
தலையங்கம்
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பு முற்றாகப் புதைந்த கொடுமையும் இதுவரை 49 தமிழர்கள் உயிரிழந்திருக்கும் செய்தியும் நம்மைத் துயரத்தில் ஆழ்த்துகிறது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் அப்பர்பவானி, அவலாஞ்சி, கூடலூர் ஆகிய இடங்களில் கொட்டிவரும் பெருமழை மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய இயற்கைப் பேரிடர்களுக்கு, காடுகளை அழித்தல், மணல் கடத்தல், நீர்நிலைகளில் கட்டடங்களை எழுப்புதல் போன்ற சுற்றுச்சூழல் சீர்கேட்டை மேற்கொள்ளும் நம் செயல்களும் முக்கியமான காரணங்கள். தனிமனிதன் முதல் அரசாங்கம் வரை இத்தகைய சுற்றுச்சூழல் சீர்கேடுகளைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டால் இயற்கைப்பேரிடரைத் தவிர்க்க முடியும். இது ஒரு தொலைநோக்குப்பார்வையுள்ள நீண்டகாலச் செயற்பாடு.
ஆனால் உடனடியாக நம்மால் தடுக்க முடிந்தும் அலட்சியத்தால் தடுக்காமல் இருக்கும் செயற்கைப்பேரிடர்களும் பேரழிவை ஏற்படுத்துகின்றன என்பதற்கான உதாரணம்தான் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம். பெய்ரூட்டில் கடந்த ஆறு ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்த சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதை ஏதோ தூர தேசத்துச் செய்தி என்று நாம் கடந்துவிட முடியாது. உரிய ஆவணங்கள் இன்றி நம் சென்னைத் துறைமுகத்திற்கு வந்த இதே போன்ற 740 டன் அமோனியம் நைட்ரேட், மணலியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வைக்கப்பட்டிருக்கும் தகவல் இதற்குப் பின்தான் வெளியாகியிருக்கிறது. ஒருவேளை பெய்ரூட் சம்பவம் நிகழாவிட்டால் இப்படி அமோனியம் நைட்ரேட் சென்னையிலேயே டன் கணக்கில் இருப்பது நமக்குத் தெரியாமலே போயிருக்கும் என்பது நினைத்தாலே நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இதுபோல் வைக்கப்பட்டிருந்த 16,000 டன் அமோனியம் நைட்ரேட் மாயமாகியிருப்பதாகவும் மணலியில் 43 டன் அமோனியம் நைட்ரேட் மாயமானதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
அமோனியம் நைட்ரேட் வெடிக்கும் வாய்ப்புள்ள ரசாயனப் பொருள் என்று தெரிந்தும் ஐந்தாண்டுக்காலம் இதை அகற்றாமலே மணலியில் வைக்கப்பட்டிருப்பதற்குத் துறைமுக அதிகாரிகள் தொடங்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வரை நிலவும் அலட்சியம்தானே காரணம்! அமோனியம் நைட்ரேட் என்பது இப்போது நாம் அறிந்திருக்கும் ஆபத்தான ரசாயனப்பொருள் என்றால் இதுபோன்ற மற்ற ரசாயனப்பொருள்கள் நாட்டில் எங்கெங்கு இருக்கின்றன என்ற சந்தேகம் மக்களுக்கு வரத்தானே செய்யும்?
போபால் விஷவாயு, செர்னோபில் அணு உலை விபத்து என்று மனித அலட்சியத்தால் நிகழ்ந்த பேரழிவுகள் கடந்தகாலக் கசப்பான அனுபவங்களாக மிஞ்சியிருக்கின்றன. இனியும் அப்படியான செயற்கைப்பேரிடர்கள் நடக்காமல் தடுக்க வேண்டுமானால் நிர்வாகத்தின் சகல மட்டத்திலும் நிலவும் கூட்டு அலட்சியம் முற்றிலும் களையப்பட வேண்டும். பாதுகாப்பும் நம்பிக்கையும் மிக்க வாழ்க்கையை மக்களுக்கு உறுதிசெய்வதுதான் நல்ல நிர்வாகத்துக்கான கடமை. கூட்டு அலட்சியம் களைவோம்!