சினிமா
தொடர்கள்
Published:Updated:

நீரைக் காப்பதே நீதி!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது இயற்கையின் மீதான வன்முறை மட்டுமல்ல, அது மனிதர்கள்மீதான வன்முறையிலும் முடிகிறது என்பதற்கு ரத்த சாட்சிகள் ஆகியிருக்கிறார்கள் இருவர்.

ரூர் மாவட்டம் குளித்தலைக்கு அருகே உள்ள கிராமம் முதலைப்பட்டி. இங்குள்ள 196 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கின்றனர் ஆக்கிரமிப்பாளர்கள். எஞ்சியிருந்த 29 ஏக்கரையும் விவசாயம் செய்கிறோம் என்ற போர்வையில் சிலர் ஆக்கிரமித்தனர். கண்முன்னே இப்படியொரு அநியாயம் நடப்பதைப் பலரும் பார்த்தார்கள். ஆனால் அதைத் தட்டிக்கேட்க முன் வந்தது அந்த ஊரைச் சேர்ந்த கோயில் பூசாரியான வீரமலை மட்டுமே. வழக்கறிஞர் ஒருவர் மூலமாக, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த அநீதிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார். பொதுநல வழக்கு தொடர்ந்த அந்த வழக்கறிஞர் மற்றும் வீரமலை ஆகியோரின் தொடர் முயற்சியால், ஏரியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால், அதிகாரிகள் இந்த உத்தரவைக் கண்டுகொள்ளவில்லை. மனம் தளராமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் அந்த வழக்கறிஞர் தொடர்ந்தார்.

இதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் சிலர், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஏரியை ஆய்வு செய்ய வந்தனர். அப்போது அவர்களுக்கு வீரமலையும் அவர் மகன் நல்லதம்பியும் ஆக்கிரமிப்பு நடைபெற்ற ஏரிப்பகுதிகளை அடையாளம் காட்டியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் பூசாரி வீரமலையையும் அவரின் மகனையும் வெட்டிக் கொன்றதோடு பூசாரியின் பேரனையும் கொலை செய்ய முயன்றிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி ஆக்கிரமிப்புகளைக் கண்டுகொள்ளாத அதிகாரிகளைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள்.

இதேபோல் பாலாற்றில் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பைத் தடுக்கப் போராடிய தணிகாசலம் என்பவரும் 2014-ல் கொலை செய்யப்பட்டார். கொலைக்குத் தனிப்பட்ட பகைதான் காரணம் என்று கூறி, போலீஸார் மூடி மறைக்கப் பார்த்தனர். தணிகாசலத்தின் தியாகம் வீண்போகக்கூடாது என்று, அவருடன் படித்த கல்லூரி நண்பர்கள் ஐந்து ஆண்டுகளாக நடத்திய சட்டப்போராட்டம் இப்போது வெற்றி பெற்றிருக்கிறது. தணிகாசலத்தின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இருப்பது ஆக்கிரமிப்பாளர்கள் மட்டுமல்ல, அவர்களுக்குத் துணைபோகும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அரசும்தான். இயற்கையைச் சீர்குலைக்கும் இத்தகையவர்களைத் தண்டிக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். நீர்நிலைகளைக் காக்கப் போராடிய பூசாரி வீரமலை, தணிகாசலம் ஆகியோருக்குத் தமிழ்ச்சமூகம் நன்றிக்கடன்பட்டிருக்கிறது. நீர்நிலைகள்மீதான ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தி, இயற்கையையும் நம்மையும் காக்க வேண்டியதே இந்தப் போராளிகளுக்கு நாம் செலுத்தும் மரியாதை!