நாட்டு நடப்பு
Published:Updated:

மரியாதை!

மரியாதை!
பிரீமியம் ஸ்டோரி
News
மரியாதை!

தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘‘கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள்.’’

- இப்படித் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் சட்டசபையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டது. கடன் தள்ளுபடி செய்யப்படும் விவரங்களை, அந்தந்தக் கூட்டுறவுச் சங்கங்கள் அறிவித்தும் வருகின்றன.

பல்வேறு இன்னல்களுக்கு இடையில்தான் அத்தனை விவசாயிகளுமே பயிர்த்தொழில் செய்து வருகின்றனர். அப்படியிருக்க, அனைத்து விவசாயிகளுமே பலன்பெறும் வகையில்தானே இருந்திருக்க வேண்டும் முதல்வரின் கடன் தள்ளுபடி அறிவிப்பு.

தேசிய வங்கிகளில் பயிர்க்கடன் வாங்குபவர்களும் விவசாயிகள்தானே!

சொல்லப்போனால், கடந்த சில ஆண்டுகளாகவே கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்குப் பயிர்க்கடன்களை வழங்குவதில்லை. பெரும்பாலும் அரசியல்வாதிகளும் செல்வாக்கு மிக்கவர்களும்தான் கடன்பெற முடிகிறது. உண்மையான விவசாயிகளை விரல்விட்டே எண்ணிவிடலாம். இதனால்தான் தமிழ்நாட்டில் பெரும்பாலான விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க்கடன் வாங்கி விவசாயம் செய்து வருகிறார்கள்.

உண்மையாகவே, விவசாயிகள் மீது தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

‘அதெப்படி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனவே’ என்று காரணம் சொல்லித் தப்பிக்கப் பார்க்க வேண்டாம்.

‘‘தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யுங்கள்; அந்தத் தொகையை மாநில அரசு கொடுக்கும்’’ என்று சொல்லிவிட்டால், மத்திய அரசுக்கு என்ன கசக்கவா போகிறது?

பொதுவாக, ஒரு விவசாயியின் குடும்பத்துக்கு அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய்தான் பயிர்க்கடன் கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், கூட்டுறவு வங்கியின் நிர்வாகக் குழுக்களில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சியினர், தங்களின் குடும்ப உறுப்பினர், சொந்த பந்தம்... என்று எல்லோர் பெயரிலும் பயிர்க்கடன் வாங்கி, விவசாயிகளுக்குச் சேர வேண்டிய பலனைக் கபளீகரம் செய்துள்ளார்கள்.

எனவே கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி என எந்த வங்கியில் பயிர்க்கடன் பெறப்பட்டிருந்தாலும், அவர்கள் உள்ளபடியே விவசாயிகள்தானா என்பதையும் நூறு சதவிகிதம் உறுதிப்படுத்திக் கொள்வதுதான் தள்ளுபடிக்கே மரியாதை!

மரியாதை!