகுதியிலும் தனிமைப்படுத்தல் முகாம்களையும் விரைவாக அமைக்கவேண்டும். நோய் கண்டறியும் பணியும் ஆரம்பநிலை சிகிச்சையும் கிராமங்களுக்குப் போக வேண்டும். ஊரடங்கு காலத்தை இந்த ஏற்பாடுகளைச் செய்வதற்கான காலமாக அரசு கருத வேண்டும்.

பொதுமுடக்கக் காலங்களில் சென்னை மக்களுக்கு வாகனங்கள் மூலம் அத்தியாவசிப் பொருள்கள் கிடைக்க வழிவகை செய்திருக்கிறது தமிழக அரசு. ஆனால் இந்த ஏற்பாடு கிராமப்புறங்களை எட்டவில்லை. வழக்கம்போலவே மக்கள் இந்தப் பொதுமுடக்கத்தை சிரமத்துடனே கடந்துகொண்டிருக்கிறார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் காட்டிய அக்கறையைப் பிற பகுதிகளின் மீதும் தமிழக அரசு காட்டவேண்டும்.
பெருநகரங்கள் கொரோனாப் பிடியிலிருந்து மீள்வது மட்டுமே நாம் ஆபத்தைக் கடந்துவிட்டோம் என்பதை உணர்த்தும் அறிகுறி அல்ல. கிராமங்களும் அந்த நிலையை அடைய வேண்டும். முறையான விழிப்புணர்வும் தக்க நேரத்தில் தரும் சிகிச்சையும் தடுப்பூசிகளும் மட்டுமே அதற்கு உதவும். கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்!