Published:Updated:

பழையன கழிதலும்...

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

36 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலும் அளித்துள்ளது. வழக்கம்போல் முழுமையான ஆதரவு, வலிமையான எதிர்ப்பு என்று இருதரப்பு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

‘இப்போதுள்ள கல்விமுறை வெறுமனே குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்விமுறை’, ‘பாடங்களைப் புரிந்துகொள்ளாமல் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறை, மாணவர்களை பிராய்லர் கோழிகளாக மாற்றிவிட்டது’ என்று பலகாலமாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கான தீர்வுகளை இந்தப் புதிய கல்விக்கொள்கை முன்வைத்திருப்பது நிச்சயம் வரவேற்கத்தக்கது.

‘ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியே பயிற்றுமொழி’ என்பதும் உலகின் பல கல்வியாளர்களும் வலியுறுத்தும் அம்சம் என்ற வகையில் வரவேற்கத்தக்கதே. ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2-வில் ஒரு பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்துவிட்டதற்காகவே விருப்பமில்லாமலே பல பாடங்களைப் படிக்க வேண்டிய இன்றைய நிலைமைக்கு மாறாக, மாணவர்கள் பாடப்பிரிவுகளைத் தாண்டி விருப்பப்பட்ட பாடங்களைப் படிக்கலாம் என்பது கற்றலில் ஆர்வத்தை அதிகரிக்கும். தொலைநோக்கில் புதிய கல்விக்கொள்கை நல்ல பலன்களை அளிக்கும் என்பதை உணரமுடிகிறது. அதேவேளையில், அத்திட்டத்தின் நடைமுறைகள் குறித்து எழும் சந்தேகங்களுக்குத் தெளிவான விளக்கமும் தேவைப்படுகிறது.

பெருநகர அதிநவீனப் பள்ளியும் கிராமப்புற அரசுப்பள்ளியும் புதிய கல்விக்கொள்கையின்படி, ஒரே கற்றல் தரத்துடன் எப்படிச் செயல்படும் என்பது மிகப்பெரும் கவலையாக இருக்கிறது. மலைக்கும் மடுவுக்குமான அந்தத் தரவேறுபாடுகள் எப்படி சரிப்படுத்தப்படும் என்பது குறித்த ஆக்கபூர்வமான திட்டம் தேவை. மூன்றாம் வகுப்பு முதலே பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் இடைநிற்றலை எக்காரணம் கொண்டும் அதிகரித்துவிடக் கூடாது என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். தொழிற்கல்வி அவசியம் என்றபோதும், தொழில்மீதான ஆர்வம், பள்ளிக்கல்வியை உதாசினப்படுத்தும் வகையில் அமைந்துவிடக் கூடாது. மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும், கடைக்கோடி கிராமத்திலும் பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பு மாநில அரசு நிர்வாகத்திடமே இருக்கிறது. எனவே, `கல்வி தொடர்பான தங்கள் உரிமைகள் பறிபோய்விட்டது’ என்று மாநில அரசுகள் நினைத்துவிட இடம் கொடுக்காமல் பொறுப்புகளைப் பகிர்ந்தளித்து, திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

எந்த ஒரு திட்டமும் கொள்கையும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, பலனளிக்கும்போதுதான் அவை முழுமையடைகின்றன. புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்துமுன்னரே, செயல்வழிக்கற்றலைச் சொல்லித்தரும் அளவுக்கு ஆசிரியர்களின் திறன் மேம்படுத்துதல், தொழிற்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்ற பல முக்கியமான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

எந்த ஓர் உயரிய நோக்கமும் நடைமுறையில் தவறிழைத்துவிட்டால், விளைவு அந்த நோக்கத்துக்கே எதிராகப் போய்விடும் என்பதற்குப் பசுமைப்புரட்சி முதல் பணமதிப்பிழப்பு வரை ஏராளமான அனுபவங்கள் நம்முன் உள்ளன. எனவே இந்த தேசத்தின் எதிர்காலத்தையும் நாளைய தலைமுறையையும் தீர்மானிக்கப்போகும் புதிய கல்விக்கொள்கை, விமர்சனங்களையும் சந்தேகங்களையும் நிதானமாகப் பரிசீலித்து, நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும்படி அமல்படுத்தப்பட வேண்டும்!