லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே

சொந்தங்களை, நட்புகளைப் புதுப்பிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவோம்.

`உலகையே மிரட்டும் கொள்ளை நோயிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும் என்றால் 21 நாள்கள் வீட்டுக்குள்ளேயே இருங்கள்’ என்று அறிவுறுத்தியிருக்கிறார் பிரதமர்.

இதுவரை இதுபோன்றதொரு நோயையோ, பதற்றத்தையோ சந்தித்திராத நாம் உறைந்துபோயிருக்கிறோம். எனினும், இந்தக் கட்டாய விடுமுறை காலத்தை வீட்டுக்குள்ளேதான் நாம் செலவிட வேண்டும் என்பதால், அதை முழு நிறைவுடன் செய்வோமே...

இந்தச் சூழலில் குடும்பத்துடன் ‘குவாலிட்டி டைம்’ செலவிடுவோம். தாத்தா பாட்டியுடன் நாம் விளையாடிய தாயம், பல்லாங்குழி, பாண்டி போன்ற பாரம்பர்ய விளையாட்டுகளை இன்றைய குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவோம். எப்போதும் மொபைல், கம்ப்யூட்டர், வீடியோ கேம் என்றிருக்கும் சுட்டிகளை கதைகள் கேட்கப் பழக்குவோம். நிலாச்சோறு என்றால் என்னவென்று மொட்டைமாடியில் அறிமுகம் செய்வோம்.

நமக்குக் கிடைக்கும் இடைவெளியில் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் வாசிப்போம். மன நிம்மதிக்கு நல்ல இசை கேட்போம். பரபர வாழ்க்கையினூடே பேச மறந்துபோன உறவுகளுக்கும் நட்புகளுக்கும் தினம் ஒருவர் எனத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவோம். சொந்தங்களை, நட்புகளைப் புதுப்பிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவோம்.

பணியாட்களுக்குச் சம்பளத்துடன்கூடிய விடுமுறையைத் தந்திருக்கிறோம். ஆகவே, துணி துவைப்பது, சமையல், வீட்டுவேலை என அனைத்திலும் குழந்தைகளையும் ஈடுபடுத்துவோம். சமையலறைக்குள் இதுவரை நுழைந்திராத ஆண்களையும் `ஃபேமிலி குக்கிங்’ என்று பெயரில் இழுத்து வருவோம்!

பிறகு... பேப்பர் பேனாவைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது நீங்கள் செய்யாத செலவுகள் என்னென்ன என்று சிந்தித்து எழுதுங்கள். உணவு டெலிவரி, அடிக்கடி ஹோட்டல்களில் உணவு, டூர், மாலில் சுற்றுவது, தேவையற்ற உடைகளை வாங்கிக் குவிப்பது, கணக்கற்ற சினிமா என்று கடந்த மாத செலவுக் கணக்குடன் இந்த மாதம் நீங்கள் செய்ய முடியாத, செய்யாத செலவுகள் என்னென்ன என்று கணக்கு பார்த்து ஒப்பிடுங்கள். அளவுக்கு மீறி செய்யப்படும் இவை எல்லாமே `தேவையற்ற’ செலவுகள்தாம். நுகர்வுக் கலாசாரம் நம்மை எவ்வாறு செலவு செய்ய வைக்கிறது என்பது இப்போது விளங்கும். ‘மினிமலிஸ்டிக்’ என்பது எத்தனை இனிதான, எளிதான வாழ்க்கை என்பதும் புரியும்.

கடைகளில் பொறுமையாக வரிசையில் நின்று பொருள் வாங்குதல், கைகளைச் சுத்தமாக சோப் கொண்டு அவ்வப்போது தேய்த்துக் கழுவுதல் என்று பொறுமை, சுத்தம் போன்ற இதுவரை நாம் அதிகம் பின்பற்றாத ஒழுங்கை இந்த சில நாள்கள் நமக்குச் சொல்லித் தந்திருக்கின்றன. இன்றுவரை இயற்கை நம்மை உடல்நலத்துடன் நன்றாக வாழவைத்துக்கொண்டிருப்பது இல்லாதவர்களுக்கு உதவத்தான் என்றும் உணர்வோம். நம்பிக்கையும் அன்பும் இருந்தால் நாம் எதையும் கடக்கலாம். மீண்டு வருவோம்; இதுவும் கடந்து போகும்!

நமக்குள்ளே...