
இந்திய விண்வெளி வரலாற்றில் மற்றுமொரு மைல்கல், மகத்தான சாதனை ‘சந்திரயான் - 2'.
விக்ரம் என்கிற லேண்டரை நிலவில் தரையிறக்க முயன்று மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள் நம் விஞ்ஞானிகள். சந்திரயான் வெற்றி சாதாரணமானதல்ல, அதற்குப்பின்னால் நம் விஞ்ஞானிகளின் அசுர உழைப்பும் அர்ப்பணிப்பும் அடங்கியிருக்கின்றன.
சீனா, சமீபத்தில் நிலவுக்கு ஒரு விண்கலத்தை அனுப்பியது. அதற்கு அந்த நாடு செலவு செய்த தொகை 5,759 கோடி. ஆனால், சந்திரயான்-2 விண்கலத்தை ஏவும் திட்டத்துக்கு இஸ்ரோ செலவிட்ட தொகை வெறும் ரூ.978 கோடிதான். சந்திரயான் திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட முன்வந்த ரஷ்யா பாதியிலேயே விலகிக்கொண்டது. ஆனாலும் இஸ்ரோ பின்வாங்கவில்லை. முழுக்க முழுக்க தங்களின் திறமையாலும் ஆற்றலாலும் ஆர்வத்தாலும் நம் விஞ்ஞானிகள் சந்திரயானை உருவாக்கியதோடு, நிலவை நோக்கிய அதன் பயணத்துக்கான அத்தனை ஏற்பாடுகளையும் அவர்கள்தாம் செய்தார்கள். இந்தப் பயணத்துக்கான ஏற்பாட்டில் நாம் சாதித்ததே முதல் வெற்றி.
நம் முயற்சி முழுவெற்றியை எட்ட முடியவில்லை என்பது உண்மைதான். நிலவை நெருங்கும் 2.1 கிலோமீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டர், நம் தொடர்பிலிருந்து துண்டித்துக்கொண்டது. இவ்வளவு பாடுபட்டும் முழுவெற்றியை ஈட்ட முடியவில்லையே என்று இஸ்ரோ தலைவர் சிவன் உடைந்துபோய்க் கலங்கியதும், பிரதமர் மோடி அவரது தோளைத் தடவி ஆறுதல் கூறியதுமான காட்சி அனைவரையும் நெகிழவைத்த காட்சி. இந்தச் சறுக்கல், நம் அடுத்தடுத்த சாதனைகளுக்கான படிக்கல்.
நிலாவில் தண்ணீர் மூலக்கூறுகள் இருக்கின்றன என்பதை சந்திரயான்-1 வாயிலாக முதன்முதலாகக் கண்டறிந்து உலகத்துக்குப் பிரகடனப்படுத்தியது நம் விஞ்ஞானிகள்தான். இதுவரை யாருமே முயலாத, நிலாவின் தென் துருவத்துக்கு விண்கலத்தை அனுப்பியதும் நம் விஞ்ஞானிகள்தான். நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்துக்கு இது 50வது ஆண்டு. இதுவரை ஆர்யபட்டா தொடங்கி நூற்றுக்கும் மேற்பட்ட விண்கலங்களை ஏவியிருக்கிறோம். விக்ரம் லேண்டர் நம் தொடர்பிலிருந்து விலகிவிட்டாலும் அதன் இருப்பிடத்தை இரண்டே நாள்களில் கண்டுபிடித்திருக்கிறோம். சந்திரயான்-2 செலுத்தப்பட்டதன் நோக்கத்தை முழுமையாக அடைய இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயன்றுகொண்டிருக்கிறார்கள்.
பரிசோதனைகள் மட்டுமே விஞ்ஞானத்தின் அடிப்படை. வெற்றி தோல்வியைக் கணக்கில்கொண்டால், விஞ்ஞான வளர்ச்சி இல்லை. எத்தனையோ மகத்தான கண்டுபிடிப்புகளுக்கும் மகத்தான அறிவியல் கோட்பாடுகளுக்கும் பின்னால் பல சறுக்கல்கள், தோல்விகள் இருக்கின்றனதான். எல்லாவற்றையும் தாண்டித்தான் சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன.
நம் விஞ்ஞானிகளின் மீது நம்பிக்கை இருக்கிறது. நிலா இப்போதும் தொட்டுவிடும் தூரம்தான்!