கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
Published:Updated:

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

நாடு, மாநிலம் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் தமிழ்நாட்டில் வசிப்பவர்களைப் போலவே, உலகின் பல பகுதிகளில் இருப்பவர்களும் மோட்டார் விகடன் நடத்தும் ஆன்லைன் பயிலரங்கங்களில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

கார் டிசைனிங்கின் நீட்சியாக இப்போது டிவிஎஸ் மோட்டார்ஸ் துணையுடன் டூவீலர் டிசைனிங் பற்றிய ஒரு பயிலரங்கத்தையும் நாம் நடத்தினோம். பல மொழி பேசுகிறவர்களும் கலந்து கொண்ட பயிலரங்கம் என்பதால், முன்கூட்டி அறிவித்தபடியே இது ஆங்கிலத்தில் நடைபெற்றது.

`மேலை நாட்டினரால் மட்டும்தான் இந்தத் துறையில் கோலோச்ச முடியும்’ என்கிற கருத்தியலை உடைத்தெறிய, ஜப்பானியர்கள் கையாளும் சூத்திரம் ஒன்றை அன்று பயிலரங்கத்தில் பங்கேற்றவர்கள் கற்றுக்கொண்டார்கள். அந்தச் சூத்திரத்தின் பெயர் இக்கிகாய் (IKIGAI).

டிவிஎஸ் மோட்டார்ஸின் டிசைன் துறை, இன்று முன்னணியில் இருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் IKIGAI. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால்... டிசைனிங் என்று மட்டுமல்ல, ஒருவரது வாழ்க்கையையே செம்மைப்படுத்தக் கூடியது IKIGAI. ‘`நான் ஏன் பிறந்தேன்?” என்ற கேள்விக்கான விடையைத் தேடச் சொல்வதுதான் ஜப்பானியர்களின் மூலாதர மந்திரமான இந்த இக்கிகாய்.

இந்த ஒரு கேள்விக்கான விடையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், மேலும் நான்கு கேள்விகளை நாம் கேட்க வேண்டும்.

1) நமக்கு என்ன வேலை செய்யப் பிடிக்கும்? 2) நமக்கு என்ன மாதிரி வேலைகளைச் செய்யத் தெரியும்? 3) என்ன மாதிரியான வேலைக்கு இன்று தேவை அதிகம்? 4) என்ன மாதிரி வேலையைச் செய்தால் அதிக பணம் கிடைக்கும்?

இக்கிகாய், கேள்விகளை இதோடு நிறுத்தவில்லை. இதில் ஒவ்வொரு கேள்வியும் மேலும் பல கேள்விகளை எழுப்புகின்றன. இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டால்... எந்தத் துறையில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யலாம். இதையே மேலும் சற்று ஆழமாக அணுகினால், ‘நான் ஏன் பிறந்தேன்’ என்ற கேள்விக்கேகூட விடை கண்டுவிடலாம்.

நல்ல வேலை அமைந்து எதிர்காலத்தை மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்ளும் நோக்கில் பயிலரங்கத்தில் கலந்து கொண்டவர்கள்.. வாழ்க்கையின் அர்த்தத்தையே போனஸாகப் பெற்றதில் மகிழ்ச்சி!

அன்புடன்

ஆசிரியர்